சாலை பாதுகாப்பு நம் கடமை!

By செய்திப்பிரிவு

2020இல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 1,33,201 பேர் இறந்துள்ளார்கள். 3,35,050 பேர் காயமடைந்துள்ளார்கள். அதிலும், 59.6% விபத்துகள் கிராமங்களில் நிகழ்ந்துள்ளன. இந்திய அளவில் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. சாலை விபத்து மரணங்களுக்கு, அதிவேகமே முதல் காரணம் (56.6%), ஆபத்தாக அல்லது கவனக்குறைவாக ஓட்டுதல், முந்திச் செல்லுதல் இரண்டாவது காரணம் (26.4%) எனத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டிலிருந்து வாகனத்தை எடுக்கும்பொழுது, “பார்த்து கவனமா போய்ட்டு வாங்க” என அக்கறையுடன் ஒருவர் சொல்வதும், “அதுசரி, நாம ஒழுங்காப் போனாலும், எதிரே வர்றவன் ஒழுங்கா வந்தாதானே” என மற்றவர் பதிலுரைப்பதும் பொதுவாக எல்லா வீடுகளிலும் நிகழக்கூடியது. அனைவருமே ஒழுங்கோடு வாகனம் ஓட்டுகிறோமேயென்றால் யார்தான் தவறிழைப்பது?

நமக்கு நாமே பாதுகாப்பு

வெளிநாட்டுப் பயணத்தின்போது, நண்பருடன் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன். ஓரிடத்தில் சாலை வேலை நடந்துகொண்டிருந்தது. இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதற்கு இடமில்லை. அப்பொழுது, எதிரே ஒரு வாகனம் வருவதைப் பார்த்த நண்பர் தன் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி வழி கொடுத்தார். “ஏன்? ஓர் அழுத்து அழுத்தியிருந்தால் அந்த வண்டி வருவதற்குள் நாம் போயிருக்கலாமே” என்றேன். சிரித்துக்கொண்டே, “நம்ம வண்டிக்கும் நமக்கும் நாமதான் பாதுகாப்பு” என்றார். அந்த இடத்தில் யோசித்தேன், ‘நாம ஒழுங்காப் போனாலும் எதிரே வர்றவன் ஒழுங்கா வந்தாதானே’ என்பதன் பொருள், நாம் வழிகொடுத்து, நிதானமாகச் சொல்ல வேண்டும் என்பதே. ஆனால், நான் விரைவாகச் செல்வேன், எனக்கு மற்றவர்கள் வழி விட வேண்டும் என்று நினைப்பவர்களும், எதிரில் வருகிறவர் ஒதுங்கட்டுமென, ஆக்சிலேட்டரைக் கூடுதலாக அழுத்தி ஓட்டுகிறவர்களும் இங்கே அதிகம். அதில் அவர்களுக்கு ஓர் ஆத்ம திருப்தியும் கூட.

ஒலிப்பானைத் தவிர்க்கும் வெளிநாட்டினர்

ஆபத்தான சூழலில் மட்டுமே ஓட்டுநர்கள் ஒலிப்பானை இயக்குவதை வெளிநாடுகளில் பார்த்திருக்கிறேன். அங்கே, விதிமுறையைப் பின்பற்றி, இடது ஓரத்தில் சராசரி வேகத்தில் போகிறார்கள்; எதிரே வருகிறவர்களும், சராசரி வேகத்தில் அவர்களது இடது ஓரத்தில் வருகிறார்கள்; வளைவுகளிலும், மலைச் சாலைகளிலும்கூட ஒலி எழுப்புவதில்லை. சாலையில் உள்ள சமிக்ஞைகளைத் தவறாகப் புரிவதனாலேயே அங்கே விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இங்கு, நமக்கு முன்னால் செல்கிறவரை ஒதுங்கச் சொல்லி சாலையை முழுமையாக நாம் ஆக்கிரமிக்கவே ஒலிப்பானை அதிகம் பயன்படுத்துகிறோம்.

விதிமுறைகளை மீறவா ஒலிப்பான்?

கிராமச் சாலையாக இருந்தாலும், நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையாக இருந்தாலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே விரைந்து செல்கின்றோம். ஒலி எழுப்பும் பழக்கத்தினாலேயே மெதுவாகச் செல்வதற்கும், விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் நாம் தவறுகிறோமோ? என நான் நினைப்பதுண்டு.

விபத்து நடந்ததென்றால், வலது புறம் ஏறிவந்தவர் முதலில் கேட்கும் கேள்வி, “நான் ஒலி எழுப்பினேன். நீங்கள் ஏன் ஒலி எழுப்பவில்லை”. இடதுபுறம் சென்றவர் விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஒலி எழுப்பாததே குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டு பக்கமும் பார்த்து நடங்கள்

“சாலையில் நடக்கும்போது ரெண்டு பக்கமும் பார்த்து நடங்கள்” எனவும் நம் வீடுகளில் சொல்வதுண்டு. இந்த அறிவுரை இரத்த நாளங்களில் கலந்துவிட்டது. நாடு கடந்த பயணங்களில், ஒருவழிச் சாலையில் நடந்து கடக்கும்போது, அனிச்சையாக இரண்டு பக்கமும் பார்த்திருக்கிறேன். வாகனங்கள் வலது புறம் செல்லும் பாதை என்றால், எதிர்த் திசையிலிருந்து வாகனங்கள் நிச்சயமாக வராது என்கிற விழிப்புநிலைக்கு வெளிநாடுகள் தாமதமாகவே வந்திருக்கிறேன். நம் ஊரிலோ, ஒருவழிப் பாதையிலும், எதிர்த்திசையில் வாகனம் ஓட்டி பாதசாரிகளை அச்சுறுத்துவதைத் தினந்தோறும் வேதனையோடு நம் குடும்பத்தினர் கடக்கிறார்கள். மேலும், விரைந்து சென்றுகொண்டேயிருக்கும் வாகனங்களுக்கு மத்தியில், சாலைகளில் நடந்து கடப்பது எவ்வளவு சிரமமானது என்பதை வாகனம் வைத்திருப்பவர்கள்கூட சிலவேளைகளில் அனுபவித்திருக்கிறோம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் சாலையைக் கடக்க அஞ்சி நிற்பதையும் பார்த்திருக்கிறோம்.

ஓட்டுநரின் உளவியல்

ஓட்டுநரின் உளவியல், போக்குவரத்து நெருக்கடி, வாகனம், சாலை வசதி, சுற்றுப்புறம் போன்றவை வாகன விபத்துகளுக்குக் காரணமாக இருந்தாலும், இவற்றில் ஓட்டுநரின் நடத்தை அதாவது அவரின் உளவியலே விபத்துக்கான முதன்மைக் காரணமாக இருப்பதை எண்ணற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உயிருள்ள மனிதர் எவராலும் சிந்திப்பதிலிருந்து விடுபட இயலாது. வாகனம் ஓட்டும்போதும் மனம் எதையாவது யோசித்துக்கொண்டேதான் இருக்கும். அவ்வேளையில், எதிரில் ஒரு வாகனம் வந்துவிட்டாலோ, முன்னால் சென்ற வாகனம் திடீரென்று நின்றுவிட்டாலோ, பள்ளம் அல்லது வேகத்தடை இருந்தாலோ நிகழ்பொழுதுக்கு மனத்தைக் கொண்டு வந்து, அடுத்துச் செய்யவேண்டியதை உடனடியாக முடிவெடுக்கும் கால அவகாசம் இருக்குமளவுக்கு நாம் வாகனம் ஓட்டும் வேகம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது, முடிவெடுத்துச் செயல்படுத்துவதற்கு முன்பாகவே மோதிவிடுவோம்.

நமது பண்பை வெளிப்படுத்தும் பார்வை

எதிர்பாராச் சூழலில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டாலோ, மற்றவரின் வாகனம் பழுதாகி நின்றாலோ, நாம் மெல்ல நிறுத்துகிறோமா, திட்டுகிறோமா, ஒலி எழுப்புகிறோமா, எரிச்சலுருகிறோமா என்பது நமது நடத்தையை, பண்பினை வெளிக்காட்டுகிறது.

இத்தகையச் சூழ்நிலைகளில்;

எதிரே உள்ள ஓட்டுநரின் குணநலனைப் பார்க்கிறவர்கள்: கொஞ்சம்கூட பொறுப்பில்லாதவன், வண்டியே ஓட்ட தெரியவில்லை, முட்டாள் என நினைக்கிறார்கள்.

தோற்றத்தைப் பார்க்கிறவர்கள்: ஓட்டுகிறவரின் பாலினம், வயது, உயரம், நிறம் உள்ளிட்டவற்றைக் கவனிக்கிறார்கள். இந்த இரு வகையினருமே, எளிதில் எதிர்மறை உணர்வுக்குள்ளாகிக் கோபப்படுகிறார்கள். பழி தூற்றுகிறார்கள்.

ஆனால், சூழ்நிலையை யோசிக்கிறவர்கள்: நேர்மறையாகச் சிந்திப்பதுடன், சூழலைப் புரிந்துகொள்கிறார்கள், பொறுத்துக்கொள்கிறார்கள். ‘ஒருவேளை வாகனம் பழுதாகியிருக்கலாம்’, ‘வாகனத்தில் நோயுற்றோர் யாராவது இருக்கலாம்’, ‘முன்னால் ஏதாவது விபத்து நிகழ்ந்திருக்கலாம்’, ‘ஒலி எழுப்பி அவர்களைப் பயமுறுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்’, ‘சிறிது நேரத்தில் சரியாகிவிடும்’, இங்கே இருப்பதற்கு எல்லாருக்குமே உரிமை உள்ளது” என நினைக்கிறார்கள், மாற்று வழி குறித்துச் சிந்திக்கிறார்களென சமூக உளவியலாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுள்ளார்கள்.

ஒலிப்பானைத் தவிர்ப்போம்

ஆக, நம் பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு என்பதால், விரும்புகிறவர்கள், வாரத்தில் ஒருநாள் ஒலி எழுப்பாமலேயே வாகனம் ஓட்டிப் பார்க்கலாம். தானாகவே வண்டியின் வேகம் குறைவதை என்னைப்போலவே நீங்களும் அனுபவத்தில் உணர்வீர்கள். நேர் சாலையிலும், வளைவிலும் இடதுபுறம் மட்டுமே வாகனம் ஓட்டி, ஒருவழிச் சாலையில் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டாமல், மற்ற வாகன ஓட்டிகளை மதித்து, சூழ்நிலையைப் பகுத்துணர்ந்து பண்பட்டவர்களாக வாழ்வோம். பாதுகாப்பாகப் பயணிப்போம்.

கட்டுரையாளர், எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்