பேலியோ டயட்: உலகை உய்விக்கும் புது மந்திரமா?

By ஜெ.ஸ்ரீராம்

அந்தக் காலத்தில் மனிதர்களிடையே தொற்றுநோய்கள் ஏற்படுத்திய கடுமையான பாதிப்பை, இன்றைக்குத் தொற்றாத நோய்களே ஏற்படுத்தி வருகின்றன. இதய நோய்கள், அதிக ரத்தஅழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களைக் கண்டுதான் அனைவரும் அஞ்சுகிறார்கள். ஏனென்றால், அந்த நோய்கள் இன்றைக்குக் கண்மூடித்தனமாகப் பெருகிவிட்டன. இவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், இறப்போர் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றன.

இந்த நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்ற நிலை பலரிடமும் சலிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பின்னணியில், உணவு முறையை மாற்றிக்கொண்டாலே தொற்றா நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றொரு கருத்து பரவலாகிவருகிறது. அதிலும் ‘பேலியோ டயட்’ எனப்படும் ‘ஆதிமனித உணவு முறை’ இதற்கான எளிய வழிமுறை என்பது போலப் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘பேலியோ டயட்’ தொடர்பான புத்தகங்களுக்கு வரவேற்பு பெருகுகிறது, பலரும் அதைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர், சில பயிலரங்குகளில் மக்கள் குவிகிறார்கள். ஆனால், உண்மையிலேயே இந்த உணவு முறை பலன் தரக்கூடியதா?

தொற்றா நோய்களின் கூடாரம்

அதற்கு முன் தொற்றா நோய்களின் திடீர் பெருக்கத்துக்கான காரணத்தை அறிய வேண்டும். பருவகாலத்துக்கு ஏற்ற உணவு, காய்கறி, பழங்கள், பயறு வகைகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஆரோக்கியக் கொள்கையை ஐந்து ஆண்டுகளுக்கு முன் உலகச் சுகாதார நிறுவனம் (WHO) பிரகடனம் செய்தது. ஆனால், தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக இதுதான் நடைமுறையில் உள்ளது.

உணவில் ஏற்பட்ட மாறுதலே உடல்பருமன், அதிக ரத்தஅழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் குடிபுக வழி செய்திருக்கின்றன. வழக்கமாக உணவில் உள்ள மாவுப்பொருட்கள் சிறுகுடலில் உறிஞ்சப்பட்டுக் குளுக்கோஸாக மாறி, பின் ஆற்றலாக மாற்றப்படும். இந்த ஆற்றல் செலவழிக்கப்பட்ட பின் எஞ்சும் குளுக்கோஸ், கிளைகோஜன் ஆக உருமாறி, கொழுப்பாகச் சேமிக்கப்படும். இதனால் உடல்பருமன் போன்ற தொற்றாதநோய்கள் அதிகரிக்கும்.

இந்த நிலைக்கு முக்கியக் காரணம் பட்டை தீட்டிய அரிசி எனப்படும் வெள்ளை அரிசி. நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதற்கு வசதியாகவும்; விரைவாகச் சமைப்பதற்கு ஏதுவாகவும் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டை தீட்டிய அரிசி, நீரிழிவு நோய்க்கு மக்களைப் பலியிட்டுவிட்டது (ஆதாரம்: White Rice consumption and Risk of type 2 Diabetes, BMJ, 15.O3. 2012). நம்முடைய பாரம்பரியச் சிவப்பு-பழுப்பு அரிசி வகைகளையும், கறுப்பு கவுணி அரிசியையும் மறந்ததுதான், இதற்கு முக்கியக் காரணம்.

மாடுகளும் திரவ உணவும்

இன்னொரு முக்கியக் காரணம் பாரம்பரிய மாட்டு இனங்களான காங்கேயம் போன்றவற்றின் பாலைப் புறக்கணித்தது. நீரிழிவு, அதிக ரத்தஅழுத்தம், மாரடைப்பு, ஆட்டிசம் (சித்த மருத்துவத்தில் மாந்தம்) போன்றவற்றை உருவாக்கக்கூடிய வேதிப்பொருளான Beta casomorphin உணவில் சேராத நிலையில், பன்னெடுங்காலமாகத் தமிழக மக்கள் தொற்றா நோய்களால் பெருமளவு தாக்கப்படாமல் இருந்துவந்தனர். அதற்குப் பாரம்பரிய மாடுகள் தரும் சத்தான ‘ஏ 2 பால்’ முக்கியக் காரணம்.

வெளிநாட்டு கலப்பின மாடுகளின் பால் ‘ஏ 1 பால்’ எனப்படுகிறது, இது ‘ஏ 2 பாலைப்’ போன்ற ஊட்டச்சத்துகளைக் கொண்டிருக்கவில்லை. ‘ஏ 1 பால்’ நோயை உருவாக்கவும் கூடும். (ஆதாரம்: Neuropeptides, 2011 JUN 21, 189-195)

வெப்ப மண்டல நாடான நம் நாட்டில் ஆரோக்கியம் காக்கும் கூழ், சாம்பார், ரசம், மோர் போன்ற திரவ வடிவ உணவை அதிகம் உட்கொண்டுவந்தோம். ஆனால், அந்தப் பழக்கத்தை வலிந்து மாற்றி ரொட்டி, பிஸ்கட், பீட்சா போன்று குளிர் நாடுகளில் உண்ணப் படும் திட உணவை அதிகமாக உட்கொள்ளத் தொடங்கியதும் தொற்றா நோய்கள் கூடாரம் இட்டதற்கு முக்கியக் காரணம்.

ஆதிமனித உணவு முறை

ஆதிகால மனிதன் மாவுப்பொருட்கள் இல்லாத உணவு முறையைக் கடைப்பிடித்து, தொற்றா நோய்கள் இல்லாமல் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அந்த உணவு முறையே ‘பேலியோ டயட்’ என்ற பெயரில் இன்றைக்குப் பிரபலப்படுத்தப்படுகிறது.

‘பேலியோ டயட்’ உணவு முறை: ஓர் எடுத்துக்காட்டு

காலை - 100 பாதம் கொட்டைகள்

மதியம் - 4 முட்டைகள்

மாலை 1 கப் பால்

இரவு ஆட்டுக் கறி, மாட்டுக் கறி, பன்றி இறைச்சி, தோலுடன் கோழி போன்றவற்றைக் கணக்கில்லாமல் எடுத்துக்கொள்வது.

இந்த உணவு முறைப்படி உட்கொள்வதால் ரத்தச் சர்க்கரை அளவு, உடல் பருமன், அதிக ரத்தஅழுத்தம் போன்றவை குறையும் என்று ‘பேலியோ டயட்’ ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

அடிப்படையில் ‘பேலியோ டயட்’ என்பது ஒரு மருத்துவ வழிமுறை. இதேபோன்ற வழிமுறை அலோபதி, சித்த மருத்துவ முறைகளில் உள்ளது. ஆங்கில மருத்துவத்தில் மருந்துகளுக்குக் கட்டுப்படாத குழந்தைகளின் வலிப்பு நோய்க்கு Ketogenic diet என்றும், சித்த மருத்துவத்தில் அண்டத் தைலம், கோழி நெய், காயராஜங்கத் தைலம், காயச் சர்வாங்கத் தைலம் போன்ற எண்ணற்ற தைலங்களில் உயிரினங்களின் இறைச்சி சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய்கள் கொடிய வாத நோய்கள், வர்ம நோய்களுக்கான மருந்துகளாகப் பன்னெடுங்கால மரபில் வழங்கப்பட்டுவருகின்றன.

அதேநேரம் ஆதிமனித உணவு முறையில் இறைச்சி உணவை அதிகமாக உட்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

ஆனால், உலகச் சுகாதார நிறுவனமோ (World Health organization) இறைச்சி உணவு உட்கொள்வதில் உள்ள ஆபத்துகள் பற்றி கேள்வி - பதிலாக ஓர் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. ( ஆதாரம்: www.who.int./features /qa/cancer/red meat/en அதன் சாராம்சத்தைப் பெட்டிச் செய்தியில் காண்க)

தினசரி இறைச்சி ஏன் ஆபத்து?

இறைச்சி உணவு உட்கொள்வதில் உள்ள ஆபத்துகள் பற்றி உலகச் சுகாதார நிறுவனம் தரும் எச்சரிக்கைகள்:

# சிவப்பு இறைச்சி (Red meat) என்பது மாடு, பன்றி, குதிரை, ஆடு, செம்மறி ஆடு, மாட்டின் கன்றுக்குட்டி கறி (veal), கடா (mutton), ஆட்டுக்கறி (lamb) போன்ற பாலூட்டிகளின் இறைச்சி.

# பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பது உப்புக் கண்டம், இறைச்சியைப் புளிக்க வைத்தல், புகையிடுதல், நீண்ட நாட்கள் பத்திரப் படுத்துவதற்கு இறைச்சியைப் பதப்படுத்துதல்.

# பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சியை உட்கொள்வதால் ஒவ்வோர் ஆண்டும் 50,000 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். தினசரி 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அல்லது 90 கிராம் வேகவைத்த இறைச்சியைத் தொடர்ந்து உட்கொண்டுவந்தால் குடல் புற்றுநோய் உருவாகும் சாத்தியம் 18% உள்ளது என் பதைக் கவனிக்க வேண்டும். (ஆதாரம்: Red meat and risk of bowe# cancer www.nhs.uk)

# இறைச்சியைப் பக்குவப்படுத்தும்போது N-nitroso compounds மற்றும் Polycyclic aromatic hydrocarbons போன்றவை புற்றுநோயைத் தூண்டும் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

# சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தின் 800-க்கும் மேற்பட்ட ஆய்வுகள், இறைச்சி - பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வது புற்றுநோயை உருவாக்கும் என்பதை வலியுறுத்தும் முடிவுகளைத் தருகின்றன.

(அடுத்த வாரம் நிறைவடையும்)
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்