கண்ணாமூச்சி ஆடிய காலம் மறைந்து, செயற்கைத் திரைகள் முன்பு இறுகிய முகத்தோடு குத்துச்சண்டை விளையாடிக் கொண்டிருக்கும் காலம் இது! தவறான வாழ்க்கை முறையால் பல்வேறு தொந்தரவுகள் இளம் குழந்தைகளை வாட்டி வதைக்கின்றன. குழந்தைப் பருவத்தில் பின்பற்றப்படும் சீரான உணவு முறையும் வாழ்க்கை முறையுமே எதிர்கால உடல், மன ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. விடுமுறைக் காலம் குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்துவதற்கான நல்ல காலம்.
குழந்தைகள் பாரம்பரிய உணவு
கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி போன்ற அற்புதமான சிறுதானிய உணவுப் பொருட்களை மறந்துவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், மக்ரோனி போன்ற வெளிநாட்டு உணவைக் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது, விதைப் பருவத்திலேயே விஷத்தைத் தூவுவதற்குச் சமம். பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, உடல்நலனைச் சீர்குலைக்கும் கார்ப்பரேட் தீனிகளுக்குப் பதிலாக தினைப் பாயசம், கம்புருண்டை, சாமை உப்புமா போன்ற பாரம்பரிய உணவை வழங்கலாம். இவற்றில் சுண்ணாம்புச் சத்தும் (கால்சியம்) இரும்புச் சத்தும் அதிக அளவில் பொதிந்துள்ளன. இப்படிப்பட்ட உணவைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், ஊட்டச்சத்து பானங்கள் தேவைப்படாது. சத்து டானிக் நிறுவனங்களே கேழ்வரகு, சாமையைத் தேடி அலைவது இன்றைக்குத் தலைப்புச் செய்தி.
பல குழந்தைகள் சாக்லெட்களுக்கு அடிமையாகவே மாறியிருக்கிறார்கள். இதனால் உடல் பருமனாதல், பல்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். தொடர்ச்சியாகக் குழந்தைகளுக்கு இனிப்பைக் கொடுப்பதே தப்பு என்ற முடிவுக்கு பலரும் வந்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு இனிப்பைக் கொடுக்க வேண்டுமென நினைத்தால் கடலை மிட்டாய், பொட்டுக்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்ற பாரம்பரிய இனிப்பைக் கொடுக்கலாம். வெல்லப்பாகு மட்டும் சேர்த்துச் செய்யப்பட்ட இனிப்பு உருண்டைகள் உடலுக்கு ஊக்கம் அளிப்பதுடன் புரதச்சத்தையும் தருகின்றன.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் காய்களையும் பழங்களையும் குழந்தைப் பருவத்திலேயே வழங்காததுதான், “உங்க குழந்தைக்குத் தலைவலி, காய்ச்சலும் இருக்கு. வந்து கூட்டிட்டுப் போறீங்களா” என்று பள்ளியிலிருந்து அவசர அலைபேசி செய்தி அடிக்கடி வருவதற்கு அடிப்படைக் காரணம். கேரட், பப்பாளி, பொன்னாங்கண்ணி போன்ற கீரை வகைகள் குழந்தைகளின் உணவில் தவறாமல் இடம்பெற்றுவந்தால், பள்ளியில் சேர்ந்த உடனே ‘சோடாபுட்டி' என்று கிண்டலாக அழைக்கப்படும் கண்ணாடியைப் போட வேண்டிய தேவை இருக்காது.
நோய்க்கு அடித்தளம்
ஊட்டச்சத்து மிகுந்த உணவைக் கொடுக்காமல், துரித உணவு வகையறாக்களை அதிக அளவில் குழந்தைகளுக்கு வழங்குவதால் அவர்களுடைய உடல்நலம் மோசமாக பாதிக்கப்படும். பாக்கெட் நொறுக்குத் தீனிகள், டின்களில் அடைக்கலம் புகுந்த உணவை தாராளமாக வாங்கித் தரும் பெற்றோர் பலர், அதிலுள்ள ரசாயனப் பொருட்களால் வயது முதிர்வதற்கு முன்பாகவே உடல் பருமன், உயர் ரத்தஅழுத்தம், இதய நோய் போன்றவை தங்கள் குழந்தைகளைத் தாக்கும் என்பதை அறிவதில்லை. நாற்பது வயதுக்கு மேல் மட்டும் தாக்கம் செலுத்திவந்த டைப் 2 வகை நீரிழிவு நோய், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது இளம் வயதிலேயே அதிகமாக பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.
உடலும் மனமும்
அதேபோல பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக்கூட மன அழுத்தம் வருமா என்று ஆச்சரியத்துடன் கேட்காதீர்கள். போட்டி நிறைந்த உலகில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடும் குழந்தைகளுக்கு மனநோய் அதிகரிக்கிறது என்கிறது ஒரு குழந்தைகள் ஆய்விதழ். நண்பர்கள், உறவினர்கள் என்று சுற்றியுள்ள சமூகத்தோடு அதிகம் பழக ஊக்கப்படுத்துவதுடன், அறிவுத்திறனை மேம்படுத்தும் நூல்களை வாசிக்கக் குழந்தைகளை உற்சாகப்படுத்தினால், தற்கொலை போன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் அரங்கேறாது.
‘காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு பள்ளியிலும் தொடர்ந்து படிப்பு, மாலை முழுவதும் டியூஷன், இரவுக் கனவுகளில் தேர்வுகளின் மிரட்டல்' என்று பள்ளிக் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துகிறது பெற்றோர்களின் எதிர்கால பயம். கல்வியோடு சேர்த்து இசை, விளையாட்டு, சரிவிகித உணவு போன்றவை குழந்தைக்குத் தரப்பட்டுவந்தால், குழந்தைகளின் உடலும் மனமும் நலமடையும் என்கிறது மிகப் பெரிய கணக்கெடுப்பு. குறிப்பிட்ட வயதிலிருந்து யோகாசனப் பயிற்சிகளை செய்துவந்தால், தள்ளாடும் வயதிலும் உடல் வீறுநடை போட வழி கிடைக்கும்.
மரப்பாச்சி பொம்மைகள்
புதிது புதிதாக வணிக வளாகங்களில் உலா வரும் அயல்நாட்டு பொம்மைகளில் கலந்திருக்கும் `ஈயம்’ (Lead), குழந்தைகளின் உடல்நலனைப் பெரிதும் பாதிக்கிறது. பொம்மைகளைக் கடிக்கும்போது பிஞ்சுகளின் உடலுக்குள் சிறிது சிறிதாக நுழையும் ஈய விஷம் மறதி, சோர்வு, எடை குறைவு மற்றும் மன வளர்ச்சிக் குறைபாடுகளை உண்டாக்குகிறது. அந்தக் காலத்தில் மருத்துவ குணம் மிக்க மரங்களால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விளையாடிய குழந்தைகளின் உடலில், எந்தவித விஷத்தன்மையையும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. இன்றும் சில இடங்களில் கிடைத்துக்கொண்டிருக்கும் மரப்பாச்சி பொம்மைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது எதிர்காலத்துக்கு நல்லது.
சுட்டெரிக்கும் வெயில் இல்லாத காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை விளையாட ஊக்கப்படுத்துவதன் மூலம் உடலில் `வைட்டமின் டி’ குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். இதன்மூலம் எலும்பு வளர்ச்சி மேம்படுத்தப்படுவதுடன் எலும்பு வலுப்படவும் செய்யும்.
ஐந்திலே வளைக்கலாம்
நோய்கள் வராமல் தடுக்கும் நெல்லிக்காய், பேரீச்சை, கொய்யா போன்ற பழ வகைகள், கம்பு, சோளம், தினை போன்ற சிறுதானியங்கள், அறிவைத் துலக்கும் வல்லாரை, முருங்கை இலை போன்ற கீரை வகைகள் ஆகியவற்றின் பயன்களை இளம் வயது முதலே குழந்தைகளுக்கு எடுத்துக்கூறினால், அவர்கள் ஆர்வத்துடன் உட்கொள்வார்கள்.
தூய்மையின் அவசியத்தைப் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தால், பல வகையான தோல் நோய்களையும் தொற்று நோய்களையும் தடுக்கலாம். சம்மணமிட்டு உணவருந்துவது, சாப்பிட்ட பின் வாய் கொப்பளிப்பது, துரித உணவின் தீமைகளைத் தெளிவுபடுத்துவது, இயற்கை உணவி்ன் பயன்களை எடுத்துரைப்பது போன்ற உணவு முறைகளைப் பெற்றோர் தங்கள் சந்ததிகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம். இதுபோல சிறு வயது முதலே நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகளிடையே ஏற்படுத்தினால், என்றுமே உற்சாகம் பொங்கும் மனிதர்களை எதிர்காலச் சமூகத்தில் பார்க்கலாம்.
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago