ஆயுர்வேதம் (ஆயுள் வேதம்) என்பது நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களுள் ஒன்று. ஆயுள் என்ற சொல்லுக்கு வாழ்க்கை என்றும், வேதம் என்ற சொல்லுக்கு அறிவு (மெய்ஞானம்) என்றும் பொருள். ஆயுர்வேதம் என்றால் வாழ்க்கையைப் பற்றிய மெய்யறிவு என்று பொருள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் பரத்வாஜர் தலைமையில் ரிஷிகள் ஒன்றுகூடி, மக்களின் நோய்களைத் தீர்க்க ஆலோசனை நடத்தினர். பரத்வாஜரின் முக்கிய சீடர் ஆத்ரேயர். ஆத்ரேயருக்கு ஆறு சிஷ்யர்கள் இருந்தனர். அதில் முக்கியமானவர் அக்னிவேசர். அக்னிவேசரின் காலம் கி.மு. 7-ம் நூற்றாண்டு. இவர் அக்னிவேச ஸம்ஹிதை என்னும் நூலை எழுதினார். அதைச் சரகர் தொகுத்துச் சரக ஸம்ஹிதை என்று பெயரிட்டார் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு). இது ஆயுர்வேதத்தின் முக்கிய நூலாகக் கருதப்படுகிறது. அதேபோல் தன்வந்திரியின் முக்கிய மாணவரான சுஷ்ருதர் அறுவை சிகிச்சையைப் பிரதானமாகக் கொண்டு சுஷ்ருத ஸம்ஹிதை என்னும் நூலை எழுதினார் (கி.மு. 500). பின்னர் நோயைக் கண்டுபிடிப்பதற்கான மாதவ நிதானம் (கி.பி. 7-ம் நூற்றாண்டுக்குப் பின்) என்னும் நூல் எழுதப்பட்டது. மருந்துகளின் செய்முறை விளக்கத்துக்காகச் சாரங்கதர ஸம்ஹிதை என்னும் நூல் 13-ம் நூற்றாண்டில் சாரங்கதரர் என்பவரால் எழுதப்பட்டது.
கிரேக்கம் சென்றது
மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 326-ல் வடஇந்தியாவுக்குப் படை எடுத்தார். அதற்கு முன்பே இந்திய மருத்துவ அறிவு கிரேக்க நாட்டுக்குச் சென்றிருக்கலாம். ஆனால், இந்தப் படையெடுப்பின் மூலம்தான் இரு நாடுகள் இடையே கலாசார இணைப்பு ஏற்பட்டதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. இங்கிருந்த ஆயுர்வேத மருத்துவர்களின் திறமையைக் கண்டு வியந்த அலெக்சாண்டர், விஷம் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் அவர்கள்தான் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது சில மருத்துவர்களையும் அழைத்துச் சென்றார்.
கடந்து வந்த பாதை
மகத மன்னனான பிம்பிசாரரின் அரசவை மருத்துவர் ஜீவகர். கௌதமப் புத்தர், அவரது சீடர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டவர். ஜீவகர் மேற்கொண்ட அற்புதச் சிகிச்சைகள் பற்றி பல கதைகள் உண்டு.
கல்வி மையமாக விளங்கிய தட்சசீலத்தில் ஏழு ஆண்டுகளுக்கு அவர் கற்றார். அதற்குப் பின் ஒரு நாள், ஜீவகரிடம் அவருடைய குரு ஒரு மண்வெட்டியைக் கொடுத்து, அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு மைல் சுற்றளவில் மருந்துக்குப் பயன்படாத ஏதாவது ஒரு செடி இருக்கிறதா என்று தேடிக்கொண்டு வரும்படி கூறினார். இது அவரது இறுதி பரீட்சையின் ஒரு பகுதி. ஜீவகர் சுற்றிப் பார்த்துவிட்டு மருந்துக்குப் பயன்படாத செடி எதுவுமே இல்லை என்று தெரிவித்தார். பரீட்சையில் அவர் தேறிவிட்டதாகக் குரு கூறினார். மருந்துக்குப் பயன்படாத எந்தப் பொருளுமே உலகில் இல்லை என்று ஆயுர்வேதம் திடமாக நம்புகிறது.
அறிவின் அனைத்துத் துறைகளையும் ஆதரித்த புத்தப் பிட்சுகள் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கினர். அவற்றில் மருத்துவமும் இடம்பெற்றிருந்தது. இதில் குறிப்பிடத்தக்கது பிகாரில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம். இது கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டுப் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை செயல்பட்டது.
யுனானியும் ஆயுர்வேதமும் நெருங்கிய தொடர்புடையவை. முஸ்லிம் மன்னர்கள் யுனானி முறையை ஆதரித்தாலும், ஆயுர்வேதமும் தழைக்கத்தான் செய்தது. பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டில் சாரங்கதர ஸம்ஹிதை என்ற நூல் எழுதப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் இந்திய மருத்துவ முறைகள் அனைத்தையும் தொகுக்கும்படி அக்பர் ஆணையிட்டார். அவருடைய நிதி மந்திரி ராஜா தோடர்மால் இதற்கு உதவியாக இருந்தார்.
மருத்துவ முன்னோடி
1835-க்கு முன் மேல்நாட்டு மருத்துவர்களும் இந்திய வைத்தியர்களும் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அதன் பின்னர் மேனாட்டு வைத்தியம்தான் பயன்படுத்தவேண்டும் என்று சட்டம் வந்தது. இந்திய வைத்தியம் ஆதரவிழந்தது. அனுபவமிக்க வைத்தியர்கள் தங்கள் அறிவைப் பிறருக்கு வழங்க வாய்ப்பில்லாமல் மறைத்துவிடவே, தொடர்ந்து பல வருடங்களில் வளம்மிக்க அனுபவ அறிவு மறைந்துவிட்டது.
சுஷ்ருத ஸம்ஹிதையில் காணப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தோன்ற அஸ்திவாரமாக அமைந்தது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தை என்று சுஷ்ருதர் போற்றப்படுகிறார். 18-ம் நூற்றாண்டின் இறுதிவரை ஆயுர்வேத வைத்தியர்கள் கண்புரை சிகிச்சை, பித்தப்பை கல் அகற்றுதல் போன்றவற்றைச் செய்துவந்திருக்கிறார்கள்.
ஆயுர்வேதத்தை நிறைய மாற்றங்கள் நவீனப்படுத்தியிருந்தாலும் அதன் பழைய நூல்கள்தான் இப்போதும் வழிகாட்டுகின்றன. எது ஆயுர்வேதம், எது ஆயுர்வேதம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
மாதவர் நோயைக் கண்டறிவதில் நிபுணர் என ஒரு பாடல் குறிப்பிடுகிறது. வாக்படர் சூத்திரங்களில் விற்பன்னர். சுஷ்ருதர் உடல் கூற்றை நன்கு அறிந்தவர். உள்ளுக்கு மருந்து கொடுப்பதில் சரகருக்கு இணை யாருமில்லை. வாக்படரின் அஷ்டாங்க ஹிருதயம் என்ற நூல் இன்றைய ஆயுர்வேத மருத்துவர்களிடையே பிரபலமாக உள்ளது. முந்தைய நூல்களின் முக்கிய பகுதிகள் இதில் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.
நவீன உலகம்
இன்றைக்கு இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மருத்துவ முறைகளில் ஒன்றாக ஆயுர்வேதம் திகழ்கிறது.
இந்திய மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ தினசரிப் பேசும்போது ஆயுர்வேதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் வாழும் படிக்காதவர்கூட, தயிர் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் கட்டும் என்கிறார். நிறைய பேர் வேர்களையும் பச்சிலைகளையும் தினசரிப் பயன்படுத்துகிறார்கள். வெட்டிவேர் உடலின் ‘சூட்டை’த் தணிக்கும், கோடைகாலத்தில் சற்று இதம் அளிக்கும் என்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக மக்கள் வாழ்வில் அது இணைந்துவிட்டது.
எனது 12 வருட காலச் சிகிச்சை அனுபவத்தில் லட்சக்கணக்கான நோயாளிகளைப் பார்த்த நிலையில் அக்யூட் இன்ஃபெக்ஷன், ட்ரோமா போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை தர முடிவதில்லை. முற்றிய நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, காக்காய் வலிப்பு, காசநோய் போன்றவற்றுக்கு ஆங்கில மருந்து சிறந்ததாக இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் ஆயுர்வேதம் ‘சப்ளிமெண்ட்’ ஆகப் பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரிழிவு நோய் மருந்து எடுக்கிற ஒருவர் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருவேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை எடுக்கும்போது இதன் ரசாயனத் தன்மை (ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் ப்ராப்பர்ட்டி) காரணமாக டயபடிக் ரெட்டினோபதி, நியூரோபதி, வாஸ்குலோபதி தவிர்க்கப்படுகிறது. இனி வரும் காலத்தில் இரண்டில் உள்ள நல்ல விஷயங்களும் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இவற்றுக்குள் (ட்ரக் இன்டராக் ஷன்) இருக்கிறதா என்பதை எடுத்துச் சொல்ல இரண்டிலும் தேர்ச்சி பெற்ற, அறிவு வாய்ந்த மருத்துவர்கள் உருவாக வேண்டும். முடிந்தவற்றை நன்றாகச் செய்ய வேண்டும். முடியாதவற்றை முடியாது என்று சொல்ல வேண்டும். எந்த மருத்துவத்திலும் குணமடையாதது என்று உண்டு, அந்த உண்மையையும் மக்களிடம் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தேவையான உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள பொது மருத்துவம் தொடர்பான கேள்விகளை எழுதி அனுப்பலாம். உங்களுக்கு வழிகாட்டவும், என் அனுபவத்தில் கிடைத்த அறிவையும் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
(அடுத்த வாரம் சந்திப்போம்.)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
41 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago