பேலியோ டயட்: நல்லதும் கெட்டதும்

By ஜெ.ஸ்ரீராம்

(‘பேலியோ டயட்’ கட்டுரை கடந்த வாரத் தொடர்ச்சி…)

‘பேலியோ டயட்’ உணவு முறையில் அடிப்படையில் சில நல்ல அம்சங்கள் இருப்பதை மறுக்க முடியாது. அவை:

1. கோதுமை, மைதா, ரவை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பிஸ்கெட், பரோட்டா வகைகளைத் தவிர்க்க ‘பேலியோ டயட்’ வலியுறுத்துகிறது. கோதுமையில் உள்ள குளூட்டன் என்ற புரதம் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தவிர்ப்பது நலம். கோதுமையைப் பன்னெடுங்காலமாகச் சாப்பிட்டு வந்த அவை விளையும் பகுதி மக்களுக்கே, கோதுமைப் புரதம் ஒத்துக்கொள்ளாத நிலை இருப்பதைப் பார்க்கிறோம். இந்நிலையில் அரிசி சாப்பிட்டு வளர்ந்த நம்மிடையே அது ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

2. நெய், எண்ணெய், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பற்றிய தேவையற்ற அச்சத்தை நீக்கி, ஆரோக்கியமானது என்று ‘பேலியோ டயட்’ வலியுறுத்துவது.

3. காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளவும் அறிவுறுத்துகிறது.

மேற்கண்ட ஆரோக்கியமான வழிமுறைகளை ‘பேலியோ டயட்‘டைக் கடைப்பிடிக்கும்போது, தொற்றா நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கிறது.

பாதகங்கள் உண்டு

‘பேலியோ டயட்’ உணவு முறையில் சில நல்ல அம்சங்கள் இருக்கும் அதேநேரம், அதிலுள்ள பாதகங்களையும் பரிசீலிக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை:

ஆதிமனித உணவு முறையில் அதிக அளவு இறைச்சியை உட்கொள்வதால் சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்றவற்றின் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீரின் அமில காரச் சமநிலை பாதிக்கப்படலாம். சிட்ரிக் அமிலம் அதிகமாக வெளியேறும். அதனால் கல்லடைப்பு (Hypocitraturia) வரும். (ஆதாரம்: American journal kidney disease, 2002 Aug, 265-274)

இதற்கான தீர்வு: இறைச்சி உணவு உட்கொண்டால் சித்த மருத்துவத்தில் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்வது அல்லது குடம்புளி (Hydroxy citrate) பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. இதன்மூலம் அதிகமான சிட்ரிக் அமிலம் வெளியேறுவது தடுக்கப்பட்டு, கல்லடைப்பு உருவாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்தப் பாதுகாப்பு வழிமுறை குறித்து ஆதிமனித உணவு முறை எதையும் குறிப்பிடவில்லை.

அதிக இறைச்சி சாப்பிடலாமா?

‘பேலியோ டயட்’ பற்றி விளக்கும் நூல்களில் இறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்ற உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி, எச்சரிக்கை தொடர்பாக எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. எனவே, அதிக அளவில் இறைச்சி சாப்பிடுவது ஆபத்தானது என்பதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இதற்கான தீர்வு

இறைச்சியை வேகவைத்தோ அல்லது குழம்பில் இட்டோ வாரத்தில் இரண்டு முறை 60 கிராம் அளவுக்கு மட்டும் உட்கொள்ளலாம். ஆஸ்திரேலியச் சுகாதாரத் துறை, ஆஸ்திரேலியா புற்றுநோய்க் கழகங்கள் இதை வலியுறுத்துகின்றன. அளவுடன் இறைச்சியை உட்கொள்வதால் புற்றுநோயி லிருந்து தப்பிக்கலாம். உப்புக்கண்டம், சுக்கா வறுவல் போன்ற முறைகளில் இறைச்சியைச் சாப்பிடுவது நல்லதல்ல.

அரிசி உணவு கெட்டதா?

ஆதிமனித உணவு முறை, அரிசி உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அரிசி உணவைத் தவிர்த்தால் மட்டுமே உடல்பருமன் குறையும் என்று குறிப்பிடுகின்றனர்.

தீர்வு

பன்னெடுங்காலமாகத் தமிழக மண்ணில் உட்கொள்ளப்பட்டுவரும் அரிசியை, பட்டை தீட்டிய அரிசியாக மாற்றிப் பயன்படுத்துவதுதான் உடற்பருமன் அதிகரிப்பதற்குக் காரணம். பட்டை தீட்டிய அரிசியை வேக வைக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால், உடல் பருமன் ஏற்படாது என்று ஆய்வுகள் சொல்கின்றன. (ஆதாரம்: https://www.acs.org.New low calorie rice could help cut rising obesity-American chemical society). அமெரிக்க வேதியியல் கழகத்தின் கருத்தரங்கில் இலங்கையைச் சேர்ந்த சுதாகர் ஏ. ஜேம்ஸ் முன்வைத்த அரிசியை வேக வைக்கும் முறை பெரும் வரவேற்பு பெற்றது (பெட்டிச் செய்தியில் காண்க).

ஒரு கோப்பை அரிசி 240 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் சிறப்பு சூடுபடுத்துதல், வேக வைக்கும் முறையை மாற்றுவதன் மூலம் 50% முதல் 60% கலோரி குறையும்.

அரிசியில் இரண்டு வகையான ஸ்டார்ச் (மாவுச்சத்து) இருக்கிறது. 1. செரிக்கக்கூடிய மாவுச்சத்து 2. எளிதில் செரிக்க முடியாத மாவுச்சத்து. செரிக்க முடியாத மாவுச்சத்தை அரிசியில் அதிகப்படுத்து வதன் மூலம் உடலுக்குக் கிடைக்கும் கலோரி அளவு குறையும்.

அதிகரிக்கும் மலக்கட்டு

ஆதிமனித உணவு முறையில் அதிகமான இறைச்சியை உட்கொள்வதால் வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாவின் எண்ணிக்கை குறைந்து, தீமை பயக்கும் பாக்டீரியா ஊக்கு விக்கப்படுகிறது (Dysbiosis). இதன் தொடக்கம்தான் மலக்கட்டு. இந்த உணவு முறையைச் சார்ந் திருப்பவர்கள், அன்றாடம் எதிர்நோக்கும் தொல்லைகளில் முக்கியமானது இது.

தீர்வு

தினமும் தூங்குவதற்கு முன் 5 மி.லி. ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை இளஞ்சூடான பசும் பாலில் கலந்து சாப்பிடுவது நல்லது.

ஆதிமனித உணவு முறை என்பது மருத்துவரின் ஆலோசனைப்படி, உடலில் குறிப்பிட்ட அறிகுறிகள் குறையும்வரை எடுத்துக்கொள்ள வேண்டிய மருத்துவ உணவு முறை. அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவு முறை அல்ல என்ற தெளிவைப் பெற்றால், தேவையற்ற பிரச்சினைகள் குறையும்.

சோற்றில் மாவுச் சத்தைக் குறைக்கும் முறை

தேவையான அளவு தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பிறகு அதில் ஒரு கோப்பை அளவு அரிசியை எடுத்து 40 நிமிடங்கள் சிறு தீயளவில் சூடாக்க வேண்டும். 20-25 நிமிடங்களுக்குக் கொதிப்பு அடங்கும்வரை காத்திருந்து, பின் 12 மணி நேரம் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைத்து, காலையில் லேசாகச் சூடுபடுத்திப் பரிமாறினால் சோற்றில் செரிக்க முடியாத மாவுச்சத்தின் அளவு 10 மடங்கு கூடுதலாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் மாவுச்சத்தின் அளவு குறைந்துவிடும்.

அரிசியை வேக வைக்கும்போது தண்ணீரில் எண்ணெயைச் சேர்த்து வேக வைப்பதால், செரிக்க முடியாத மாவுச் சத்தின் அளவு குறிப்பிடத்தக்க அளவு கூடுகிறது. 12 மணி நேரம் குளிரூட்டப்பட்ட நிலையில் இருக்கும்போது அரிசியில் உள்ள செரிக்கக்கூடிய மாவுச்சத்தின் அளவு, செரிக்க முடியாத மாவுச்சத்தாக மாறுகிறது. இம் முறையில் வேக வைத்த சோற்றைச் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படாது. இது உணவு முறை என்பதால் மருத்துவக் கண்காணிப்பு தேவையில்லை.

காய்கறி, பழமே சிறந்தவை

தினசரி அதிக அளவில் காய்கறிகள் (அவியல், கூட்டு), பழங்கள் சாப்பிடும் தமிழர்களின் உணவுப் பழக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், தினசரி 400 கிராம் காய்கறி, பழத்தை உட்கொண்டுவந்தால் புற்றுநோய், மாரடைப்பு, ரத்தஅழுத்தம் போன்றவை ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தி உலகச் சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை வெளியிட்டுள்ளது (ஆதாரம்: Fruit and vegtables for health report of a joint FAO and WHO workshop, 1-3 Sep, 2004 Kobe Japan).

இந்த உணவு முறையை முன்னேறிய நாடுகள் பல்வேறு பெயர்களில் தற்போது நடைமுறைப்படுத்திவருகின்றன. ஆஸ்திரேலியாவில் ‘Go for 2&5’ என்ற திட்டத்தின் கீழ் 150 கிராம் பழங்கள், 75 கிராம் காய்கறிகளைத் தினசரி உண்ண வலியுறுத்தப்படுகிறது. ஜெர்மனியில் ‘5 am Tag’ என்ற திட்டத்தின்படி தினசரி காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ‘5 a day’ என்ற திட்டத்தில் தினமும் வாழைப்பழம், வெண்டைக்காய் சாப்பிட வலியுறுத்தப்படுகிறது.

இப்படித் தினசரி அதிக அளவு இறைச்சி உண்ணக்கூடிய நாடுகள், தங்கள் நாட்டு மக்களுக்கு நம்ம ஊர் உணவு முறையான காய்கறி, பழங்கள் உட்கொள்வதைச் சிறப்பு என்றும், அறிவியல்பூர்வமானது என்றும் வலியுறுத்திவருகின்றன. ஆனால், அதை நாம் உணராமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

சைவத்துக்குத் திரும்பும் அயல் நாடுகள்

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் நிலப்பகுதிகளையும், அங்கே வாழும் மக்களின் உணவு முறையையும், பருவகாலங்களான பெரும்பொழுதை ஆறாக (கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்) என்று பகுத்து, அந்தக் காலத்தில் பூக்கும் தாவரப் பொருட்களை உணவாக உட்கொண்டால், குறிப்பிட்ட பருவகாலத்தில் தோன்றும் நோய்களை வெல்லலாம் என்றார். இப்படி இயற்கையே உருவாக்கிய சூத்திரத்தை வாழ்வியல் நெறிமுறையாகக் கடைபிடித்து உலகுக்கு வழிகாட்டியவர்கள் நம் முன்னோர்.

இளவேனிற் காலமான சித்திரை-வைகாசியில் வேப்ப மரங்கள் பூக்கும். கசப்பு, துவர்ப்பு, காரச் சுவையுள்ள தாவரங்கள் பூத்துக் குலுங்கும். இதற்கு நாவலும் மருதமும் சாட்சியம் கூறுகின்றன. சித்திரை முதல் நாளில் வேப்பம்பூவை உணவாக உட்கொண்டு, கோடைகாலத்தில் ஏற்படும் தொற்றுநோய்களைத் தடுத்துக்கொள்ள முடியும். இவ்வாறு ஒவ்வொரு பருவக் காலத்துக்கும் ஏற்ற உணவு உண்பதைப் பண்டிகையாக மாற்றி, அடுத்து வரும் சந்ததி கடைபிடிப்பதற்கான உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்