உலக நீரிழிவு நோய் நாள்: நவ. 14
பரபரப்பான பணி அவருக்கு. எப்போதும் அலுவலகம், களப்பணி என்று 24 மணி நேரமும் டென்ஷன்தான். இத்தனைக்கும் அவர் வேலை பார்த்தது மருத்துவத் துறை. நீரிழிவு நோய் இருப்பது அவருக்குத் தெரியும், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?, சிகிச்சை செய்துகொள்ளாவிட்டால் அது என்ன பாடுபடுத்தும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த நீரிழிவு நோய்க்கு முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார்.
‘அடப் போகும்போது என்னத்த அள்ளிட்டுப் போகப் போறோம், பாக்காலாம்ங்க. வாயைக் கட்டுப்படுத்திக்கிட்டு எப்படிங்க இருக்க முடியும்; அப்படி ஒரு வாழ்க்கைத் தேவையா’ என்று சொல்லி எந்த உணவுக் கட்டுப்பாடுமில்லை; பரபரப்பு, டென்ஷனில் இருந்து அவர் தன்னை மாற்றிக்கொள்ளவும் இல்லை. விளைவு, ஒரு நாள் நள்ளிரவில் கடுமையான மாரடைப்பு. மனைவியையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார்.
நீரிழிவு நோய் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது என்று அந்நோய் இருப்ப வர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடம்பில் வேறு ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றிருந்தபோது, தற்செயலாகக் கண்டுபிடித்ததாகத்தான் பலரும் சொல்வார்கள். அதற்குள் உடலில் நீரிழிவின் பாதிப்புகள் ஏற்கெனவே உடலில் தொடங்கியிருக்கும்.
குழந்தைகளும் விதிவிலக்கல்ல
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கணிசமான மாணவர்களுக்கு - அதிலும் வளரிளம் மாணவிகளுக்கு ‘டைப் 2’ நீரிழிவு நோய் வருவதற்கான தொடக்கநிலை சாத்தியக்கூறு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றமும், தவறான உணவுப் பழக்கமும்தான்.
இந்தக் காலக் குழந்தைகள் உணவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், நொறுக்குத்தீனியை விரும்பி சாப்பிடுகிறார்கள். வாய்க்குள் நுழையாத பெயர் கொண்ட நொறுக்குத்தீனிகளின் பட்டியல் நீளமானது. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இவற்றைத் தின்கிறார்கள். போதாததற்கு சக்கை உணவையும் (Junk food) இஷ்டம்போல் வயிற்றுக்குள் தள்ளுகிறார்கள். குளிர்பானங்களையும் விட்டுவைப்பவதில்லை. சில உணவகங்களில் ‘காம்போ ஆபர்’ என்ற பெயரில் சக்கை உணவுடன் விலை மலிவாகவோ அல்லது இலவசமாகவோ தரப்படுகிறது.
விளையாட்டு அவசியம்
குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளியிலிருந்து வந்தவுடன் டியூஷன். பின்னர் ஹோம் ஒர்க், டியூஷன் ஹோம் ஒர்க் முடிக்கவே இரவு வெகு நேரமாகிவிடுகிறது. பிறகு எப்போது விளையாடுவது? பள்ளியிலும் விளையாட்டு பீரியடின்போது போர்ஷன் முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக, படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 80 விழுக்காடு மாணவர்கள் வாரத்தில் ஒருநாள்கூட வீட்டுக்கு வெளியில் விளையாடுவதே இல்லையாம். இவையெல்லாமே குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும், பின்னாளில் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.
நேரம் கிடைக்கும்போது குழந்தைகளை ஓடியாடி விளையாடச் சொல்லவேண்டும். வீட்டிலும் சின்னச்சின்ன வேலைகளைச் செய்ய வைக்கவேண்டும். உடல் நலமாக இருப்பதற்கு அளவான, சரிவிகித உணவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதைக் குழந்தை களுக்குப் புரியவைக்க வேண்டும். இதன்மூலம் நீரிழிவு இளவயதில் எட்டிப்பார்ப்பதைத் தடுக்க முடியும்.
தேவை துரித நடவடிக்கை
நீரிழிவு நோயைக் கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி 40 வயதை நெருங்கும்போது நீரிழிவுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதுதான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது தொடர வேண்டும். ஒருவேளை நீரிழிவு இருந்தால், தொடக்க நிலையிலேயே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். நீரிழிவுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்சிகிச்சை எடுத்துக்கொள்வது, நீரிழிவின் பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க உதவும். அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இதற்கான மருந்து மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்கின்றன.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைத் துரிதப்படுத்தா விட்டால் 2040-ல் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 64 கோடியாகிவிடும் என்று ‘உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பு’ தெரிவிக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், தகுந்த உணவு பழக்கம் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கவோ, தள்ளிப்போடவோ அல்லது அதன் பக்கவிளைவுகளிலிருந்து தடுத்துக்கொள்ளவோ முடியும்.
நீரிழிவு நோய்க்கு மருத்துவம் செய்துகொள்ளாததால் ஏற்படும் பக்கவிளைவுகளைச் சமாளிக்க மிகுந்த கஷ்டப்பட வேண்டியதை நினைக்கும்போது, அதைக் கட்டுப்படுத்தப் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய் நமக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் நோய் உறுதிப்படுத்தப்படாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு நீரிழிவு நோயாளிகளில், நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும்.
கட்டுரையாளர், மதுரை தேசிய கண் மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago