பச்சிளம் குழந்தைகளையும் குறைப்பிரசவக் குழந்தைகளையும் காப்போம்

By நிஷா

பச்சிளம் குழந்தைகள் என்பவர்கள் 28 நாட்களுக்குள் இருக்கும் குழந்தைகள். கர்ப்ப காலத்தில் 37 வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவ குழந்தைகள். ஒரு குழந்தை பிழைத்து உயிர்வாழ்வதற்கான மிக முக்கியமான காலகட்டம் முதல் 28 நாட்களே. இந்த காலகட்டத்தில் குழந்தைகளில் அதிக இறப்புகள் நிகழ்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50% இறப்புக்கள், பச்சிளம் குழந்தைகளாக இருக்கும்போதே நிகழ்கின்றன.

பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் நடைமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 முதல் 21 வரை பச்சிளம் குழந்தைகள் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 'பச்சிளம் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் தரமான சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த வாரத்தில் நவம்பர் 17ஆம் தேதி உலக குறைப்பிரசவ நாளாகக் கொண்டாடுகிறது.

சென்னையில் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று பச்சிளம் குழந்தைகள் வாரமும், உலக குறைப்பிரசவ தினமும் கொண்டாடப்பட்டன. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குறைப்பிரசவ குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அந்தக் கொண்டாட்டத்தில் குறைப்பிரசவக் குழந்தைகளின் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகப் பல செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் தாய்ப்பால் வங்கி முக்கியமானது.

தாய்ப்பால் வங்கி

குறைப்பிரசவக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு உணவளிக்க போதுமான அளவு பால் தாய்மார்களுக்குச் சுரக்காது. மாட்டுப் பால், செயற்கைப் பால் போன்றவை குழந்தைகளுக்குக் கடுமையான தொற்று, குடல் செயலிழப்பு ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த ஆபத்தைக் களையும் நோக்கில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் குழந்தைகள் தங்கியிருக்கும் கால அளவைக் குறைக்கவும், தாய்ப்பால் ஏற்றுக்கொள்ளாத தன்மை உருவாவதைத் தடுக்கவும், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை விரைவாக மீட்டெடுக்கவும் இந்தத் தாய்ப்பால் வங்கி உதவும்.

ஆக்கபூர்வமான பங்களிப்பு

இந்தக் கொண்டாட்டம் குறித்து ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் நியோநேட்டாலஜி முதன்மை ஆலோசகர் டாக்டர் ராகுல் யாதவ் பேசும்போது "குறைப்பிரசவ குழந்தைகள் சார்ந்த கவனிப்பை சமூகமும் சில நேரம் மருத்துவ சமூகமும் சரியாக எடுத்துக்கொள்வதில்லை. மிகவும் சிறிய 500 கிராம் எடை கொண்ட குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பது சார்ந்து சமூகத்தில் இன்னும் அவநம்பிக்கை நிலவுகிறது. இந்தச் சூழலை மாற்றியமைக்க நாங்கள் விரும்புகிறோம். எங்கள் மருத்துவமனையில் குறைப்பிரசவம் காரணமாக 22 வாரங்களில் பிறந்த மிகச்சிறிய குழந்தை இப்போது 4 வயதில் ஆரோக்கியமாக உள்ளது என்கிற செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்." என்று தெரிவித்தார்.

பச்சிளம் குழந்தைகளின் நல்வாழ்வுக்கும், குறைப்பிரசவ குழந்தைகளின் பாதுகாப்புக்கும் பெற்றோரின் கவனிப்பும், குடும்பத்தின் ஆதரவும், சமூகத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்பும் தேவைப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளும் முன்னெடுப்புகளும் இத்தகைய குழந்தைகளின் நலனை மேம்படுத்த உதவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE