பரிசோதனை ரகசியங்கள் 27 - சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது ஏன்?

By கு.கணேசன்

மருத்துவர்களுக்கு நோயைக் கணிக்க எக்ஸ் ரேக்கு மாற்றாக வந்துள்ள ஒரு பரிசோதனை கருவி, சி.டி. ஸ்கேன் (CT Scan). `கம்பியூடட் டோமாகிராபி’ (Computed Tomography) என்பதன் ஆங்கில முதல் எழுத்துச் சுருக்கம்தான் சி.டி.ஸ்கேன். எக்ஸ்ரே கருவி செய்வதுபோல், இதுவும் எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தியே உடல் உறுப்புகளைப் படம் பிடிக்கிறது. என்றாலும், எக்ஸ் ரே படத்தில் காண முடியாத பல உடல் உறுப்புகளின் பாதிப்புகளை, இதில் காண முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

செயல்படும் விதம்

எக்ஸ் கதிர்கள் உடலுக்குள் நுழையும்போது அங்குள்ள சில உறுப்புகள் இக்கதிர்களை உறிஞ்சிக் கொள்ளும்; சில உறுப்புகள் வெளியே கடத்திவிடும். உறிஞ்சும் உறுப்புகளின் நிழல்கள் படமாகத் தெரியும். ஊடுருவச் செய்த உறுப்புகள் படத்தில் தெரிவதில்லை. எக்ஸ்-ரே எடுப்பதற்குப் பயன்படுகிற இந்த அடிப்படை அறிவியல்தான் இதற்கும் பயன்படுகிறது. அத்துடன் இதற்குக் கணினியின் உதவியும் கிடைக்கிறது.

நகரும் டேபிளில் பயனாளியை படுக்கவைத்து, முகத்தை மறைத்து, சிறிய குகை போலிருக்கும் கருவிக்குள் அனுப்புகிறார்கள். இப்போது அவரைச் சுற்றி வட்ட வடிவில், எக்ஸ் கதிர்களை வெளிவிடுகிற குழாய் இருக்கும். இது அறையின் வெளிப்பக்கத்தில் இருக்கிற கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். முதலில் எந்த உறுப்புகளுக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்துக்கொள்கிறார்கள்.

பிறகு, அந்த உடல் பகுதிக்கு எவ்வளவு எக்ஸ் கதிர்கள் தேவை என்பதையும் கணக்கிட்டுக்கொள்கிறார்கள். பின்னர், அதே அளவுக்கு இந்தக் கதிர்களைச் சுழல் குழாய் மூலம் செலுத்துகிறார்கள். இது 160 டிகிரி கோணத்தில் சுழலக்கூடியது. எனவே, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட எக்ஸ் கதிர்வீச்சுகள் பல கோணங்களில் உடலுக்குள் நுழையும். அப்போது உண்டாகிற பிம்பங்களை ஸ்கேன் கருவியில் சுழல் குழாய்க்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள உணர்கருவிகள் சேகரித்துக் கணினிக்கு அனுப்பும்.

இப்போது கணினியில் உள்ள மென்பொருள் ஒரு விசேஷமான வேலையைச் செய்யும். அதாவது, ஒரு பெரிய ரொட்டித் துண்டைப் பல சிறிய துண்டுகளாக வெட்டுவதுபோல, உடல் உறுப்புப் படங்களைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல அளவுகளில் வெட்டி, அந்தப் பகுதிகளை ஒருங்கிணைத்து, முப்பரிமாணப் படங்களாகத் திரையில் காண்பிக்கும். ஓர் உறுப்பை அதிகபட்சமாக 320 துண்டுகளாகப் பிரித்துக் காட்டும்.

இதன் பலனால், அந்த உறுப்பின் உள் பகுதி, வெளிப் பகுதி, குறுக்குப் பகுதி, நெட்டுப் பகுதி என எல்லாப் பகுதிகளையும் தெளிவாகக் காண முடியும். அப்போது உறுப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பாதிப்புகள், குறைபாடுகள் எனப் பல செய்திகளை நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள முடியும். இப்படிக் கணினியில் தெரிகிற படங்களை ஃபிலிமில் பிரிண்ட் செய்துகொள்ளவும், சி.டி. அல்லது டி.வி.டி.களில் பதிவு செய்து பாதுகாத்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. பின்னாளில் தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சாதாரண சி.டி. ஸ்கேன் படத்திலும் சில உறுப்புகளின் உட்பகுதிகளைக் காண முடியாது. அந்த மாதிரி நேரங்களில் பயனாளிக்கு ஒரு சாயத்தைச் சிரைக்குழாய் வழியாகச் செலுத்திப் படம் எடுத்தால், அந்த உறுப்புகளும் தெரியும்.

எந்த நோய்களைக் கண்டுபிடிக்கலாம்?

# விபத்து ஏற்பட்டுத் தலையில் அடிபடும்போது மூளையில் ரத்தக் கசிவு உள்ளதா ரத்தம் உறைந்துள்ளதா என்பது போன்ற விவரங்களை உடனடியாகத் தெரிந்துகொள்ள சி.டி. ஸ்கேன் பரிசோதனைதான் சிறந்தது.

# நினைவு இழப்பு, பக்கவாதம், முகவாதம் போன்றவற்றுக்குக் காரணம் தெரிந்துகொள்ள முடியும். மூளையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் உள்ளிட்ட எல்லாப் பாதிப்புகளையும் இதில் காண முடியும்.

# எலும்பு முறிவுகளைத் தெளிவாகக் காண இது உதவுகிறது. குறிப்பாக, மிகச் சிறிய எலும்பில் ஏற்படும் முறிவும் இதில் தெரிந்துவிடும்.

# மென்மையான திசுக்கள், தசைகள், ரத்தக் குழாய், நுரையீரல் உள்ளிட்ட மார்பு உறுப்புகள், வயிறு, இடுப்புப் பகுதி போன்றவற்றில் ஏற்படுகிற பாதிப்புகளை இதில் தெளிவாகக் காணலாம்.

# காசநோய், புற்றுநோய், நிமோனியா, சி.ஓ.பி.டி. போன்ற நுரையீரல் சார்ந்த நோய்களைத் துல்லியமாகக் கணிக்க சி.டி. ஸ்கேன்தான் சிறந்தது.

# பலவிதப் புற்றுநோய்களையும் கட்டிகளையும் கண்டறிய சி.டி.ஸ்கேன்தான் முதல் கட்டப் பரிசோதனையாக இருக்கிறது. கட்டியின் இருப்பிடம், அளவு, அருகில் உள்ள உறுப்புகளைப் பாதித்துள்ளதா, உடலில் மற்ற உறுப்புகளுக்குப் பரவியுள்ளதா என்பது போன்ற விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

# உள்உறுப்புகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம், கட்டி போன்றவற்றைக் கணிக்க இது உதவுகிறது.

# கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், கணையம், கருப்பை ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தால் இதில் தெரிந்துவிடும்.

# முதுகெலும்பின் தன்மை அறிந்து கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, போன்றவற்றுக்குக் காரணம் தெரிந்து, சிகிச்சை பெற முடியும்.

# சிறுநீரகக் கல் அளவு, இருப்பிடம், கல் அடைப்பு சிறுநீரகத்தைப் பாதித்துள்ளதா என்பது போன்ற விவரங்களைக் காண முடியும்.

# புராஸ்டேட் வீக்கம் / புற்றுநோய் போன்றவற்றைக் கணிக்கவும் இது உதவுகிறது.

# எலும்பின் அடர்த்தியை (Bone minera# density) அளந்து எலும்பு வலுவிழப்பு நோய் உள்ளதா என்பதைத் தெரிவித்துவிடும்.

# உடல் உள் உறுப்புகளில் `ஊசிக்குழல் பயாப்சி’ (Needle biopsy) பரிசோதனை செய்வதற்கு, அந்த இடத்தைத் துல்லியமாகக் காண்பிக்கிறது.

# உள்ளுறுப்புகளில் நீர் / சீழ் கோத்திருந்தால், அதைச் சரியான இடத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதற்கு இது வழி காட்டுகிறது.

# புற்றுநோய் சிகிச்சையில் கதிரியக்கம் தருவதற்கு உறுப்பின் சரியான பகுதியைக் காண்பிக்கிறது. இதன் பலனால் அருகில் உள்ள உறுப்புகளைக் கதிரியக்கம் பாதிப்பதைத் தடுத்துவிட முடியும். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு நோய் குணமடைந்துள்ளதா என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

# கண், காது, மூக்கு போன்றவற்றில் காணப்படும் நுண்ணிய பாதிப்புகளையும் இது தெரிவித்துவிடும்.

# சி.டி. ஆஞ்சியோகிராபி (CT angiography) எனும் சிறப்புப் பரிசோதனை மூலம் மாரடைப்பு போன்ற ரத்தக் குழாய் அடைப்புப் பிரச்சினைகளையும் நுரையீரல் ரத்த உறைவுக் கட்டியையும் தெரிந்துகொள்ளலாம்.

தயாராவது எப்படி?

# சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்கு நேரம், காலம் எதுவும் இல்லை; எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

# முடிந்தவரை ஸ்கேன் எடுக்கப்படும் மருத்துவமனையில் அல்லது ஸ்கேன் சென்டரில் கொடுக்கப்படும் ஆடைகளையே அணிந்துகொள்ள வேண்டும்.

# மோதிரம், வளையல், கழுத்து நகைகள், கைக்கடிகாரம், ஊக்கு, பொத்தான், கண்ணாடி, பல் செட், இடுப்பு பெல்ட் போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும்.

# காசு, சாவி, ஏ.டி.எம். கார்டு, உலோகப் பொருட்கள் போன்றவற்றை வெளியில் எடுத்துவிட வேண்டும்.

# பயனாளிக்கு ஏதேனும் மருந்து ஒவ்வாமை இருந்தால், ஸ்கேன் எடுப்பதற்கு முன்பே சொல்லிவிட வேண்டும்.

யாருக்கு விலக்கு?

# இதில் பயன்படுத்தப்படும் எக்ஸ் கதிர்வீச்சால் உடலுக்குத் தீங்கு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.

# கர்ப்பிணிகள், கர்ப்பமடைய வாய்ப்புள்ளவர்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனையை அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

முக்கியக் குறிப்பு

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்குச் சாயப்பொருளைக் கொடுத்து சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டிருந்தால், அடுத்து எத்தனை மணி நேரம் கழித்துக் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது என்பதை மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

என்ன நன்மை?

# வலி இல்லாத, பக்க விளைவுகள் இல்லாத மிக எளிதான ஸ்கேன் பரிசோதனை இது.

# எம்.ஆர்.ஐ. மற்றும் `பெட்’ ஸ்கேன் பரிசோதனைகளோடு ஒப்பிடும்போது, இதன் செலவு குறைவு.

# எக்ஸ்ரே பரிசோதனையுடன் ஒப்பிடும் போது சி.டி. ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும்.

# முடிவுகள் உடனடியாகக் கிடைத்து விடும் என்பதால், சிகிச்சைக்குத் தாமதம் ஆகாது.

# உடலில் உலோகப் பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். (உதாரணமாக, சிலருக்குப் பலத்த எலும்பு முறிவின்போது உலோகத்திலான ஸ்குரூ மற்றும் தட்டுகள் பொருத்தப்படுவது உண்டு. இவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க முடியாது. சி.டி. ஸ்கேன் மட்டுமே எடுக்க முடியும்).

# சி.டி. ஸ்கேன் வசதி சிறு நகரங்களில்கூட இருக்கிறது. எம்.ஆர்.ஐ. மற்றும் ‘பெட்’ ஸ்கேன் வசதிகள் பெரு நகரங்களில் மட்டுமே உள்ளன.

# சி.டி. ஸ்கேன் வசதி வந்த பிறகு ‘பயாப்சி’ பரிசோதனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறைந்துவிட்டது.

(அடுத்த வாரம்: ‘பெட்’ ஸ்கேன் யாருக்கு அவசியம்?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்