துடிக்கும் தோழன் 8 | மருத்துவர்கள் கடவுள் அல்ல

By கல்யாணி நித்யானந்தன்

தயப் பராமரிப்பு குறித்து எனது சொந்த அபிப்பிராயங்களைச் சொல்ல விரும்புகிறேன். பதினைந்து வருடங்களுக்கு மேலாக வருடத்திற்கு சுமார் 500 மாரடைப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன். லண்டனில் ஓராண்டுக்கு மேம்பட்ட பயிற்சி எடுத்திருக்கிறேன். மாரடைப்பிலிருந்து காப்பாற்றப்பட்டபின் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு வராமல் இருக்க ஆலோசனைகள் வழங்கும் மறுவாழ்வு மையத்தைச் சில காலம் நடத்திய அனுபவமும் எனக்கு உண்டு. இவற்றின் காரணமாக எனக்குச் சில தீர்மானமான கொள்கைகள் உண்டு.

75 வயதுக்கு மேல் குடும்பப் பொறுப்புகளை எல்லாம் முடித்துப் பிள்ளை, பெண் பாதுகாப்பில் வாழும் முதியோர்களுக்கு மாரடைப்பு வந்தால் தீவிர சிகிச்சை செய்வது அநாவசியம் என்று நான் நம்புகிறேன். அவர்கள் வாழ்க்கை முறை இளையவர்களைப்போல் வேகமானதாக இருக்காது. பிள்ளைகளின் அரவணைப்பில் இருப்பதால் மன அழுத்தமும் அவ்வளவாக இருக்காது. தேவைப்பட்ட அவசர சிகிச்சை அளித்துவிட்டு அவர் வாழும்வரை வாழட்டும் என்று விட்டுவிடுவதே சரியானதாக இருக்கும். சிகிச்சை முறைகளைப் பற்றி நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விளக்க வேண்டியது மருத்துவரின் கடமை. ஆனால், தீவிர மருத்துவ சிகிச்சை அவசியமா, அதன் பக்கவிளைவுகள் என்ன (ஆஞ்சியோ ப்ளாஸ்டி செய்வதில்கூடப் பக்க விளைவுகள் உள்ளன), வெறும் மருந்து மாத்திரைகளாலேயே வலியின்றி வாழ வழிசெய்ய முடியுமா என்பனவற்றைக் குடும்பத்தினர் மருத்துவரிடம் கேட்க வேண்டும். மருத்துவரும் நம்மைப் போன்ற மனிதர்தான், தெய்வமல்ல. உங்களது சந்தேகங்கள் முக்கியமானவைதான். ‘நோ ட்வுட் ஈஸ் டூ ஸ்மால் ஆர் டூ சில்லி’. உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டிய கடமை உங்கள் மருத்துவருக்கு உண்டு.

வயதானவர்களின் உடல் சீட்டுக்கட்டு கோபுரம்போல் எந்த நேரத்திலும் விழுவதற்குத் தயாராகிவிடுகிறது. ஒரு சின்ன அதிர்வுகூட நிலைமையை தலைகீழ் ஆக்கிவிடும். அதோடு ஸ்ட்ரோக்/கோமா வரும் சாத்தியமும் சிறிய அளவில் இருக்கும். அந்த நிலை வேண்டாமே. மாரடைப்பால் வரும் உடனடி மரணமே பரவாயில்லை அல்லது பிழைத்தெழுந்து தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் அளவுக்குத் தெம்புடன் நடமாட முடியும். 86 வயதில் மூன்று மாரடைப்புகளுக்குப் பிறகு ஓரளவிற்கு உதவியுடன் நடமாடிய நானே இதற்கு உதாரணம். மாரடைப்பைப் பற்றி 100 சதவீதம் நான் புரிந்துவைத்திருக்கிறேன். சிகிச்சையளித்த அனுபவத்தால் மட்டுமல்ல, மூன்று முறை எனக்கும் மாரடைப்பு ஏற்பட்டுத் தப்பிப் பிழைத்திருப்பதால். 26 ஆண்டுகளாக நன்கு கட்டுப்படுத்தப்பட்ட சர்க்கரை நோய், 26 ஆண்டுகளாக ஓரிரு கிலோவுக்கு மேல் கூடாத எடை. அதற்குமுன் சரியான பயிற்சியின் மூலம் 12 கிலோ எடையைக் குறைத்துக்கொண்டேன். நடுவயதில் தனக்கு மேலே ஒரு தலைமுறை, கீழே ஒரு தலைமுறை இவற்றைக் காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வந்தால் இந்தத் தீவிர சிகிச்சைகள் அவசியம் செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும். அதனால், மேலும் ஒரு பத்து ஆண்டுகளாவது அவர்கள் ஆயுளை நீட்டிக்கலாம்.


சிலர் பேஸ் மேக்கர் வைத்துக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதயத் துடிப்பை உண்டு பண்ணி கட்டுப்படுத்தும் NODES அதாவது கணுக்கள் அதிலிருந்து கிளம்பும் ஹிஸ்பண்டில் எனப்படும் நரம்புக் கற்றைகள் இவை எவ்வாறு மின்தூண்டுதல் மூலம் இதயத் துடிப்பை ஒரு தாளக்கட்டோடு ஏற்படுத்துகின்றன என்பதை முன்பு சொன்னேன். இந்த நரம்புக் கற்றைகளில் மின்தடை ஏற்பட்டால் இதயம் உடனே நின்றுவிடும். மூளைக்குப் போகும் ரத்த ஓட்டம் தடைபட்டு அந்த நபர் நினைவிழந்து உடனடியாகக் கீழே விழுந்துவிடலாம். கீழே விழுந்ததும் படுத்த நிலை ஏற்படுவதால் மீண்டும் மூளைக்கு ரத்தம் செல்ல ஆரம்பித்து, அட்டாக் ஏற்பட்டவர் திரும்ப விழித்துக்கொள்வார். எழுந்து நடக்க ஆரம்பித்ததும் திருப்ப எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அட்டாம் வரலாம். அட்டாக்கினால் உடனடி ஆபத்து இல்லையென்றாலும் அட்டாக் வரும்போது ஒருவர் மெஷினில் வேலை செய்துகொண்டிருந்தாலோ வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தாலோ தீ எரிந்துகொண்டிருக்கும் இடத்தில் வேலைசெய்துகொண்டிருந்தாலோ விபத்து ஏற்படும் ஆபத்து அதிகம். அல்லது உயரமான ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்தாலோ, படிகளில்
ஏறிக்கொண்டிருந்தாலோ விழும்போது தலை மோதி கடுமையாக அடிபடலாம். இந்த அட்டாக்கின் பெயர் ‘ஸ்டோக்ஸ் ஆடம்ஸ்
சிண்ட்ரோம்’. உடனடியாக ஈஸிஜி எடுத்துப் பார்த்தால் மின்தடையோ சீரற்ற இதயத்துடிப்போ இருப்பது தெரியும். சில நேரம் முழுமையான ஹார்ட் ப்ளாக் காரணமாக மின்தடை சரியாகாமல் போனால் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு நாற்பதாகக் குறைந்துவிடலாம். இது இதயத்தின் தன்னிச்சையான துடிப்பு. உடலில் உயிர் இருக்கப் போதுமானது. ஆனால், இயல்பு வாழ்க்கைக்குப் போதுமானது அல்ல.

அட்டாக்கிற்குப் பின் ஈஸிஜி நார்மலாக இருந்தாலோ, சின்ன குறைபாடு மட்டும் கண்டாலோ, மீண்டும் ஒரு அட்டாக் வந்தாலோ கண்டிப்பாக மேற்கொண்டு பரிசோதனைகளுக்கு உள்ளாக வேண்டும். ‘டில்டிங் டெஸ்ட்’ என்கிற ஒரு சிறிய பரிசோதனையும் உண்டு. Electrophysiology என்று ஒரு பரிசோதனை செய்யப்படும். இதைச் செய்யும் நிபுணர்கள் நமது நகரங்களிலேயே இருக்கிறார்கள். இந்தப் பரிசோதனையை ஆபரேஷன் அறையில் மிகப் பாதுகாப்பான சுத்தமான முறையில்தான் செய்வார்கள். கழுத்து எலும்பின்கீழ் க்ளாவிகிள் எலும்பின் மேல் செல்லும் சிரையின் வழியாக நான் முன் சொன்ன மின்பாதைக்குள் கம்பியைச் செலுத்தி மின் தூண்டுதலின்மூலம் ஒவ்வொரு இடமாகத் தூண்டி சரியாக மின்சாரம் பாய்கிறதா என்று பரிசோதிப்பார்கள். தடை உள்ளதா அது எங்கே உள்ளது என்று இந்தப் பரிசோதனைமூலம் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். இதைச் செய்யும்போது நோயாளி சுய உணர்வுடன்தான் இருப்பார் என்பதால் தலைச்சுற்றலோ மயக்கமோ ஏற்பட்டால் அவரால் மருத்துவரிடம் கூற முடியும். அப்படி இருந்தால் பேஸ்மேக்கர் பொருத்துவார்கள்.

கல்யாணி நித்யானந்தன்

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு).
(மறைந்த டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)

முந்தைய அத்தியாயம் > டென்ஷன் இதயத்துக்கு நல்லதல்ல

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE