ஆரோக்கிய நூலகம்: உடலுடன் எப்போது பேசப்போகிறோம்?

By ஆதி வள்ளியப்பன்

சமீபத்தில் உடல்நலனைப் பற்றி வாசித்த இரண்டு புத்தகங்களில் ப. நீலகண்டனின் ‘பல்லாண்டு வாழ்க' பற்றி கடந்த வாரம் பார்த்தோம். ஒரு நோயை மையமாகக் கொண்ட புத்தகம் அது. சமீபத்தில் வெளியானதாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்த இரண்டாவது புத்தகம், நமது முழு உடல்நலனையும் பற்றி, ஒரு நல்ல நண்பனைப்போல எப்போதும் அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியதைப் பற்றி நம்முடன் கலந்துறவாடுகிறது.

உடலை மறந்தோம்!

அலோபதி மருத்துவம் கோலோச்சாத அந்தக் காலத்தில் நம் முப்பாட்டன்களும் முப்பாட்டிகளும் சின்ன வயதிலேயே இழுத்துக்கொண்டு சாகவில்லை. இறப்பதற்குக் கொஞ்சக் காலம் முன்னர்வரை தள்ளாத வயதிலும் வயல் வேலை, வீட்டு வேலை எல்லாம் பார்த்துவிட்டு உடல் உறுப்புகள் முழுமையாக ஒத்துழைக்க மறுத்த நேரத்தில் அடங்கிப் போனதே அன்றைக்குப் பரவலாக இருந்தது. ஆனால், இத்தனை நவீன அறிவியல் வளர்ச்சிகள், மருத்துவ வளர்ச்சிகள் இருந்தும் இன்றைக்கு உடல் முழுக்க நோய்களைச் சுமந்துகொண்டும், சாப்பாடுபோல மருந்துகளை வேளா வேளைக்கு உள்ளே தள்ளிக்கொண்டும் இருக்கிறோமே, ஏன்?

எல்லா வேலைகளுக்கும் ஏதோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லப் போவதுபோல ஓடிக்கொண்டிருக்கும் நாம், இந்தக் களேபரத்தில் அதிகம் கவனிப்பாரற்றுக் கைவிடுவது நமது அருமை உடலைத்தான். அதுவே பிற்காலத்தில் பல்வேறு நோய்களாக வெளிப்பட்டுத் தன்னைக் கவனிக்க வேண்டிய அவசியத்தை அறிவித்துவிடுகிறது.

இதைப் பற்றித்தான் பேசுகிறது ‘என் உடல் என் மூலதனம்’ என்ற புத்தகம். தலைப்பு ஜனரஞ்சகமாக இருப்பது போலத் தோன்றினாலும், உணவு-மருத்துவ எழுத்தாளர் போப்பு எழுதியுள்ள இந்தப் புத்தகம் முற்றிலும் புதுமையானது.

வெறும் இயந்திரமா?

இந்தப் புத்தகம் பல இடங்களில், பல முறை, மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒரே விஷயம் ‘உங்கள் உடல் என்பது இயந்திரமல்ல’ என்பதே. அலோபதி மருத்துவமும் நவீன அறிவியலும் திரும்பத் திரும்பக் கூறுவதைப்போல உடல் என்பது சில மூட்டுகளும், எலும்பும் தோலும் பொருத்தப்பட்ட ஓர் இயந்திரமல்ல. அது ஓர் உயிருள்ள ஜீவன், நாம் எந்தப் பக்கம் இழுத்தாலும் காலம் முழுவதும் கூடவே ஓடிவரும் தன்மைகொண்டது நம் அற்புத உடல். அதற்கு ஒத்துழைக்கிறது உயிர்.

எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், எந்த ரூபத்தில் வந்தாலும் உடனடியாக உடல் எதிர்வினை புரிகிறது. உடலுக்கு எதிரான கிருமிகள், காயங்கள், பிரச்சினைகள் எது வந்தாலும் உடல் உடனே உட்கார்ந்து ஒப்பாரி வைப்பதில்லை. சத்தமில்லாமல் தானே சீர்செய்வதற்கு, தான் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு நிறைய முயல்கிறது. எதிர்கிருமிகளை அனுப்பிப் போரிடுகிறது, ரத்தம் வந்தால் நிறுத்துகிறது, பிரச்சினைகளைக் களைவதற்கு முயற்சிக்கிறது. இவ்வளவையும் நம்முடைய உடல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதி வழியிலேயே செய்கிறது. அதனால்தான் உடலின் அருமையைப் பல நேரம் நாம் புரிந்துகொள்ள மறுக்கிறோம் என்று தோன்றுகிறது.

மூடநம்பிக்கைகள்

சளி என்பது நோயல்ல, காய்ச்சல் என்பதும் நோயல்ல. நம் உடலெங்கும் சளி இருக்கிறது. உடலிலுள்ள கழிவை அது அகற்றிக்கொண்டே இருக்கிறது. கழிவு அதிகரிக்கும்போது, அது மூக்கு வழியாக வெளியேறும் சளியாக மாறுகிறது. காய்ச்சல் என்பது உடலில் தேங்கிவிட்ட கழிவை, உடலே எரிக்கக்கூடிய நிலை. அதற்கு எந்த மருத்துவமும் தேவையில்லை. கழிவு முழுமையாக எரிக்கப்பட்டவுடன் உடல் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். உடலில் கழிவு எரிக்கப்படும்போது, உடல் சூடு அதிகமாக இருக்கும் என்பதால் உணவைச் சாப்பிடக் கூடாது. பட்டினி இருந்தாலே போதும், செத்துப்போய்விட மாட்டோம். கூடுதல் உணவு உள்ளே போய் எரிந்தால், பிரச்சினை கூடும்.

இப்படி உடலின் இயக்கங்கள், இயல்பு, எதிர்வினை போன்றவற்றைப் பற்றி உள்ளார்ந்த ஒரு புரிதலை ஏற்படுத்தும் புதிய கதவுகளைத் திறக்கிறது இந்த நூல். உடல் பற்றி நாம் வைத்துள்ள மூடநம்பிக்கைகள், தண்ணீர்-மழை-குளியல் போன்றவற்றைப் பற்றி நாம் வைத்துள்ள மூடநம்பிக்கைகள், உணவு பற்றி நாம் வைத்துள்ள மூடநம்பிக்கைகள் என நம் உடலுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்களைப் பற்றி விலாவாரியாக இந்த நூல் அலசுகிறது.

நண்பனைப்போல்

இவ்வளவையும் அறிவுரை சொல்லும் தொனியிலோ, அச்சுறுத்தும் தொனியிலோ அல்லாமல் பக்கத்தில் உட்கார்ந்து அக்கறையுடன் பேசும் நண்பனைப்போலவும், கைபிடித்து உடலுக்குள் அழைத்துச் செல்லும் ஒரு சுற்றுலா வழிகாட்டியைப்போலவும், ஒரு பிரச்சினையில் ஆசிரியருடைய அனுபவத்தைப் பகிர்ந்து - இதைப் போய் ஏன் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள் என்று விழி திறக்கும் வழிகாட்டியைப்போலவும் திகழ்கிறது இந்த நூல். ‘உடலிடம் பேசுங்கள், கலந்துரையாடுங்கள்’ என்று நூலாசிரியர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதுபோலப் புத்தகமும் மிக இயல்பான நடையில், தொனியில் நம்முடன் வாதப் பிரதிவாதம் செய்கிறது.

மனசாட்சியுடன்கூடப் பல நேரம் பேசும் நாம், உடலுடன் பேசுவதேயில்லை. உடலுடன் பேசுவோம். சளி-காய்ச்சல் தொடங்கிப் பிரசவம் முதலாக எல்லாவற்றுக்கும் மருத்துவரையும் ஸ்பெஷலிஸ்ட்களையும் தேடி ஓடுவதால் உடலுக்கு எந்த அற்புதமும் நிகழப் போவதில்லை. நம் உடலை நாம் முதலில் புரிந்துகொள்ளுவோம். அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் அயல் உதவியை நாடினால்போதும் என்கிறார் நூலாசிரியர் போப்பு.

மருத்துவமும் கல்வியும் மிகப் பெரிய வியாபாரங்களாகப் பரிணமித்துவிட்ட இந்தக் காலத்தில், இதுபோன்று இயற்கையோடு இயைந்த, உள்முகமாகப் பார்க்கச் சொல்லும் நூல்கள் அரிதினும் அரிது. தன் பரிசோதனைகளை, தான் அனுபவித்ததை அடிப்படையாகக்கொண்டு, மரபு சார்ந்த ஆரோக்கிய உலகுக்கு அழைத்துச் செல்கிறார் போப்பு. போவதும் திரும்புவதும் நம் கையில்.



நூலாசிரியர் போப்பு

இந்த நூலின் ஆசிரியர் போப்பு என்ற போ. புருசோத்தமன் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சுற்றுச்சூழல் - மருத்துவ ஆர்வலர். ஓசூரில் மாற்று உணவகம் நடத்தியவர். ‘பட்டினி வயிறும் டப்பா உணவும்', ‘நம்ம சாப்பாட்டு புராணம்' என உணவு-மருத்துவ அரசியல் தொடர்பான மொழிபெயர்ப்பு, நேரடிப் புத்தகங்களை எழுதி வருபவர்.

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், 77, 53-வது தெரு, 9-வது அவென்யு, அசோக் நகர், சென்னை 83 / தொலைபேசி: 044 - 24896979

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்