உங்கள் டாக்டர் நல்லவரா?

By ந.வினோத் குமார்

கொஞ்சம் எதார்த்தம் பேசுவோம். மருத்துவமனையின் படிகளை மிதிக்கும்போது நம்மில் எத்தனை பேர், அனிச்சையாக நம் சட்டைப் பையைத் தடவிப் பார்ப்போம்; உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். நம்மில் எத்தனை பேர் இன்னொரு மருத்துவரிடம் ‘செகண்ட் ஒபீனியன்’ கேட்க வேண்டும் என்ற அவசியத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்?; மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவது தவறு என்பது தெரிந்தும் நம்மில் பலர் மருந்துகளை வாங்குகிறோம்தானே?

இதற்கெல்லாம் காரணம், நமது மருத்துவர்கள் மீது நமக்கு நம்பிக்கையில்லாமல் போனதுதான்! ‘ஏன் அந்த நம்பிக்கை இல்லாமல் போனது?’ என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறது கமல் குமார் மஹாவர் எனும் மருத்துவர் எழுதிய ‘தி எதிகல் டாக்டர்’ எனும் புத்தகம். ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் இந்தப் புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, மருத்துவம் படித்து, இங்குள்ள அரசுக் கட்டுப்பாடுகள், தலையிடல்கள், ஊழல்கள் போன்றவை ஏற்படுத்திய இடர்பாடுகளால், பல வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்குச் சென்றவர்தான் இந்தக் கமல்குமார். தற்போது அங்குள்ள ‘தேசியச் சுகாதாரச் சேவை’ அறக்கட்டளை மருத்துவமனையில் எடைக் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிவருகிறார். இந்திய மருத்துவத் துறையில் உள்ள குறைகளை விமர்சனப் பார்வையுடன் அணுகி வரும் இவர், அது தொடர்பான தன்னுடைய கருத்துகளை இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார்.

தடம் மாறும் மருத்துவம்

இந்திய மருத்துவர்கள், ‘மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா’ வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ்தான் நிர்வகிக்கப்படுகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், அதிலேயே பல குறைகள் இருப்பதுதான். முதலில் அவற்றைச் சீர் செய்ய வேண்டும் என்கிறார் கமல்குமார். அதற்கு அவர் சொல்லும் முக்கியக் காரணம்… போலி மருத்துவர்கள்!

மேற்கண்ட விதிமுறையின்படி, இந்தியப் பாரம்பரிய மருத்துவமுறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி மக்களுக்குச் சிகிச்சையளிப்பவர்கள், மருத்துவர்களாகவே கருதப்படுவதில்லை. ஆனால் காலம் காலமாக இந்த மருத்துவ முறைகள் நம் நாட்டில் நடைமுறையில் இருந்துவருகின்றன.

அலோபதி, பாரம்பரிய மருத்துவ முறைகள் எதையும் முறைப்படி கற்றுக்கொள்ளாமல், மக்களுக்குத் தவறான சிகிச்சையளித்து, கொள்ளையடிக்கிற போலி மருத்துவர்கள் கூட்டம், உண்மையான மருத்துவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய நியாயமான வருமான வாய்ப்பைத் தடுக்கிறது. இதன் காரணமாக, உண்மையான மருத்துவர்கள் பலர், நோயாளிகளைப் பிடிக்க ஏஜெண்ட் வைப்பது, தேவையில்லாத மருந்துகளை எழுதித் தருவது, தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்யச் சொல்லி ஒரு குறிப்பிட்ட ‘லேப்’புக்கு மட்டும் அனுப்புவது, பிறகு அந்த ‘லேப்’பிலிருந்து குறிப்பிட்ட சதவீதத்துக்குக் கமிஷன் வாங்கிக் கொள்வது போன்ற குறுக்கு வழிகளில் வருமானத்தை ஈட்ட முயற்சிக்கிறார்கள்.

அடிப்படையே தவறு

இந்த நிலைமை ஏன் வந்தது என்ற கேள்விக்கு ‘அடிப்படையே தவறு’ என்கிறார் நூலாசிரியர். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருமே தேவையான தகுதிகளோடு வெளியே வருகிறார்களா என்றால் இல்லை. எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்தால் போதாது. உயர்கல்வி கற்க வேண்டும். அதற்குக் கடின உழைப்பையும் கூடுதலான நேரத்தையும் செலவழிக்க வேண்டும். ஆனால், இளநிலை மட்டுமே படித்த ஒரு பயிற்சி மருத்துவர், சுமார் 16 முதல் 18 மணி நேரம்வரை அரசு மருத்துவமனைகளில் செலவிடுகிறார்.

அவருக்கு, அவருடைய பேராசிரியர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. ஏனென்றால், அவருக்கு அரசு மருத்துவமனையில் போதிய வருமானம் கிடைக்காது. அதனால் தன்னுடைய அலுவலக நேரத்துக்குப் பிறகு தனியே ‘பிராக்டிஸ்’ செய்து லாபம் ஈட்டும் முனைப்பில் அவர் இருப்பார். அதனால், தனக்குக் கீழே பயிற்சி பெறும் மாணவருக்குப் போதுமான நேரத்தை அவர் செலவழிப்பதில்லை.

இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், மருத்துவம் படித்து வெளியே வரும் பெரும்பாலான மாணவர்கள் மிகக் குறைந்த காலத்தில் உடனடி லாபத்தை ஈட்ட நினைக்கிறார்கள். காரணம், அவர்கள் தங்கள் படிப்புக்கு லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பார்கள். எல்லாருக்குமே அரசுக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்காது, இல்லையா? அதனால் பலர் தனியார்க் கல்லூரிகளில் படிப்பார்கள். அங்குத் தாங்கள் செலவழித்த காசை எல்லாம், இந்தச் சமூகத்திலிருந்து எடுக்க நினைப்பார்கள். எனவே, பலர் நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் தேவையான அளவு மருத்துவர்கள் இல்லை.

அப்படியே இருந்தாலும், அங்கும் அவர்களுக்குத் தேவையான அளவு வருமானம் கிடைப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்களும் நகரத்தை நோக்கி நகர்கிறார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக நகரங்களில் ஏற்கெனவே அவர்களுக்கு நிறையப் போட்டியாளர்கள் இருப்பார்கள். எனவே, தான் ஒரு சிறந்த மருத்துவர் என்பதை நிரூபிக்க அதிகமாகப் போராட வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகக் குறுக்கு வழிகள் ஈர்த்து விடுகின்றன.

பெரும் மாயை

பொதுவாக நம் ஊரில், குறைந்த கட்டணம் வாங்கும் ஒரு மருத்துவரை ‘இவரு அவ்ளோ நல்லா பார்க்க மாட்டாருப்பா’ எனும் விமர்சனத்துக்கு ஆளாக்கும் மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு. கல்வித் துறையைப் போலவே பெரிய மருத்துவமனை, நிறைய பணம் வாங்கும் மருத்துவர்தான் சிறந்த மருத்துவர் என்றொரு மாயை இங்கு உண்டு. இது எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணம், மருந்து நிறுவனங்களும் மருத்துவ ஆய்விதழ்களும் என்கிறார் ஆசிரியர். எப்படி?

உலகளவில் பிரபலமான நான்கைந்து மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவர் ஒருவர் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டால், அவர் சிறந்த மருத்துவர் என்று கொண்டாடப்படும் மனநிலை பலருக்கும் உள்ளது. கூர்ந்து கவனித்தால், அவர் மேற்கொண்ட ஆய்வு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தின் மருந்து நல்லது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கும்.

அவ்வளவு ஏன், அந்த ஆய்வே அந்த மருந்து நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்கொண்டதாகக்கூட இருக்கலாம். அதேபோலத் தனது ஆய்வு முடிவுகளைச் சக மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள, அந்த மருந்து நிறுவனங்களே வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வார்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நோயாளிகள் சொல்வதைப் பல மருத்துவர்கள் காது கொடுத்துக் கேட்காததும், காது கொடுத்துக் கேட்கும் மருத்துவர்கள் மீது நோயாளிகளுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமே. அடுத்த முறை உங்களுக்கு நம்பகமான மருத்துவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் அவரை முழுமையாக நம்புங்கள். அதற்கு மருத்துவர்களும் மக்களை நோக்கி நெருங்கி வர வேண்டிய அவசியம் இருக்கிறது.

மருத்துவத் துறை: சுடும் நிஜங்கள்

நாட்டில் எத்தனை போலி மருத்துவர்கள் உள்ளனர் என்பதை அறிவதற்கான வழி இன்றைக்கு இல்லை. சரி, பதிவு பெற்ற உண்மையான மருத்துவர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேர் எந்தெந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் கடந்த காலத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்கள் என்பது பற்றியெல்லாம் தகவலறிய முறையான வலைத்தளம்கூடக் கிடையாது!

> மருத்துவர்கள் தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் வேதியியல் பெயர்களை (ஜெனரிக்) எழுத வேண்டுமா? அல்லது பிராண்ட் பெயர் எழுத வேண்டுமா? ஜெனரிக் மருந்துகளை எழுதிக் கொடுத்தால், அதிலேயே பல பிராண்ட்கள் இருக்கும். அதில் எதை மருந்துக் கடைக்காரர் தேர்வு செய்து கொடுப்பார்? அது மட்டுமல்லாமல் பிராண்டுக்குப் பிராண்ட் விலை அதிகரிக்கும், குறையும். இந்தக் கேள்விகளுக்கு இன்று பதிலில்லை.

> ‘நான் ஒரு நோயாளியை உயர்சிகிச்சைக்காக உன்னிடம் அனுப்புகிறேன். அதற்கான தொகையை எனக்குத் தந்துவிடு. அல்லது உன்னிடம் சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை பெற வருபவர்களை எனக்கு அனுப்பு’ எனும் ‘கட் பிராக்டீஸ்’ எனப்படும் மருத்துவர்களுக்கு இடையேயான பரஸ்பரத் தரகு முறையை ஒழிக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

> மருத்துவர்களுக்குப் பயிற்சி வழங்க, நேரலை அறுவைசிகிச்சை மாநாடு (லைவ் ஆபரேட்டிங் கான்ஃபரன்ஸ்) போன்ற விஷயங்களில் மருத்துவமனைகள் ஈடுபடுவது சரிதானா? பதில் இல்லை!

> மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கும் நடைமுறைக்கு எதிராக இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இல்லை!

> வெளிநாடுகளிலிருந்து மருந்துகள், மருத்துவக் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்தால் அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகளில் மருத்துவமனைகளுக்கு நிறைய சலுகைகள் தரப்படுவது உண்டு. அப்படிப் பல சலுகைகளைப் பெறும் மருத்துவமனைகள் ஏழைகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இலவசப் படுக்கைகளை வழங்கியாக வேண்டும். ஆனால், எத்தனை மருத்துவமனைகள் அப்படிச் செய்கின்றன? பதில் இல்லை.

> மருத்துவமனைகளை நெறிப்படுத்த மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் விதிமுறைகள்) சட்டம் 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை இதுவரை 10 மாநிலங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இந்தச் சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்