குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் கருத்தில் கொள்ள வேண்டியவை

By செய்திப்பிரிவு

குளிர்காலம் தொடங்கி விட்டது. கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலத்திலும், சரும பராமரிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலத்தை ஆரோக்கியமாகப் பேணுவது தாய்-சேய் நலன் காக்க உதவும்.

தண்ணீர் குடிக்கவும்

குளிர்காலத்தில் தாகம் குறையும் என்பதால், அடிக்கடி குடிநீர் குடிப்பது குறைந்துவிடும். இது கர்ப்பிணிகளுக்குப் பல கெடுதலை உண்டாக்கும். குளிர்ந்த காற்றினால் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க, அதிக அளவு தண்ணீரைக் குடிப்பது மிகவும் அவசியம்.

உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையாலும் குளிர்ந்த சூழலாலும் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் சாத்தியம் இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் உடலில் நீர்ச்சத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.

டாக்டர். சரண்யா. எஸ்

சமச்சீர் உணவு

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் உண்ணும் உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தங்களை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள அதிகமாகப் பழங்களையும் காய்கறிகளையும் அவர்கள் சாப்பிட வேண்டும். எண்ணெய் நிறைந்த உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதிக எண்ணெய் நிறைந்த பொருட்களைச் சாப்பிடுவது அமிலத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக, உடல் எடையை அதிகரிக்கும் அதிகப்படியான சர்க்கரையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அது நீரிழப்புக்குக் காரணமாக அமைந்து கர்ப்பத்தைக் கடினமாக்கும்.

ஃபுளூ தடுப்பூசி

பெரும்பாலும் குளிர்காலங்களில் நோய் எதிர்ப்பாற்றல் பலவீனமடையும். கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பாற்றல் ஆரம்பக் காலம் முதலே குறைந்துவிடும். இந்த காலகட்டத்தில் எளிதில் தாக்கக் கூடிய ஃபுளூவை எதிர்கொள்ள அதற்கான தடுப்பூசியை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தாய் சேய் இருவருக்கும் பாதுகாப்பானது; அவசியமானது.

சுறுசுறுப்பு அவசியம்

கர்ப்பகாலத்தில், உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இது போன்ற சூழலில், வெளியில் குளிரால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனால், வீட்டுக்குள்ளேயே எளிய உடற்பயிற்சிகளைச் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது தவிர, நடைப்பயிற்சி, யோகா, கர்ப்பகால-பிசியோதெரபிஸ்ட் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி ஆகியவற்றினை மேற்கொள்ளலாம்.

சரும பிரச்சனைகள்

வறண்ட சருமம், முகப்பரு போன்றவை குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள். அத்தகைய சூழ்நிலையில், சருமத்தைப் பராமரிக்க, சூடான குளியலையும், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும் நல்ல தரமான மாய்ஸ்சரைசர் உபயோகிக்கலாம். குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம்.

குளிர் தவிர்க்கும் உடை

கர்ப்ப காலங்களில் உடல் சூடாக இருக்கும் என்பதால், குளிரிலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய ஆடைகளை அணிவது உங்கள் உடல் வெப்பநிலையைச் சீராக்க உதவும். குளிர்ச்சியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கக் குளிரைத் தவிர்க்கும் ஆடைகளை அணிவது அவசியம். முடிந்த வரை பருத்தி கால் உறைகளை அணிய வேண்டும்.

மகிழ்ச்சி முக்கியம்

குளிர் காலங்களில் அதிக கவனத்துடன் செயல்பட்டும் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது. ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பிரசவத்தை அனுபவிக்க இதுவே சிறந்த வழி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE