மார்வலி வந்தவுடன் மருத்துவரிடமோ மருத்துவமனைக்கோ செல்வீர்கள். மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே அளிக்கப்படும் தீவிர சிகிச்சை உயிர் காக்கும் சிகிச்சை என்பதால் தாமதிக்கக் கூடாது.
உங்கள் உடல்நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் அதாவது மிகுந்த வலி, நாடித்துடிப்பு சீரின்மை, ரத்த அழுத்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்களைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பிவிடுவார்கள்.
அப்படி இல்லையென்றால் மருத்துவர் பரிசோதித்துவிட்டு பிறகு ஈஸிஜி எடுக்க ஏற்பாடு செய்வார். அதில் கவலைப்படும்படியான மாற்றம் இல்லையெனில் மருந்துகள் எழுதிக்கொடுத்து மீண்டும் வலி ஏற்பட்டால் வருமாறோ இரண்டுநாள் கழித்து வருமாறோ சொல்வார். ஈஸிஜி நார்மலாக இருந்தாலும் நெஞ்சுப் பகுதியில் வலியோ மற்ற உடல் அறிகுறிகளோ சந்தேகத்திற்கிடமாக இருந்தால் அட்மிட் செய்து சில ரத்தப் பரிசோதனைகளும் ஆறு மணி நேரம் கழித்து மீண்டும் ஈஸிஜி எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அதன் முடிவுகளைப் பார்த்தபின் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா இல்லையா என்பதைத் தெளிவாகக் கூறிவிட முடியும்.
உயிர் காக்கும் சிகிச்சை
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவுடன் நோயாளியின் இதயத் துடிப்பையும் (ஈஸிஜி) நாடித்துடிப்பையும் ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவையும் இடைவிடாமல் துல்லியமாகக் கண்காணிக்கும் மானிட்டர் கருவி பொருத்தப்படும். புறங்கையில் ஊசிமூலம் சிரைக்குள் செலுத்தப்படும் மெல்லிய பாலிதீன் குழல் மூலம் ரத்த ஓட்டத்தில் செல்லத் தோதாக உப்பு, குளுக்கோஸ் செலுத்தும் திரவ பாட்டில் இணைக்கப்படும். தேவைப்படும் மருந்துகளையும் இந்த வழியாகவே ஊசிமூலம் செலுத்துவார்கள் என்பதால் அடிக்கடி மருந்துகளுக்காக ஊசிபோடும் அவசியம் இருக்காது.
வலி குறைவதற்காகவும் தூங்குவதற்காகவும் மருந்துகள், குளுக்கோஸ் செல்லும் வழியாகவே செலுத்தப்படும். ஆக்ஸிஜனைச் சிறிய டியூப் அல்லது மாஸ்க் வழியாகச் செலுத்தி நோயாளி லகுவாகச் சுவாசிக்கவும் தூங்கவும் வழிசெய்வார்கள். சிறுநீர் வெளியேற சிறுநீர்ப் பாதையில் கதீடர் குழலும் பொருத்துவார்கள். ஒருவேளை நோயாளிக்கு நுரையீரலில் சளி சேர்ந்திருந்தாலோ ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் அளவு குறைந்திருந்தாலோ வென்டிலேட்டர் கருவியும் பொருத்தப்படலாம். இப்படி நோயாளிக்கு அவசர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தபின் கொரோனரி நாளங்களில் உள்ள ரத்தக்கட்டிகள் கரைவதற்கான மருந்துகளும் செலுத்தப்படும். மாரடைப்பு ஏற்பட்ட முதல் 30 நிமிடங்களுக்குள் நோயாளியைத் தகுந்த மருத்துவமனையில் சென்று சேர்த்தால் உடனடி கவனிப்பு அளித்து நோயாளியைக் காப்பாற்றுவதோடு அடைப்பு நீங்குவதற்கான சிகிச்சையும் செய்ய முடியும்.
இப்படிச் செய்யலாமே!
தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் கூட இருக்க உறவினர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடிக்கடி நோயாளியைப் பார்ப்பதற்கும் அனுமதி கிடையாது. ஒருநாளில் ஓரிருதடவை மட்டுமே நோயாளியின் வாழ்க்கைத் துணை, மகன், மகள் இப்படி யாராவது ஒருவர் சில நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். பால், சத்து பானம், பழரசம் போன்ற திரவ உணவே தரப்படும். உடல்நிலையில் பின்னடைவு ஏதும் இல்லமல் இருந்தால் நான்கைந்து நாட்களில் ரெகவரி வார்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனாலும், ஒருநாளில் பலமுறை மருத்துவர்களும் செவிலியர்களும் அடிக்கடி பரிசோதித்து உடல்நிலையைக் கவனமாகப் பார்த்துக்கொள்வார்கள்.
நோயாளியைப் பற்றி அக்கறையுடனும் பரிவுடனும் விசாரிக்க வரும் உறவினர், நண்பர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். எல்லோரும் சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை வாங்கிவந்து கொடுப்பதைவிட்டு உருப்படியாக ஏதாவது உதவி செய்யலாமே. என்னைக் கேட்டால் காலையில் ஃப்ளாஸ்கில் நல்ல காபி கொண்டுவந்து கவலையுடன் மருத்துவமனையில் இருக்கும் மனைவி அல்லது கணவனிடம், ‘இந்த காப்பியைக் குடித்துவிட்டு வீட்டுக்குப்போய் குளித்துவிட்டு சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள். அதுவரை நான் இங்கிருந்து பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லலாம். அவர்களுக்குச் சிறு பிள்ளைகள் இருந்தால் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேலையையோ மாலையில் அவர்களுக்குச் சிற்றுண்டி அளிக்கும் பொறுப்பையோ பார்த்துக்கொள்ளலாம். அவர்களின் சீருடைகளைத் துவைத்து அயர்ன் செய்யும் வேலையை ஏற்றுக்கொள்ளலாம். போன் பில், கரண்ட் பில் போன்றவற்றைக் கட்டும் பொறுப்பை ஒருவர் எடுத்துக்கொள்ளலாம். இவை சமயத்துக்கு ஏற்ற நல்ல உதவிகள் அல்லவா!
சிகிச்சைக்குப் பிறகு...
சிகிச்சை முடிந்து பத்து நாட்களில் பொது வார்டுக்கு அனுப்பிவிடுவோம். சூழ்நிலைக்கு ஏற்ப வீட்டிற்கும் அனுப்பிவிடலாம். டிஸ்சார்ஜ் செய்வதற்குமுன் இதய நோய் மருத்துவர் நோயாளியை நன்றாகப் பரிசோதனை செய்வார்.
பிறகு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் பற்றியும், எந்த மாதிரியான உணவு கொடுக்க வேண்டும், எந்த மாதிரியான உணவு கொடுக்கக் கூடாது, என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது பற்றியும் விளக்கமாக நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்வார். டிஸ்சார்ஜ் ஆன 15 நாட்களுக்குப் பிறகு மாரடைப்பு நோய் மறுவாழ்வு மையத்துக்கு வர வேண்டுமென்று சொல்லி அனுப்பிவிடுவார். முதல் மாதம் வாரத்துக்கு இரு முறை செல்ல வேண்டும். அப்போது நடைபழகும் மெஷினில் மெல்ல நடைபழகும் பயிற்சி ஆரம்பிக்கும். கூடவே ஈஸிஜி கருவியில் இதயத் துடிப்பையும் கவனிப்பார்கள். மெல்ல மெல்ல நடையின் வேகத்தை அதிகப்படுத்தி ஒரு மாதத்தில் நோயாளிக்கு வெளியே நடப்பதற்குத் தைரியம் வந்துவிடும். மறுமாதம் வாரம் ஒருமுறை இந்தப் பயிற்சி நடக்கும். நோயாளி தனியாகவே நடக்க ஆரம்பித்துவிடுவார். தனியாக தன் வேலைகளைக் கவனிக்க தைரியமும் உடல் தெம்பும் வந்துவிடும்.
ஒரு வேடிக்கையான விஷயத்தைச் சொல்கிறேன். முதல் வாரத்தில் நோயாளிக்குத் தேவைப்படும் என்று பால், பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றை எடுத்துக்கொண்டு டாக்ஸியில் வருவார்கள். இரண்டாவது வாரம் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வருவார்கள். அதற்கடுத்துப் பேருந்திலேயே வந்துவிடுகிற அளவுக்குத் தைரியம் வந்துவிடும். மாரடைப்பு நோய் மறுவாழ்வு மையத்தில் நோயாளிக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. நோயாளியை அழைத்துக்கொண்டுவரும் அவரது கணவன் அல்லது மனைவிக்கும் மனதைரியம் வந்துவிடுகிறது. மூன்று மாதங்களில் நன்கு குணமடைந்து வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அவருடைய கணவன் அல்லது மனைவியை அழைத்து நான் கவுன்சலிங் செய்வேன்.
கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு) தொடர்புக்கு:joenitya@yahoo.com
(தற்போது 87 வயதாகும் டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)
முந்தைய அத்தியாயம் > துடிக்கும் தோழன் 2 | எல்லா வலியும் மாரடைப்பு அல்ல
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago