ஆன்டிபயாட்டிக் விழிப்புணர்வு வாரம் நவ. 14-20
மருந்துக் கடைகளுக்குச் சென்று சளி, காய்ச்சல் என்று கூறி மருந்து கேட்டால் என்ன மருந்து கொடுக்கிறார்கள்? பத்து மருந்துக் கடைகளில் கேட்டபோது, எல்லா மருந்துக் கடைகளிலும் ‘ஒரு செட் மருந்து’ (Combo pack) என்று சொல்லக்கூடிய மருந்துகளில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து (Antibiotics) ஒன்று இருந்தது. இந்த ஆன்டிபயாட்டிக் மாத்திரையை ஒரு நாள் மட்டும் உட்கொள்ளலாமா?
கண்டிப்பாகக் கூடாது. நோய்த் தொற்று கிருமியை எதிர்க்கக்கூடிய நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை ஒரு நாளைக்கு மட்டும் பயன்படுத்தும்போது நாளடைவில், அந்தக் கிருமி நுண்ணுயிர்க் கொல்லி மருந்து எதிர்ப்புத் திறனை (Drug resistance) பெற்றுவிடும்.
வயிற்றுப் போக்குக்கு மருந்துக் கடைகளில் வாங்கும் மருந்தில் புளூரோ குயினலோன்ஸ் என்ற வேதிப் பொருள் இருக்கும். நோய்த் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை அந்த மருந்து இழந்துவிட்டால், நம் உடல் கடுமையான சிக்கலைச் சந்திக்கும். நோய்த் தொற்றிலிருந்து உடல் சீரடையாது.
விழிப்புணர்வு நாள்
தற்போதுவரை எந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து உலகில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது முதலில் விற்பனைக்கு வருவது இந்தியாவில்தான். இதற்கு முக்கியக் காரணம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைத் தவறுதலாகவும் தேவையில்லாமலும் பயன்படுத்துவதுதான். இதனால் புதிதாக வரும் நுண்ணுயிர்கள் சில நாட்களிலே நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு ஆற்றலை (Drug resistance) பெற்றுவிடுகின்றன.
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைத் தவறுதலாகப் பயன்படுத்துவதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகச் சுகாதார நிறுவனம் உலக நுண்ணுயிர்க் கொல்லி விழிப்புணர்வு வாரத்தை நவம்பர் 14 முதல் 20 கடைப்பிடிக்கிறது.
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாடு - மருத்துவத் துறையின் கடமைகள்:
# நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைக் கொடுக்கும் மருத்துவர்கள், நோய்க் கிருமித் தொற்றிலிருந்து மக்கள் எப்படித் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் சேர்த்தே ஏற்படுத்த வேண்டும்.
# தேவையானபோது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை முறையான, தரமான, சரியான அளவில் வழங்குவது மட்டுமல்லாமல், அதை எப்படி முறையாக உட்கொள்ள வேண்டும் என்றும், அதன் பக்க விளைவுகள், நன்மைகள் பற்றியும் நோயாளிகளுக்கு விளக்க வேண்டும்.
# மருந்துக் கடை நடத்துபவர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரு போதும் கொடுக்கக் கூடாது. சாதாரணக் காய்ச்சல், சளி (Common Flu) என்று வரும் நோயாளிகளுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் தேவையில்லை என்பதை எடுத்துக் கூற வேண்டும்.
# நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எத்தனை வேளை உட்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும் எனத் தெளிவாக விளக்கி, எழுதிக் கொடுக்க வேண்டும்.
# ஒரு நோய்க் கிருமியின் தாக்கம் சமூகத்தில் அதிகமாகக் காணப்பட்டால், அந்த நோய்க் கிருமி மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்குச் செய்ய வேண்டியவை குறித்து நோயாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, முறையற்ற பால் கவர்ச்சியைத் தவிர்த்தல் போன்ற அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பால்வினை நோய்களை (Sexually transmitted disease) தடுக்கலாம். மேலும் தொற்றுத் தடுப்பூசிகள் (Vaccination) பற்றியும், கைகளைச் சுத்தமாகக் கழுவுவதன் (Hand Washing) அவசியம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
# மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு வேறொரு நோயாளிக்கு மருத்துவம் செய்வதற்கு முன், தங்கள் கைகளைச் சோப்பு நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இதனால் ஒரு நோயாளியிடம் இருந்து மற்றொரு நோயாளிக்குக் கிருமி பாதிப்பு (Hospital-acquired infection) பரவுவது தடுக்கப்படும். இதனால் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தின் (Antibiotic) தேவை குறையும்.
# மருத்துவமனை, அங்கு பயன்படுத்தப்படும் கருவிகளை நோய்த் தொற்று இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாடு - மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:
# நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது.
# நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்து ஓரிரு நாளில் உடல்நிலை சரியாகிவிட்டாலும், மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள்வரை அந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
# ஏற்கெனவே மருத்துவர் கொடுத்த மருந்து வீட்டில் மீதம் இருந்தால், நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது.
# உடல்நிலை சரியில்லை என நீங்களோ, குடும்பத்தில் யாருக்கோ மருத்துவர் பரிந்துரைத்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பிறர் உட்கொள்ளக் கூடாது.
# கைகளைச் சோப்பு நீரால் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமாகவும், நோய் தாக்கியவர்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பதன் மூலமாகவும், நோய்க் கிருமி தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமாகவும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.
கட்டுரையாளர், நாமக்கல் மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்கத் திட்ட மேலாளர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago