மாம்பழம் - பழங்களின் ராஜா

By டாக்டர் வி.விக்ரம்குமார்

முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். நமது நாட்டின் தேசியக் கனி அது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் உற்சாகமடையச் செய்யும் மாயாஜாலக் கனியான மாம்பழத்தை, 'மாதா ஊட்டாத சோற்றை மா ஊட்டும்' எனச் சிறப்பித்துக் கூறுவர்.

'மாம்பழத்து வண்டு' எனும் பதம், 'பூவை மட்டுமல்லாமல், பழத்தைத் தேடியும் வண்டுகளை வரவழைக்கும் சாமார்த்தியம் மாங்கனிக்கு உண்டு' என்பதை உணர்த்துகிறது. நாவிலே இனிமையாய்ப் படரும் அதன் சுவைமிக்க சாறு, மன மகிழ்ச்சியை அளிக்கும்.

உலக மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட பெருங்கொடை மாங்கனி. புத்த பிட்சுகளுக்கு அனுமதிக்கப்பட்ட சில உணவு வகைகளுள் மாம்பழமும் ஒன்று. மா ஊறுகாய், மாவடு இல்லாமல் பலரது மதிய உணவு நிறைவு பெறாது எனச் சொல்லலாம்.

நன்மைகள்

வைட்டமின் - ஏ குறைபாடுடையவர்கள், மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வந்தால்போதும். வைட்டமின் – சி, தாதுப் பொருட்கள் என இருபதுக்கும் மேற்பட்ட ஊட்டங்களைக் கொண்டுள்ளது மாம்பழம். சளி, இருமல் போன்றவை அடிக்கடி தாக்காமல் இருக்க, இதிலிருக்கும் வைட்டமின் – சி உதவியாக இருக்கும். மாம்பழம் கொடுக்கும் பீட்டா-கரோட்டீன்கள், பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

நிமிர்ந்த நன்னடை

கண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான நுண்ணூட்டங்களும் மாம்பழத்தில் உண்டு. இதிலிருக்கும் 'பெக்டின்' இரத்தக் குழாயில் கொழுப்புத் திட்டுக்கள் படிவதைத் தடுக்கும். மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, சருமம் பொலிவடையும். மாம்பழத்திலிருக்கும் 'மாங்கிஃபெரின்' எனும் பொருள், வயிறு, குடற் ஆகிய உடற்பாகங்களில் வரக்கூடிய புற்று நோயைத் தடுக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு. என்புத் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருந்து முதிர்ந்த வயதிலும் நிமிர்ந்த நன்னடை போட மாம்பழம் துணையாக இருக்கும்.

மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர விந்தணுக்களின் எண்ணிக்கை பெருகும் என்பதை அகத்தியர் பாடல் மூலம் சொல்லியிருக்கிறார். மனச் சோர்வையும் உடற்சோர்வையும் நீக்கி உற்சாகமாக்கும் என்கிறது தேரன் காப்பியம் நூல்.

செரிமானத்தைத் தூண்டும்

மாங்கனியைக் கடித்துச் சுவைக்க, உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து, உள்ளுறுப்புகளை வளப்படுத்தும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். மாம்பழத்தில் இருக்கும் நொதிகள், செரிமானத்தைத் தூண்டும் ஆயுதமாக இருக்கின்றன. இதிலிருக்கும் நார்ச்சத்து மலச் சிக்கலுக்குத் தீர்வாகும்.

கவனிக்க வேண்டியவை

வேதிக்கற்கள், வேதிப்பொருள்கள் ஆகியவற்றின் துணையோடு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமானக் கோளாறுகள், அரிப்பு, வாந்தி, பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்சனைகள் எனப் பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை. மாம்பழத்திலிருந்து வெளிவரும் வாசனையை அளவீடாகக் கொண்டு மாம்பழங்களைத் தேர்வு செய்யலாம். மாம்பழங்களின் தோல், பளிங்கு போலப் பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கருநிறக் கோடுகள், திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களைத் தாராளமாக வாங்கலாம்.

வேனிற்காலத்தில் தாகத்தைத் தணிக்கவும், நீரிழப்பை ஈடுசெய்யவும் மாம்பழச் சாறு அற்புதமான தேர்வு. பழங்களை நேரடியாக வாங்கி, வீட்டிலேயே பழச்சாறு தயாரித்துக்கொள்ளலாம். பாட்டில்கள் அல்லது அட்டைகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மாம்பழச் சாறைப் பருகுவது நல்லதல்ல.

இப்படியும் சாப்பிடலாம்

மாம்பழ-ஓட்ஸ் மில்க் ஷேக்: மாம்பழக் கூழ், இரண்டு ஸ்பூன் ஓட்ஸ், ஒரு ஸ்பூன் தேன், பால் 250மிலி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அடித்துப் பருகிவர, நீங்கள் தேடும் உற்சாகம் நொடிப்பொழுதில் கிடைக்கும்.

போஜனதிகா-ரொட்டி: (Bhojanadhika-roti) பாசிப்பருப்பு, எருமைப் பால், மாம்பழச் சாறு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குழப்பி கோதுமை மாவுக்குள் வைத்து, உருண்டைகளாகப் பிடித்து போளி சுடுவதைப் போலச் சுட்டு, நெய் சேர்த்துச் சாப்பிடும் சிற்றுண்டி வகை இது. வட மாநிலப் பண்டிகைக் காலங்களில் அனைவராலும் தேடப்படும் சிற்றுண்டி ரகம்.

மாம்பழ-பீன்ஸ் கூழ்: ஒரு டம்ப்ளர் மாம்பழச் சாறு, இரண்டு ஸ்பூன் கருப்பு பீன்ஸ், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், கால் கப் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, கால் ஸ்பூன் சீரகம், சிறிது பூண்டுத் தூள் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, மருத்துவக் குணமிக்க சுவையான பானத்தைத் தயாரித்துக் கொள்ளலாம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE