எங்களுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகளாகிவிட்டது. குழந்தைப்பேறு இல்லை. என் கணவருக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எனக்கு HSG பரிசோதனைக்குப் பின்னர் சினைப்பைக் குழல் அடைப்பாயிருக்கும் எனச் சொல்கிறார்கள். PCOD-ம் உள்ளது. மருந்துகள், IUI, ICSI எனப் பல முயற்சிகளைச் செய்து பார்த்துவிட்டேன், பலனில்லை. நிறைய மனக்கவலையுடன் இருக்கிறோம். சித்த மருத்துவம் எங்கள் கவலையைப் போக்குமா?
- மகேஸ்வரி, சென்னை
உங்கள் மனக்கவலை புரிகிறது. நவீன, துரித வாழ்க்கை முறையில் அதிகரித்துவரும் பிரச்சினைகளில் முக்கியமானது இயல்பான கருத்தரிப்பு.
தோட்டத்துப் பூச்செடியின் மொட்டு எப்போது மலர்ந்தது எனத் தெரியாமல் அதிகாலையில் பார்த்தவுடன் ஆச்சரியமாய்க் கண்கள் விரித்து நாம் மகிழ்வது போல, கருத்தொருமித்து, அன்பில் திளைக்கும் தாம்பத்திய உறவில், கருத்தரிப்பும் அப்படித்தான் நிகழ வேண்டும். மலரினும் மெல்லியது காமம் என்பதைப் புரிந்து மகிழ்வதில் நிகழும் கருத்தரிப்புக்கு நிச்சயம் கூடுதல் பொலிவும் பயனும் உண்டு. அழகான, ஆரோக்கியமான குழந்தைப் பேறுக்கு அடுப்பங்கரையின் பங்கு மிக அதிகம்.
பரிசோதனை முடிவுகளைக் கண்டு பயமோ, பதற்றமோ தேவையில்லை. இயற்கையின் நுணுக்கமான அசைவுகளைப் புரிந்துகொள்ளும் துல்லியமான சோதனைகள் என்று இதுவரை எதுவும் கிடையாது. கருத்தரிப்பு மாதிரியான விஷயங்களுக்கு இது மிகவும் பொருந்தும். 40 மில்லியன் விந்தணுக்களில் எந்த விந்து முந்துகிறது? எந்த முட்டை முன்வருகிறது என்றெல்லாம் இன்று வரை யாருக்கும் தெரியாது.
சினைப்பை நீர்கட்டிகள் (Poly cystic ovary) குறித்த தேவையற்ற பயம் வேண்டாம். மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர, வேறு பெரும் பிரச்சினைகள் சினைப்பை நீர்கட்டிகளால் ஏற்படாது. கருமுட்டையானது உடைந்து கரு கருப்பைக்கு வரும் ஒழுங்கை தாமதப்படுத்துவதைத் தவிர, சினைப்பை நீர்கட்டிகள் வேறு பெரும் சிக்கல்கள் எதையும் தருவதில்லை. பாலி சிஸ்டிக் ஓவரி என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low glycemic foods) உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்தான்.
இது தவிரப் பூண்டுக் குழம்பு, சின்ன வெங்காய தயிர் பச்சடி, எள்ளுத் துவையல், கருப்பு தோல் உளுந்து சாதம் ஆகியவையும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையைத் தீர்க்க உதவிடும். சுடு சாதத்தில், வெந்தயப் பொடி 1 ஸ்பூன் அளவுக்குப் போட்டு மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது. கூடவே நடைப்பயிற்சியையும் / உடற்பயிற்சியையும், யோகாசனப் பயிற்சியையும் அதிகரியுங்கள். பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம்.
HSG சோதனையின் முடிவில் கருக்குழாய் பாதை அடைப்பை நினைத்து வருந்த வேண்டியது இல்லை. பல நேரம் சோதனையின்போது, உளவியல் ரீதியாகப் பெண்ணின் மனதில் ஏற்படும் மனஅழுத்தத்தால் உருவாகும் தசை இறுக்கம் காரணமாகக்கூட அப்படி ஏற்படும்.
உங்கள் கணவரின் விந்து அணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, விந்து அணுக்களின் இயக்கத் தாமதம் என இரண்டுக்குமே, உணவில் முளைகட்டிய பயறு வகைகளும், லவங்கப்பட்டை, சாதிக்காய், போன்ற நறுமணப் பொருட்களும் நிறைய சேர்க்க வேண்டும். தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரப்பருப்பு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினைகளைக் குறைக்கக் கண்டிப்பாக உதவும்.
போகம் விளைவிக்கும் கீரைகள் எனச் சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றைக் கண்டிப்பாய் சமைத்துச் சாப்பிட வேண்டும்.
புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவுக்கு விந்து அணுக்களை அதிகரிப்பதிலும் இதன் இயக்கத்தைக் கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கின்றன இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்.
பூனைக்காலி விதை, ஓரிதழ்தாமரை, நிலப்பனைக் கிழங்கு, முதலான பல சித்த மருத்துவ மூலிகைகள் பயனளிப்பதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்தியுள்ளது. நெருஞ்சில் முள் விந்தணுக்களின் உற்பத்தி நடைபெறும் செர்டோலி செல்கள் சிதைவைக்கூடச் சரிசெய்வது தெரியவந்துள்ளது. உங்கள் கவலையைச் சித்த மருத்துவம் நிச்சயம் போக்கும்.
என்னுடைய எடை 64 கிலோ, உயரம் 178 செ.மீ. என்னுடைய உயரத்துக்கு 75-80 கிலோ எடை இருக்க வேண்டும். இப்போது நான் ரொம்பவும் ஒல்லியாக இருப்பதால், என்னுடைய எடையை அதிகரிக்க விரும்புகிறேன். சில நேரம் எனக்குப் பசிப்பதே இல்லை. என்னுடைய எடையை எப்படிக் கூட்டுவது?
- டி.வேல்முருகன், நாமக்கல்
தேறாத உடலையும் தேற்றும் தேற்றான்கொட்டை என்று சித்த மருத்துவ மொழி உண்டு. அந்தத் தேற்றான்கொட்டையை லேகியமாகச் செய்து சித்த மருத்துவர்கள் தருவார் கள். அதேபோல் வெண்பூசணி லேகியமும் உடல் சூட்டைத் தணித்து எடையைக் கூட்ட உதவும். உடல் எடை உயர, உணவில் சில கஞ்சி வகைகளைச் சேர்த்துக்கொள்வது பெரிதும் உதவும்.
பஞ்சமூட்ட கஞ்சி (பஞ்சகாலத்தில் ஊட்டம் தரும் கஞ்சி என்ற பெயர்தான் இப்படி மருவிவிட்டது), நேந்திர மாவுக் கஞ்சி, பாசிப்பருப்பு நெய்யுருண்டை, உளுந்து - கருப்பட்டி - நல்லெண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் களி போன்றவை உடல் எடையை ஆரோக்கியத்துடன் அதிகரிக்க உதவும் பாரம்பரிய உணவுகள். எடை குறைவுக்குப் பின்னணியில் நோய் இருக்கிறதா எனக் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசிப்பதும் மிக முக்கியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago