தற்போது கிடைக்கும் கொட்டைகள், விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் (Flaxseed அல்லது Linseed) எனப்படும் ஆளி விதை. இது லினன் (Linen) எனப்படும் நூலிழையைத் தரும் தாவரத்தின் விதை. எள் என்பது விதைகளின் நாயகன் என்று சொல்லலாம். அதேநேரம், மனித இனம் சாப்பிட்ட மிகவும் பழமையான உணவு வகைகளில் ஒன்று இந்த ஆளிவிதை. பாபிலோனியர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன் இதைப் பயிரிட்டுப் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்ட பயிர் இது.
பயன் நிறைந்தது
இதன் லத்தீன் பெயரான linum usitatissimum என்பதற்கு மிகவும் பயனுள்ளது என்று அர்த்தம். அது உணவுப் பொருளாக மட்டுமின்றி, துணிகளை நெய்வதற்கான நூலிழையாகவும் பழங்காலத்தில் பயன்பட்டிருக்கிறது. பழங்காலப் பாய்மரக் கப்பல்களில் பயன்பட்ட துணிகள் இதைக் கொண்டே நெய்யப்பட்டன. ஆளி விதை எண்ணெய் தற்போது வரை மரத்தை மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது.
ஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது.
இந்தக் கொழுப்பு அமிலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (Essential fatty acid - EFA). ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் ஒமேகா 6-ம் இருப்பதால், செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி விதை உறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
ஆளி விதையில் லிக்னன் என்ற தாவர வேதிப்பொருளும் இருப்பதால் பாலிஃபீனால், ஃபைட்டோஈஸ்ட்ரோஜென் போன்றவை உடலுக்குக் கிடைக்கின்றன. இது பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாத்து, மாதவிடாய் சுழற்சியை இயல்பாக வைக்கிறது, மேலும் இந்த வேதிப்பொருட்கள் ஆன்ட்டி ஆக்சிடண்ட், பாக்டீரிய எதிர்ப்பு, பூஞ்சை தொற்று எதிர்ப்பு, வைரஸ் தொற்று எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டி ருப்பதால், மார்பகம், குடல், புராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும் தன்மையைத் தருகிறது.
முட்டைக்கு மாற்று
ஆளி விதைக்கு மற்றொரு சிறந்த பண்பும் உண்டு. அது பிசுபிசுப்பாக மாறிவிடும் தன்மை. திரவப் பொருளுடன் ஆளி விதை சேர்ந்தால், அது ஜெல்லியைப் போல மாறிவிடும். இது குடலுக்கு நல்லது. குடலைத் தூய்மைப்படுத்தி, மலம்கழித்தலை இலகுவாக்கி, நீண்ட நேரம் உணவைக் குடலில் தங்க வைக்கிறது. இதன் மூலம் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைக் கிரகிக்க, அதிக வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல ஆளி விதையை பேக்கிங்கில் முட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். மூன்று மேசைக்கரண்டி ஆளி விதையை நன்றாக அரைத்து, அரை கப் தண்ணீருடன் கலக்க வேண்டும். அது முட்டையின் வெள்ளைக் கரு போல மாறும் வரை இப்படிக் கலக்க வேண்டும். மாவு போன்ற பொருட்களைப் பிசைந்து சேர்க்க இது உதவும்.
சூட்டிலும் குறையாத சத்து
ஆளி விதையை நன்கு அரைத்து, இட்லி-தோசை மாவு, சப்பாத்தி மாவு போன்றவற்றை மென்மையாக்கப் பயன்படுத்த லாம். பொதுவாக, இதை அதிகம் பயன்படுத்தும் முறை இதுதான். ஆளி விதையைக் கொண்டு ஒமேகா 3 மேம்படுத்தப்பட்ட பீட்சா, தோசை, மஃபின், பிஸ்கட் போன்றவற்றைச் செய்யலாம். ஒமேகா 3-ல் ஒன்றான ஆல்பா லினோலிக் அமிலம் (Alpha linoleic acid - ALA) 150 டிகிரி செல்சியஸுக்குச் சூடேற்றினால்கூட எதுவும் ஆகாது. மகாராஷ்டிராவில் ஆளி விதையில் செய்யப்படும் சட்னி பிரபலம்.
அதேநேரம், ஒரு நாளில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆளிவிதையின் அளவு ஒன்று முதல் இரண்டு மேசைக்கரண்டிதான். அதாவது 30 கிராம். ஆளி விதைத் தூளை வாங்குவதைவிட, ஆளி விதையை வாங்கித் தேவைக்கேற்ற அளவு அவ்வப்போது நாமே அரைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், ஆளிவிதை சீக்கிரம் சத்துகளை இழக்கக்கூடியது.
(சுருக்கமான மொழிபெயர்ப்பு) தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: வள்ளி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago