கூரையில் படர்ந்த சுரை, தரையில் தவழ்ந்த பூசணி, பூமிக்குள் மறைந்த கிழங்குகள், பசுமையாகத் துளிர்த்த கீரைகள், வீடுகளைச் சுற்றி வளர்ந்த காய்கள் போன்றவற்றின் துணைகொண்டு, பண்டைய தமிழர்கள் வெயில் காலச் சமையல் நுட்பங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு பருவநிலைக்குத் தகுந்த பழங்களும் காய்களும் நம்மைச் சுற்றியே ஏராளமாய் இருக்கின்றன. காய்கள், பழங்கள் போன்றவை நமக்கு ஊட்டச்சத்தை அள்ளிக் கொடுப்பது மட்டுமன்றி, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நம் உடலின் இயங்குமுறையையும் முறைப்படுத்துகின்றன.
ஆதாம், ஏவாள் காலம் தொடங்கி இன்றைய `டெஸ்ட் டியூப் குழந்தைகள்’ காலம்வரை, இயற்கையின் கொடையான காய்கள், கனிகள் மற்றும் கீரைகளே ஆரோக்கியத்தை வழங்கிவருகின்றன. காலத்துக்கு ஏற்ப விளையும் காய்களையும் பழங்களையும் சாப்பிடுவதால், குறிப்பிட்ட காலநிலையை உபாதைகள் இன்றி நகர்த்தலாம். அந்த வகையில் கொதிக்கும் வெயிலின் தாக்குதலை எதிர்கொள்ளக் காய்கள், கீரைகள், கனிகளின் பங்களிப்பைப் பார்ப்போம்.
ரத்தஅழுத்தம் போக்கும் தர்ப்பூசணி
உடலின் நீர் உறிஞ்சப்படும் வெப்ப காலத்தில், தாகத்தை நிவர்த்தி செய்வதில் நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணிக்குச் சிறப்பான இடமுண்டு. American journal of Hypertension வெளியிட்ட ஆய்வு முடிவில், தர்ப்பூசணி உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. எனவே, டென்ஷனைக் குறைக்க நினைப்பவர்கள் தர்ப்பூசணியைத் தாராளமாய்ச் சாப்பிடலாம். உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, தோல் பகுதிக்கும் நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. இதில் 92 சதவீதம் நீர்ச்சத்து, 3.2 சதவீதம் நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உள்ளன.
மற்ற காய்கள், பழங்களைவிட தர்ப்பூசணியில்தான் ‘லைகோபீன்கள்’ அதிகம். லைகோபீன்களுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு. மக்னீசியம், இரும்புச் சத்து நிறைந்த இதன் விதைகளை வறுத்துச் சாப்பிடும் வழக்கம் சில மலை கிராமங்களில் உண்டு. விதைகள் இல்லாமல் உலா வரும் `ஹைபிரிட்’ வகை மலட்டுத் தர்ப்பூசணிகளைத் தவிர்ப்பது நல்லது. வெயில் கால உபாதைகளைத் தடுப்பதோடு, நாம் எதிர்பார்க்கும் அளவைவிட அதிகப் பலன்களைத் தரும் ‘தண்ணீர் பழத்தை’ மரபணு மாற்றத்துக்கு இரையாக்காமல் இருப்பது அவசியம்.
நன்மை நவிழும் நெல்லி
கோடைக் கால நோய்களைத் தடுக்க, கோட்டைபோல ‘எதிர்ப்பு சக்தியை’ தரக்கூடியது நெல்லிக்காய். மலைத்தேனில் ஊற வைத்த நெல்லிக்காய், கேரள மலைப்பகுதிகளில் கிடைக்கும் சுவையான `ஊறல் உண்டி’. நெல்லிக்காயோடு சேர்த்துத் தேனுக்கும் நோய் எதிர்ப்பு திறன் உண்டு. `தேன் நெல்லிக்காயை’ வீட்டிலேயே தயார் செய்வதால், வைட்டமின் `சி’ இல்லம் தேடி வரும். கோடை மழையால் ஏற்படும் வெப்பநிலை மாற்ற நோய்களைத் தடுக்கிறது நெல்லி. நெல்லியின் மேன்மையை அறிந்த பண்டைய தமிழர்கள், `நெல்லிக்காய் மாலையை’ கழுத்தணியாகப் பயன்படுத்தியுள்ளனர். `நெல்லியைச் சாப்பிட்டால் ஆயுள் கெட்டி’ எனப் பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன முன்னோரது ஞானத்தை, இன்று விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
விளாம் பழக் கூழ்
பனிக்கூழ் (Ice cream) சாப்பிட ஆசையா? விளாம்பழத்தின் ஓடுகளை இரண்டாகப் பிளந்து, பழச்சதையோடு தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கலக்கி, அப்படியே சாப்பிடும்போது, இயற்கையான பனிக்கூழ் நாவின் சுவை மொட்டுகளைத் தூண்டி இனிமையைத் தரும். பனிக்கூழின் முன்னோடி விளாம்பழமோ என ஆச்சரியம் அடையும் அளவுக்கு, சுவையிலும் மணத்திலும் ஐஸ்கிரீம்களைத் தோற்கடிக்கும் விளா!
விளாம்பழம், சூட்டினால் உண்டான நீர்வேட்கையைத் தடுக்கும் (வெப்பாருந் தாகமும் போம்) என அகத்தியரும், பித்தம் சார்ந்த நோய்களை நீக்கும் எனத் தேரையரும் விளாம்பழத்தின் பெருமைகளைக் கூறுவதால், வெப்பக் காலத்துக்கு உகந்தது. மட்பாண்டங்களுக்கு வாசனையைக் கொடுக்க விளாம்பழத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்ற செய்தியை, ‘விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசி’ எனத் தொடங்கும் நற்றிணை பாடல் மூலம் அறியலாம். பீட்டா கரோட்டின், தயமின், ரிபோஃபோளோவின், டானின் ஆகிய ஊட்டச்சத்துகள் விளாம்பழத்தில் அதிகம் உள்ளன.
பலன் தரும் பழங்கள்
வெயில் காலத்தை, குளிர்ச்சியால் முலாமிடக்கூடிய பழம் `முலாம்’. சாறாகவும், நாட்டுச் சர்க்கரை சேர்த்த பண்டமாகவும் இப்பழத்தை உண்ணலாம். தாகத்தைத் தணித்து, சோர்வைப் போக்கி, உடனடியாகப் புத்துணர்வைக் கொடுக்கும். பப்பாளி, கொய்யா, ஆப்பிள், சப்போட்டா, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, வாழை போன்றவற்றை ரசனைக்கேற்ப `சாலட்களாக’ சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலத்தை எளிமையாக வெளியேற்ற இவை உதவும்.
ஸ்டிராபெரி, கிரான்பெரி, டிராகன் புரூட் மற்றும் வாயில் பெயர் நுழையாத சில பழங்களில்தான் அதிக ஊட்டம் கிடைக்கும் என்பது தப்புக் கணக்கு. நமக்கு நன்கு பரிச்சயமான நம்மூர் பழங்களிலேயே, இறக்குமதிப் பழங்களில் உள்ள சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன.
நீர்க் காய்கள்
அக்னி வெயிலில் உண்ணத் தகுந்த காய் வகைகளில் நீர்த்தன்மை நிறைந்த சுரை, புடல், பீர்க்கங்காய் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம். இவை அனைத்துக்கும் குளிர்ச்சியை உண்டாக்கும் குணம் இருப்பதோடு, நீர்த்தன்மையை உடலில் தக்கவைக்கவும் உதவுகின்றன. இவற்றைக் கூட்டாகவோ, பொறியலாகவோ செய்து சாப்பிடும்போது, சிறிது மிளகுத் தூளும் சேர்த்துக்கொள்வதால், கபம் தலை தூக்காது.
சுரைக்காயில் சாறெடுத்தும் குடிக்கலாம். வெப்பம் காரணமாக உண்டான தலைவலிக்கு நெற்றிப் பகுதியில் சுரைக்காயை வைத்துக் கட்டலாம் என்கிறது சித்த மருத்துவம். நீச்சல் பயில உதவிய சுரைக் குடுவையைப் போல, வெப்பத்தை வெல்லவும் சுரைக்காய் கண்டிப்பாக உதவும். சுரையில் 95 சதவீதம் நீர்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நீர்க்காய்கள் ஜீரணத்தையும் விரைவுபடுத்துகின்றன. முள்ளங்கி, வெண்பூசணி, தயிர் சேர்த்த பச்சடி (வாழைத் தண்டு / வெள்ளரி / சிறுவெங்காயம்) ஆகியவை அனலைத் தணிக்க உதவும்.
வெல்லும் வெள்ளரி
குளிர்ச்சி உண்டாக்குவது, சிறுநீர் எரிச்சலைக் குறைப்பது, நீர்வேட்கையை நிவர்த்தி செய்வது என வெயிலை எதிர்த்து முன்னின்று போராடும் `படை தளபதி’ வெள்ளரி. இதன் விதைகளுக்குச் சிறுநீர் பெருக்கும் செய்கை இருப்பதால் கோடைக் காலத்தில் உண்டாகும் நீர்ச்சுருக்கு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை வராமல் பாதுகாக்கும். `முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு’ எனத் தொடங்கும் `மலைபடுகடாம்’ பாடல், வெள்ளரி சேர்த்துச் சாதம் சமைத்ததாகக் குறிப்பிடுகிறது. பாடல் குறிப்பிடும் வெள்ளரி சாதம் பரிமாறப்பட்டபோது, சங்கக் காலத்தில் வேனிற் காலமாக இருந்திருக்கலாம்! வெடிப்புகள் உண்டான வெள்ளரி பழத்தின் சதையோடு, பனைவெல்லம் கலந்து உண்பது குளிர்ச்சியானது, சுவையானதும்கூட. கடந்த தலைமுறையினருடைய வேனிற் விடுமுறையின் விருப்பப் பண்டம் இந்த வெள்ளரி பழம்.
குளிர்ச்சி தரும் கீரைகள்
வைட்டமின்கள், தாதுகளின் தொழிற்சாலையாக விளங்கும் கீரை வகைகள், உடலில் குளிர்ச்சியை நிலைபெறச் செய்யக்கூடியவை. அதிகமாக நாம் பயன்படுத்தத் தவறிய கொடிப் பசலைக்கீரை, வெயில் காலத்துக்கே உரிய ‘சிறப்பு மருத்துவர்’. பருப்பு சேர்த்துப் பசலை கீரையைக் கடைந்து சாப்பிட, அழல் தணிந்து சிறுநீர் எரிச்சல் மறையும். Lutein, zea-xanthin போன்ற எதிர்-ஆக்ஸிகரணப் பொருட்கள் கொடிப்பசலையில் அதிகம். சிறுகீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை என வெயில் காலம் முழுவதும் கீரைகளை மாற்றி மாற்றி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மலத்தை முழுமையாக வெளியேற்றுவதில் கீரைகளுக்கு முக்கியப் பங்குண்டு. கீரை வகைகளை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். நோய்களை எதிர்த்துப் போராட ஆதிமனிதர்களிடம் இருந்த ஆயுதங்களே காய்கனிகள்! இப்போது நோய்களோடு பாதி மனிதர்களாய் வாழும் நம்மிடமும் அந்த ஆயுதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி நோயில்லா முழு மனிதர்களாக மாறுவோம். வெயில் காலத்துக்கு ஏற்ப நம் உடலைத் தகவமைக்க உதவும் பழங்கள் மற்றும் காய்களை, வயிற்றுக்குப் பரிசளித்தால் வேனலும் இனிதே!
கோடைக் கால எச்சரிக்கை!
# குழந்தைகளுக்குத் தகுந்த இடைவெளிகளில் நீர் கொடுப்பது அவசியம்.
# பழச்சாறுகளைப் பொறுத்த வரையில் வீட்டிலேயே தயார்செய்து கொடுக்கலாம். அதிகக் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளைச் சேர்ப்பதால், குழந்தைகளுக்கு உடனடியாகச் சளி, இருமல், காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு.
# முதியவர்களுக்குத் தாக உணர்வு சிறிது குறைந்தே இருக்கும். தனி அக்கறையுடன் அவர்களுக்கும் நீர்ச்சத்து மிகுந்த ஊட்டங்களை அளிப்பது முக்கியம்.
# ஒரே நேரத்தில் அதிக நீரைப் பருகாமல், தாக உணர்வுக்கு ஏற்ப நீரைப் பருகலாம்.
# பழ வகைகளைக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த உடனே சாப்பிடக் கூடாது. இதனால் பல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றன ஆராய்ச்சிகள். இவற்றைத் தவிர்க்கப் பழங்களை வாங்கியவுடன் சாப்பிடுவதே உசிதம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago