மாதவிடாய் பிரச்சினைகளைக் களையும் எளிய வழிகள்

By செய்திப்பிரிவு

பாட்டி காலத்தில் ஏழுநாட்கள் என்றிருந்த மாதாந்திர உதிரப்போக்கு, அம்மாவின் காலத்தில் மூன்று நாட்கள் என்றாகி, தற்போது இரண்டு அல்லது ஒரு நாள் என்றாகிவிட்டது. தற்போது சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாத மாதங்களும் இருக்கின்றன. பெண்கள் பருவமடையும் வயதை எடுத்துக்கொண்டால், அது பாட்டி காலத்தில் 14 எனவும், அம்மா காலத்தில் 12 எனவும் இருந்தது. தற்போது பத்துவயது என்றாகி இருக்கிறது. சிலர் எட்டுவயதிலேயே பருவமெய்திவிடுகின்றனர்.

இயல்பான வயதிற்கு முன்பே பெண்கள் பருவமெய்தும் நிலையை யாராலும், எதனாலும் மாற்ற முடியாது. ஆனால், பெண்கள் அடுத்தடுத்து வரும் மாதவிடாய்ச் சுழற்சி நிலையினையும், உடல் உபாதைகளையும் சரிப்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு நம்முடைய பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் போன்றவற்றில் போதிய கவனம் செலுத்த வேண்டும்; தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்.

பருவமடைதலின் முதல் ஐந்து நாட்களுக்கு மாதாந்திர உதிரப்போக்கு நன்கு ஏற்பட எள்ளுருண்டையும், அடுத்து 6-14 நாட்களில் இடுப்பு வலி ஏற்படாமல் இருக்க உளுந்துக் களியும், அடுத்து 15-28 நாட்களுக்கு மாதவிடாய் சரிவர நிகழ்வதற்காக வெந்தயக் கஞ்சியும் பருவமெய்திய பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

உளுந்து, கார் அரிசி, எண்ணெய், முட்டை போன்றவற்றால் செய்யப்படும் பண்டங்களைச் சாப்பிடுவது மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கி, பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்தும்.எத்தனையோ உணவுப் பொருள்கள் இருக்கும்போது, இவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

முக்கியமாக, சூரிய ஒளியைப் பெண்கள் தவிர்க்கக் கூடாது. சூரிய ஔி நம் மீது படுவதன் மூலமே நமது உடல் சுண்ணாம்புச் சத்தை உற்பத்தி செய்துகொள்ளும். இந்தச் சுண்ணாம்புச் சத்தே, பருவ காலத்தில் ஏற்படும் முதுகு வலி, கெண்டைக்கால் சதைப் பிடிப்பு போன்றவற்றைத் தவிர்க்க உதவும்.

- காயத்ரி விவேகானந்தன், சித்த மருத்துவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE