உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள்: ஏப்ரல் 2 | ஆட்டிசத்துக்கு சித்த சிகிச்சை

By செய்திப்பிரிவு

ஆட்டிசம் (அ) புற உலகச் சிந்தனை குறைபாடு என்பது மூளை வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடே தவிர, நோயல்ல. இதற்குச் சித்த மருத்துவத்தின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தாக்கம் உள்ள குழந்தையின் உடலில் எந்தக் குறைபாடும் தோன்றாது. வளர்ச்சி மைல் கல் இயல்பாக இருந்தாலும், அவர்களின் நடத்தையில் குறைபாடுகள் காணப்படும். இக்குறைபாட்டுக்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் மரபுக்கூறுகள், சுற்றுச்சூழல் காரணிகளுக்கு இடையே உள்ள தொடர்பால் மரபணுவின் செயல்பாட்டிலும் வெளிப்பாட்டிலும் ஏற்படும் மாற்றமே ஆட்டிசம் குறைபாட்டுக்குக் காரணமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது கருவிலேயே சில வகையான பாதிப்புகள் தொடங்குகின்றன என்கிறது சித்த மருத்துவம். அதில் ஆட்டிசமும் ஒன்று. கர்ப்பிணி தன்னை நன்றாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது அதனால்தான். மேலும், கருத்தரித்த தாயின் வயது, கர்ப்ப காலத்தில் தாயின் உணவு, கர்ப்பிணியின் உடல் - மன ஆரோக்கியமின்மை, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, மன அமைதியின்மை, எதிர்மறை எண்ணங்கள், தீய பழக்கவழக்கங் களைக் கடைப்பிடித்தல், கர்ப்பிணிகளின் ஆசைகள் நிராசையாகி மன வேதனை உண்டாதல், வாத, பித்த, கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலை பாதிக்கப்பட்டு குழந்தையின் உடலில் குறைபாடு போன்றவை ஆட்டிசத்துக்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

குழந்தையிடம் வெளிப்படும் அறிகுறி களைக் கொண்டு ஒன்றரை வயதில் தொடங்கி ஆட்டிசம் குறைபாட்டைக் கணித்துவிடலாம். இவ்வகைக் குழந்தைகள் முதலில் தாயின் முகத்தைப் பார்த்துச் சிரிக்காமல் இருப்பது, தாயின் கண்களை நேருக்கு நேர் பார்த்து அம்மா என்று அழைக்காமல் இருப்பது, தனக்கு வேண்டியதைச் சுட்டிக்காட்டாமல் இருப்பது, மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதில் - பழகுவதில் ஆர்வமின்மை, காரணமின்றிச் சிரிப்பது, பயம் - ஆபத்து போன்றவற்றை உணராதிருப்பது, அர்த்தம் புரிந்து கொள்ளாமல் சொற்களைத் திருப்பிச்சொல்வது, தினசரி செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாதவராக இருப்பது, அடுத்தவர் உணர்வுகளை உணர்ந்துகொள்ள இயலாதிருப்பது, ஒரே தன்மையுடைய செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது, விரல்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, தலையை ஆட்டுவது, விரைவில் கோபம் கொள்வது, ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே பயன்படுத்துவது என்பது போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த குறைபாடு பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கே தோன்றுகிறது. ஆண் குழந்தைகளோடு ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கு (4:1) பெண் குழந்தைகளிடமும் இது காணப்படுகிறது.

டாக்டர் க.தர்ஷினி பிரியா

இக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நடத்தைச் சீராக்கல் பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் நடத்தைப் பாங்கில் மாற்றங்களை உருவாக்குதலைப் போன்று பல்துறை வல்லுநர்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை தற்காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

பிறந்த குழந்தை நோயின்றி வளர பல வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் வகுக்கப் பட்டுள்ளன. சித்த மருத்துவத்தில் இக்குறைபாடு முத்தோஷத்தால் (வாதம், பித்தம், கபம்) தோன்றும் என்று கருதப்படுவதால் தோஷத்தைச் சமன்படுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

l வாதத்தைச் சமன்படுத்த கழிச்சல் உண்டாக்கியாகிய மாந்த எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

l பித்தத்தைச் சமன்படுத்தச் சீரகத் தண்ணீர், எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுதல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

l கபத்தைச் சமன்படுத்த மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதோடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை, கடுக்காய் போன்ற கஷாயம், மனசாந்தி அடைய மணமூட்டக்கூடிய புகை (தூபம்), வேது, பொட்டணம், ஒற்றடம், தொக் கணம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

l மேலும், சித்த மருத்துவத்தில் இவ்வகைக் குழந்தைகளுக்காகவே சிறப்பாக வர்ம சிகிச்சை, யோக மருத்துவமும் பெரும்பாலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மேற்கண்ட சித்த மருத்துவச் சிகிச்சைகளை ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் உடல்வாகுக்குத் தகுந்தாற்போல் மேற்கொண்டுவந்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம். இக்குறைபாட்டை முற்றிலுமாக குணமாக்க இயலாது என்றாலும், அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைத்து ஓரளவுக்கு இயல்பான வாழ்க்கையை வாழ சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது.

கட்டுரையாளர், குழந்தை நலப் பிரிவு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: dharshini874@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE