துடிக்கும் தோழன் 11 | கருவில் இருக்கும் குழந்தைக்கும் இதயக் குறைபாடு ஏற்படலாம்

By கல்யாணி நித்யானந்தன்

தயம் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும். சில நேரம் இதயத் தசை அசாதாரணமாகத் தடித்து அதனால் அந்த அறைகளினுள் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து பிரதான மகாதமனியில் செல்லும் ரத்தத்தின் அளவு குறையலாம் அல்லது தடைபடலாம். இது ஹைப்பர்டிராபிக் கார்டியோ மையோபதி (HOCM) என்கிற இதயக் குறைபாடு. இது ஏற்படக் காரணம் இன்னும் அறியப்படவில்லை. இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டு அதிகம் வேலை செய்யும். இன்னொரு பக்கம் தசைகள் தடித்திருப்பதால் அவற்றிற்கு ரத்தம் அதிகமாகத் தேவைப்படும். இதற்கும் சிகிச்சை அளிக்க முடியும்.

தமனியில் ஒரு அறுவை சிகிச்சை செய்வதன்மூலம் ரத்தம் சுலபமாகச் செய்ய வழிசெய்ய முடியும். அது சிலநேரம் பலன் கொடுக்கும். ஆனால், எப்போதும் பலன் கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ருமாடிக் ஜுரம், அதன் விளைவான மூட்டுவலி இதயத்தில் உள்ள வால்வுகளையும் பாதிக்கும். இந்த மாதிரி மூட்டுவலி வந்தவர்கள் பெரியவர்களாக வளரும்போது இதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உணர்வார்கள். வழக்கமாக மைட்ரல் வால்வும் மகாதமனியும்தான் பாதிக்கப்படும். நுரையீரலுக்குப் போகும் தமனியின் வால்வு அதாவது பல்மனரி வால்வு மற்றும் வலதுபுறத்தில் உள்ள ட்ரைகஸ்பிட் வால்வு இரண்டும் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இந்த வால்வுகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க முடியும். இது தற்காலிகமானதுதான்.

எப்போதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் மருந்துகள் உட்கொள்ள வேண்டிவரும். நிரந்தரத் தீர்வு அறுவை சிகிச்சை மட்டும்தான். சுருங்கிய வால்வுகளை விரியச் செய்தலும் வால்வுகளை நீக்கி புதிய செயற்கை வால்வுகளைப் பொருத்துதலும் வெற்றிகரமாகச் செய்ய முடியும். இவை சரியான முறையில் இயங்குகிறதா அல்லது ரத்தம் உறைவது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

பிறவியிலேயே சிசுவிற்குப் பலவித இதயக் குறைபாடுகள் ஏற்படலாம். அந்தக் குறைபாடுகளோடு குழந்தைகள் பிறக்கலாம். இன்று கர்பிணிகளுக்கு நுண்ணலை அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்யும் வசதி இருக்கிறது. 20 வாரத்திற்குள் இந்தக் குறைகளை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். சின்ன குறைபாடா என்பதை அறிய முடியும். இவற்றை மருந்துகளால் சரிசெய்ய முடியாது. ஆனால், அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியுமா, எப்படி, எப்போது செய்யலாம், என்ன செலவாகும் என்பது போன்ற விவரங்கள் ஸ்கேன் செய்த மருத்துவர், பிரசவ மருத்துவர், பச்சிளங் குழந்தை மருத்துவர் ஆகியோர் கலந்து பேசியோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆலோசனை வழங்குவார்கள்.

ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் வயிற்றிலிருக்கும் குழந்தை பிறந்தவுடன் சிகிச்சையளித்துக் காப்பாற்றிவிட முடியும் என்று எந்த மருத்துவராலும் நம்பிக்கையோ உறுதியோ அளிக்க முடியாது. எப்படி சிகிச்சை செய்தாலும் குழந்தை பிழைக்க வாய்ப்பே இல்லை என்கிற சூழலில் குழந்தை பிறந்த பிறகு அதை இழக்கும் கொடுமையைத் தவிர்க்கும் பொருட்டு கருக்கலைப்பு செய்ய வேண்டிய கடினமான முடிவை ஏற்கவும் குடும்பத்தினர் தயாராக இருக்கவேண்டும். வீட்டுப் பெரியவர்கள் இதில் தலையிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தாமல் தம்பதியின் முடிவுக்கு விட்டுவிடுவது எதிர்காலத்தில் வேறுவிதமான குடும்பக் குழப்பங்கள் ஏற்படாமல் தடுக்கும் என்பது என் நம்பிக்கை.

கருப்பையில் இருக்கும் சிசுவிற்கு எதேச்சையாகக் குறைபாடு ஏற்படுவது ஒருபுறம் என்றால் குரோமோசோம்கள் என்கிற மரபு இழைகளில் ஏற்படும் தவறுகள் காரணமாகவும் மரபணுக்களில் ஏற்படும் சில பிழைகள் காரணமாகவும் சில குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. இவற்றை நுண்ணலை நிபுணர்கள் ஸ்க்ரீனிங் மூலம் கண்டறிவார்கள். அப்போது கிடைக்கும் ஸ்கேன் படங்களையும் சில மரபியல் பரிசோதனைகளும் செய்த பிறகு மரபியல் மருத்துவர் அதை எந்தவிதமான குறைபாடு, சரிசெய்ய வாய்ப்பு இருக்கிறதா, எதனால் இந்தக் குறைபாடு ஏற்பட்டது, இந்தக் கர்ப்பத்தில் என்ன மருத்துவ நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்த கர்பத்தில் இதே மாதிரி வரும் சாத்தியம் இருக்கிறதா, வரும்முன் காக்க என்ன செய்யலாம் என்பது குறித்தெல்லாம் உங்களுக்கு ஆலோசனை வழங்க மரபியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல் டிஸ்மார்ஃபாலஜிஸ்ட் என்கிற தோற்ற மாறுபாடுகள் கருப்பை சிசுவின் மரபியல் குறைபாட்டை எப்படி அடையாளம் காட்டுகின்றன என்பதைப் பரிசோதித்து ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். இவற்றை நான் உங்களுக்கு இங்கே விவரிக்கப்போவதில்லை. ஏன் என்றால் நான் முதுகலை மருத்துவம் படிக்கும்போதுதான் கர்பிணிகளைப் பரிசோதித்து அவர்கள் கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளைப்பற்றி எனது பேராசிரியர்களிடமிருந்து கற்றேன். அதுவும் பரீட்சைக்குத் தயார் செய்ய மட்டும்தான். அதன்பிறகு பிரச்சினை உள்ள சிசுவைச் சுமந்துகொண்டிருக்கும் கர்பிணிகளை மேற்கொண்டு பரிசோதித்தோ டயக்னோஸ் செய்தோ எனக்கு அனுபவமில்லை. அதனால்தான் இந்த முடிவு. இதுவரை நான் விவரித்துள்ள அனைத்திலும் எனக்கு நல்ல அனுபவமும் உறுதியான அபிப்பிராயமும் நன்றாகவே உண்டு. மேலும் நுண்ணிய விவரங்களைப் புத்தகங்களில் தேடிப் படிக்கலாம்.
- நிறைவடைந்தது

கல்யாணி நித்யானந்தன்

(மறைந்த டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)
முந்தைய அத்தியாயம் >
இதயத்தைத் தாக்கும் கிருமித் தொற்று

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்