என் முகத்தில் பருக்கள் இருக்கின்றன. எனக்குச் சாக்லேட் என்றால் கொள்ளை ஆசை. ஆனால், சாக்லேட் சாப்பிட்டால் பருக்கள் அதிகமாகும் என்று பயமுறுத்துகிறார்கள். இது சரியா?
சரிதான்.
பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லேட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு பருக்கள் எப்படி உருவாகின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
எண்ணெய் அடைப்பு
நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’ (Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் மயிர்க்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது.
மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படிச் சீபம் சேரச்சேர தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதுதான் பரு (Acne vulgaris). அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும்.
நிரந்தரப் பிரச்சினை
ஆரம்பத்தில் கருநிறக் குருணை (Blackhead) போலப் பரு தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் (Whitehead) வெளிவரும். இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கும் பாக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களில் சீழ்பிடிக்க வைக்கும். அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினால் பருக்கள் சீழ்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள் (Pustules) என்று பெயர். இதற்குச் சிகிச்சை எடுக்கவில்லை என்றால், உறைகட்டிகளாக (Cystic acne) மாறிவிடும். பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை; கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம்.
கொழுப்பே காரணம்
முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். இது எப்படி நடக்கிறது? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது சாக்லேட்டுக்கு வருவோம். ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 100 கிராம் சாக்லேட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது. சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லேட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல ‘தீனி’ கிடைத்துவிடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக்கொள்ளும். இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லேட்டைத் தவிர்ப்பதே நல்லது.
(அடுத்த வாரம்: காது குடைய ‘பட்ஸ்’ பயன்படுத்தலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago