உயிர் வளர்த்தேனே 15: தானியங்கள் தரும் நோயினின்று விடுதலை

By போப்பு

கேழ்வரகில் ஒரு புதுமை இனிப்பு செய்வோமா?

கேழ்வரகு மாவைச் சலித்து எடுத்துக்கொண்டு அதில் பனங்கருப்பட்டிப் பாகை ஊற்றித் தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொண்டு, இரண்டு விரல் பிடியளவு சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டுக் கலக்கி ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். மாவை உருண்டையாக்கி, `கலக் கலக்’ எனக் கடலை எண்ணெய் குமிழியிடும் கடாயில் போட்டு எடுத்தால், சிறிய கிரிக்கெட் பந்துபோல எம்பிவரும்.

சற்றே வெதுவெதுப்பாகச் சாப்பிட்டால், இதுதான் அமிர்தமென்று சத்தியம் செய்வீர்கள். அத்தனை சுவை. நெய்யும் சர்க்கரைப் பாகும் விட்டுச் செய்கிற மற்ற இனிப்பு வகைகளைக் காட்டிலும், செய்முறையும் இதில் எளிது. சுவையும் அதிகம், உடலுக்கும் நன்மை தரும்.

மலச்சிக்கல் நீக்கும் கம்பு

ஒரு பங்கு புழுங்கலரிசி, இரண்டு பங்கு கம்பு. இரண்டையும் மண் பாத்திரத்தில் இட்டுச் சீராக வறுத்து ஆற வைத்து, ரவைப் பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை வைத்து ஐந்தே நிமிடத்தில் ஒரு ஆரோக்கிய உணவைத் தயாரித்துவிடலாம்.

கல்லீரலுக்குக் குளுமை தரும் கம்பு மாவில் பொடித்த வெல்லத்தைத் தூவி, வெந்நீர் விட்டுப் பிசைந்துகொள்ள வேண்டும். பிசைந்த உருண்டை இளக்கமாக இருக்கும். இந்த உருண்டையில் மேலும் உலர் மாவு சேர்த்து உருட்டி வைத்தால், ஐந்து நிமிடத்தில் கெட்டியாக மாறும்.

பொரித்த கம்புமாவு உருண்டையைக் குழந்தைகளுக்கு ஒரு வயது முதலே பழக்கிவிட்டால், பிற்காலத்தில் பாக்கெட் நொறுவைகள் மீது அவர்களுடைய நாட்டம் செல்லாது. கம்புமாவு பிசுபிசுப்புத் தன்மை அற்றது என்பதால், பிற நொறுவைகளைப் போல மலச் சிக்கலை உருவாக்காது. ஏற்கெனவே மலச் சிக்கல் இருந்தால், அதை நீக்கவும் வல்லது.

பள்ளியில் படும் அவஸ்தை

பள்ளிக்குச் செல்லும் தற்காலக் குழந்தைகள் தாமதமாக எழுந்து வேனைப் பிடிக்கும் அவசரக் கதியில், காலையில் மலத்தை முழுமையாகக் கழிப்பதில்லை. மென்னுணர்வு மிகுந்த குழந்தைப் பருவத்தினருக்குப் பதற்றச் சூழலில் முழுமையாக மலம் வெளியேறாது. பள்ளிக்குச் சென்று வகுப்பில் உட்கார்ந்த பிறகு, வயிற்றில் கனத்துக் கிடக்கும் மலம் வெளியேற முனைப்பு காட்டும். அப்போது வகுப்பில் பலர் முன்னிலையில் ‘மிஸ்’ என்றழைத்து இரண்டு விரலைக் காட்டக் கூச்சமாக இருக்கும்.

எனவே, குழந்தைகள் மலத்தை வயிற்றிலேயே அடக்கிக் கொள்வார்கள். மீறி ஆசிரியரின் அனுமதி பெற்று, பள்ளியின் பொதுக் கழிவறைக்குப் போகவே கூச்சப்படும் அளவுக்கு ‘என் பிள்ளையைச் சிறப்பாக வளர்க்கிறேன்’ என்ற பெருமையில், அவர்களைத் தொட்டாற் சிணுங்கியாக - கூச்ச சுபாவம் மிக்கவர்களாகவே அநேகப் பெற்றோர் வளர்த்துவருகின்றனர்.

இவர்கள் புறச் சூழலுக்குப் பொருந்துவது மிகக் கடினம். அவர்களால் பழகின கழிப்பறையில் மட்டுமே மலம் கழிக்க முடியும். அதையும் மீறிய மனப்பக்குவத்துடன் பள்ளிக் கழிப்பறையில் கழிக்க முயன்றால், அவை மெய்யாகவே அச்சப்படும்படியான பராமரிப்புடன்தான் இருக்கும். 95% பள்ளிக் கழிப்பறைகளில் போதுமான நீர் வசதி இருப்பதில்லை.

இப்படி அடுக்கடுக்கான காரணங்களால் தற்காலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலானோருக்கு மலச் சிக்கல் பிரச்சினை, தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டிலும் பல வருடங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. மலச் சிக்கல், மனச்சிக்கல், ஒவ்வாமை, தோலரிப்பு, மூச்சிளைப்புவரை பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண்ணாகத் திகழ்வதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

நார்ச்சத்து மிகுந்த நம்முடைய சிறுதானியங்களை உணவு வடிவத்தில் ஏற்கிறபோது, அவை குழந்தைகளின் மலச் சிக்கலுக்கு `அமைதியாக’ தீர்வைத் தந்துவிடுகின்றன.

நிறமி தரும் தோல் பிரச்சினை

குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளிலேயே நிறமிக்காகவும், பதப்படுத்தியாகவும் (preservative) சேர்க்கப்படும் ரசாயனக் கூறுகள் கலந்த கேக் குடலில் பிசுபிசுப்புடன் ஒட்டி உறவாடி மலத்தைச் சிக்கச் செய்வதுடன், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் அதீத அளவில் கலக்கப்படும் நிறமிகள், மலரிதழைப் போன்ற நம் குழந்தைகளின் சருமத்தில் எத்தகைய விளைவை உருவாக்கும் என்ற ஆபத்தைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.

தோலில் வெயில் படாமல் வளர்வதாலும் நம் குழந்தைகளுக்கு மேற்சொன்ன ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் திறன் உடலில் இருப்பதில்லை. விற்பனையாகாத ஒரு பெயருடைய கேக், அடுத்த சில நாட்களில் வேறு ஒரு நிறம் சேர்க்கப்பட்டுப் புதிய அவதாரம் எடுக்கும் தொழில்நுட்ப ரகசியம் நம்மில் பலருக்குத் தெரியாது. குறிப்பாகச் சொல்வதென்றால் சுளீரெனத் தாக்கும் சுவையில், அடர்த்தியான நிறத்தில் பளீரென மின்னும் கேக் வகைகள், போன ஜென்மத்தில் இன்னொரு பெயரில் அதே கண்ணாடிப் பெட்டியில் தவமிருந்த பூர்வாந்திரக் கதைகள் நமக்குத் தெரியாது.

ஈர்ப்பும் சுவையும்

கேக் போன்ற வெளித் தயாரிப்புப் பண்டங்களை வாங்கித் தருவதற்குப் பதிலாகக் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிறு தானியங்களில் நொறுவைகள் தயாரித்துத் தருவதுதான் பொறுப்பான பெற்றோரின் அடையாளம்.

ஒரு பங்கு பயற்றம் (பாசிப்) பருப்பு, அதில் ஆறு பங்கு தினை, பதத்துக்கு நெய், இனிப்புக்கு வெல்லம், வாசத்துக்கு இரண்டு சிட்டிகை ஏலப்பொடி, செரிக்க ஒரு சிட்டிகை சுக்கு பொடி அனைத்தையும் ஒன்று கூட்டி மிக்ஸியில் இட்டு அரைத்துப் பட்டும் படாமல் நீர் தெளித்துப் பார்க்கத் திண்மையாகவும், தொட்டால் புட்டு கொள்ளும்படி மென்மையாகவும் உருண்டை பிடித்து வைத்தால், தினை உருண்டைகள் காலியாகாதா? அவற்றின் சுவையும் நலமும் உணர்ந்துவிட்டால் நம் குழந்தைகள் ஏன் “கேக்கு… கேக்கு” என்று கேட்கப் போகிறார்கள்?

வெளிப் பண்டங்களை முற்றாக மறுக்கும் பல குழந்தைகளை அடிக்கடி காண நேர்கிறது. அவர்களைப் பார்த்து வியப்பதற்கு இடம் தராமல், வீட்டிலேயே ஈர்ப்பும் சுவையும் நிரம்பிய பலகாரங்களைப் பெற்றோர் செய்து தருவதே சூட்சுமம்.

பிரியாணியும் இருக்கே…

தினை, சாமை, குதிரைவாலி அரிசி வகைகளில் பலகாரங்கள் மட்டுமல்ல, அன்றாட உணவுக்குரியவற்றையும் சமைத்து அசத்தலாம். தினையரிசி, குதிரைவாலி, சாமை ஆகியவற்றைக் கலவையாகவோ, தனித்தோ அரிசிக்குப் பதிலாகப் போட்டுப் பிரியாணி செய்தால், அதன் சுவை அற்புதத்திலும் அற்புதமாக இருக்கும்.

தினை பிரியாணியை ஓரிரு முறை சுவைத்துவிட்டால், அதற்குப் பின்னர்ப் பாஸ்மதி அரிசிப் பிரியாணியைப் பார்க்கும்போது, நாக்கின் சுவை நரம்புகள் உங்களுக்கு அது வேண்டும் எனத் தொந்தரவு படுத்தாது.

உலகம் மாறும்

நம்முடைய சிறுதானியங்கள் சூரிய ஆற்றல் மிகுந்தவை என்பதை முன்னரே பார்த்துள்ளோம். அதனால் நிறைந்த சத்துகளுடன், மிகுந்த சுவை தருபவை என்பது மட்டுமில்லாமல், அவற்றைத் தொடர்ந்து உண்டுவர நம் உடலில் தேங்கும் நச்சுக் காற்று அவசர அவசரமாக வெளியேறி விடும். நெருப்பு காற்றைத் தின்னும் என்ற தர்க்கம் நாம் அறியாததல்ல?

பெருந்தானியங்கள் காற்று நிரம்பிவை. தொடர்ந்து அவற்றை மட்டுமே பயன்படுத்துகிறபோது உடலில் கெட்ட வாயுக்களும், வாயுக்கள் மிகும்போது அவை அமில வடிவத்தில் மாறித் தேங்குவதும் தவிர்க்கவே முடியாது.

எனவே, நாமும் நம் வருங்காலத் தலைமுறையும் நோயின் பிடியினின்று நீங்க சிறுதானியப் பயன்பாட்டை அதிகரித்துக்கொள்வோம். சிறுதானியப் பயன்பாடு அதிகரிக்கும்போது நமது உடல் நோயினின்று விடுதலை பெறும். சிறுதானிய விளைச்சல் அதிகரிக்கும்போது, நமது மண்ணும் ரசாயன உரத்திலிருந்து விடுதலை பெறும். சிறுதானிய விளைச்சல் அதிகரிக்கும்போது நமது காற்றும் நச்சுப் பூச்சிக்கொல்லிகளிலிருந்து விடுதலை பெறும்.

ரசாயனப் பயன்பாட்டைத் தவிர்க்கிறபோது காதுக்கு இனிய இசையைத் தரும் பறவை இனங்களும், கண்ணுக்கு இனிய ஒளியைத் தரும் பூச்சியினங்களும், நாவிற்கு இனிய தேனைத் தரும் தேனீக்களும் பெருகும்.

(அடுத்த வாரம்: அரிசியைக் கொஞ்சம் அலசுவோம்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்