உயிர் வளர்த்தேனே 8: மாட்டுக்கே வழங்கும் மாற்றுப் பால்

By போப்பு

பசுவின் பாலிலும், எருமைப் பாலிலும் மனித உடலின் தேவைக்கு அதிகப்படியான கொழுப்பு இருப்பதாகவும், அதனால் அதை நீக்க வேண்டுமென்று பரவலாக நம்ப வைக்கப்பட்டுள்ளது. இப்படி நீக்குவதற்காகக் கேன் கேனாக, பேரல் பேரலாக, டேங்கர் டேங்கராக ஆலைக்குக் கொண்டு செல்லப்படும் மாட்டுப் பாலில் என்னென்ன ரசாயனக் கூறுகள் கலக்கப்படுகின்றன என்பதை நாமறியோம்.

நம் தெருவிலேயே கறந்து விற்கப்பட்ட பாலில் மிஞ்சிமிஞ்சிப் போனால் படிக்கு ஆழாக்குத் தண்ணீரைக் கலக்குவார்கள். அதையும் தம் ஆள்காட்டி விரல் நுனியை ‘லெக்டோ மீட்டர்’ எனும் பால்மானியாக மாற்றி அடர்த்தியை அளந்து பார்க்கும் திறன் மிகுந்த மகானுபாவர்கள் நம்மிடம் இருந்தார்கள்.

அப்படிப்பட்ட மகானுபாவர்களை முறியடிப்பதற்காகவே மாட்டைத் தெருவில் கட்டி, பால் போணியில் சொட்டு நீர் கிடையாது என்று வெட்ட வெளிச்சமாகக் கவிழ்த்துக் காட்டி, இளம் பவளச் செங்காம்பிலிருந்து தித்திக்கும் பாலை நுரைக்க நுரைக்கக் கறந்து `சுடச் சுட’ சொம்பில் ஊற்றி, கொஞ்சம் கொசுறும் ஊற்றி, சுவரில் கோடு கிழித்துக் கணக்கு வைத்த காலம் வெகு தொலைவுக்கு அப்பால் சுவடில்லாமல் மறைந்து போய்விட்டது.

தள்ளாடும் கன்றுகள்

இன்றும் நகரத் தெருமுனையில் அங்கங்கே பால் கறக்கிறார்கள். கறப்பதற்கு முன் ‘வள்ளல் பெரும் பசு’க்களின் பிட்டத்தில் ஸ்டீராய்டு ஊசியை எந்தக் கூச்சமும், அச்சமும் இல்லாமல் ஏற்றிய பிறகு கறக்கிறார்கள். இது ஒரு `அன்- அக்கவுன்ட்டபிள்’ பசுவதை.

`ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி’ என்ற சொலவடையை உருவாக்கும் அளவுக்குச் செழிப்புக்குப் பேர்போன மாட்டுக் கன்றுக்குட்டிகள், இன்றைக்கு ஜன்னல் கம்பிகள் போல எலும்பைத் துருத்திக்கொண்டு நிற்கத் திராணியற்றுத் தள்ளாடும் காட்சியைக் காணச் சகிக்கவில்லை.

கழிவுதான் உணவு

வளரும் பிள்ளைகளின் எலும்பு உறுதிக்குக் கால்சியம் அவசியம் என்ற மாயை, நம் தலையில் ஆணியாக அறையப்பட்டுவிட்டது. தரமான பால் வழங்கிய எந்தப் பசுவும் தன் பாலில் கால்சியம் இல்லாமல் போய்விடக் கூடாதென அன்றாடம் பத்து கால்சியம் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டது இல்லை. அல்லது சுண்ணாம்புச் சுரங்கங்களுக்குள் சென்று சுண்ணாம்புக் கல்லை மேய்ந்து வருவதும் இல்லை.

பச்சைப் புல், எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்ட நிலக்கடலை, எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றை உண்டுதான், `தொட்டு ஒரு வெள்ளைப் பொட்டு வைக்கலாம்’ என்பது போன்ற அடர்த்தியான பாலை மாடுகள் நமக்கு வழங்கிவந்தன.




பருத்திப்பால்

பால் சுரப்பு அதிகரிக்க

மாடு வைத்துப் பால் கறந்து விற்று ஜீவனம் செய்தவர்கள், தங்கள் மாடு கூடுதலாகப் பால் கறக்க ஓர் உத்தியை மேற்கொண்டார்கள். அது என்ன உத்தி? நம் காலத்தைய ரசாயன மூளை கொஞ்சம் குறுக்குமறுக்காகத்தான் யோசிக்கும். மனித அறத்தை மீறி இன்னொரு கோணத்தில் சிந்திக்கத் துணியாத நம் முன்னோர், என்ன செய்தார்கள் தெரியுமா?

பால் தரும் மாட்டுக்கே பால் ஊற்றினார்கள். என்ன பால்? அதுதான் பருத்திப் பால். தம் நிலத்தில் விளைந்த பருத்தியை ஆலையில் கொடுத்து, பஞ்சைப் பிரித்து, அதைத் துணி நெய்யக் காசுக்கு விற்றுவிட்டு, மீந்த பருத்திக் கொட்டையை ஊற வைத்து, தோளும் புஜமும் புடைக்க ஆட்டிப் பாலெடுத்து மாட்டுக்கு வாஞ்சையுடன் புகட்டினார்கள்.

பருத்திக் கொட்டையை ஆட்ட ஆட்ட இளம் மஞ்சளும் பச்சையுமாய்ப் பொங்கிவரும் பருத்திப் பால். சுதையும் பாலுமாக நிறைந்து கிடக்கும் அரைவையிலிருந்து கொஞ்சம் அள்ளி மாட்டுக்கு ஊட்டி, நெஞ்சம் கனிவார்கள் மாட்டை நேசிப்பவர்கள்.

பருத்திக் கொட்டை அரைவையை உண்ட பசுக்கள் பாலை அருவியாகச் சுரந்தளிக்கும். அவற்றின் மேனியும் ஜிகுஜிகுவென ஜொலிக்கும்.

காசநோய்க்கு மருந்து

பசு மாட்டுக்கு மட்டுமல்ல, பகலெல்லாம் வெயிலில் காடுகரைகளில் வண்டியை இழுக்கும், இரண்டு முழ ஆழத்துக்கு மண்ணை ஊடறுத்து ஏர் உழுது செல்லும் காளை மாடுகளுக்கும் பருத்திப் பாலை ஊட்டுவார்கள். அத்தனை வலுவைத் தரவல்ல பருத்திப் பால், தென்னகத்தில் குழந்தைகளுக்கும் ஏற்ற பாலாக இருந்தது.

காசநோய் எனப்படும் எலும்பை உருக்கும் நோய்க்குச் சிறந்த மருந்து, பருத்திப் பால். அந்தக் காலத்தில் பஞ்சு மில்லில் வேலை செய்து எலும்பைச் சிதைக்கும் டிபி நோய்க்கு ஆளான பாட்டாளிகளுக்காகவே வணிகரீதியாகப் பருத்திப்பால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இன்றளவும் மதுரை, காரைக்குடி, திருச்சி நகரத் தெருக்களில் குட்டியூண்டு தள்ளுவண்டியில் பருத்திப் பாலை வைத்துத் தள்ளிக்கொண்டு வந்து, பத்து ரூபாய்க்குச் சுடச்சுட விற்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நம் ஆரோக்கியக் காவலர்கள் மட்டுமல்ல. கலாச்சாரக் காவலர்களும்கூட!


பருத்திக்கொட்டை

(அடுத்த வாரம்: இன்றைக்குத் தயாரிக்க முடியுமா?)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்