கரோனா - கரோனா வைரஸ் இவற்றில் எது சரி?
வைரஸ் என்பது ஒருவகைக் கிருமி (germ). கிருமிகளில் பல வகைகள் உள்ளன. பாக்டீரியா (Bacteria), பூஞ்சை (fungus), வைரஸ் போன்றவை மனிதர்களிலும் பிற உயிர்களிலும் நோய்களையும் கோளாறுகளையும் உண்டாக்குகின்றன என்பதால், கிருமிகள் என்றழைக்கப்படுகின்றன.
அறிவியல்ரீதியாக இவற்றையெல்லாம் நுண்ணுயிரிகள் (micro oraganisms) என்கிறோம். சாதாரணமான நிலையில் பார்வைக்குப் புலனாகாமல், நுண்ணோக்கி களைக் (microscopes) கொண்டு மட்டுமே இவற்றைக் காண முடியும். வைரஸ்களில் பலவகைகள் உள்ளன. இவற்றில் ஒருவகை, கரோனா வைரஸ்.
பாக்டீரியாக்களும் வைரஸ்களும் ஒன்றா?
இல்லை, வெவ்வேறு. பாக்டீரியாவுக்கும் வைரஸுக்கும் மிக முக்கியமான வேறுபாடு ஒன்றுள்ளது. பாக்டீரியா என்பது உயிர் வாழ்வது (living being); அதாவது ஓரிடத்தில் தானே வாழக்கூடியது. ஆனால், வைரஸை உயிர் வாழ்வது என்று விவரிக்கமுடியாது.
வைரஸ் என்பதை ஒரு துகள் (particle) என்று வர்ணிக்கலாம். இந்தத் துகளானது, உயிரில்லாத இடத்திலோ பொரு ளிலோ இருந்தால், சிறிது சிறிதாகச் சிதைந்து போகும். உயிரற்ற பொருளில் இருக்கும்போது, இந்தத் துகளால் பெருக முடியாது.
ஆனால், இதே துகளானது ஏதேனும் உயிரிக்குள் அல்லது உயிரணுவுக்குள் நுழைந்து விட்டால், வெகு வேகமாகத் தன்னைப் பெருக்கிக்கொள்ளும். உயிரற்றவற்றில் உயிரற்றதாக இருந்துவிட்டு, உயிருள்ளன வற்றுள் புகுந்தால் தன்னை உயிருள்ளதாக மாற்றிக்கொள்கிற தன்மை, வைரஸுக்கு உண்டு. இந்த வகையில், வைரஸை நுண்ணுயிரி என்று அழைப்பது முழுமையாகச் சரியில்லை. அதே சமயம், உயிரற்றது என்று வைரஸை ஒதுக்கிவிடவும் முடியாது. வைரஸை நுண்ணோக்குத் தொற்றுத் துகள் (microscopic infectious particle) எனலாம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், ஏன் பாக்டீரியாக்களைக்கூட வைரஸ்கள் தாக்குகின்றன.
வைரஸ்களைப் பற்றி மனிதர்கள் எப்படித் தெரிந்துகொண்டார்கள்?
டிமிட்ரி இவனாவ்ஸ்கி என்னும் ரஷ்யத் தாவரவியலாளர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தார். 1887 வாக்கில் உக்ரைன் வட்டாரத்தில் புகையிலைச் செடிகளைத் தாக்கி, பயிரை அழித்த நோய் குறித்துக் கண்டறிவதற்காக அவர் அனுப்பப்பட்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு, கிரீமியா வட்டாரத்தில் இதே போன்று புகையிலைச் செடிகள் பாதிக்கப்பட, அதைக் கண்டறியவும் இவனாவ்ஸ்கி அனுப்பப்பட்டார். இரண்டு வட்டாரங்களிலும், ஒரே வகையான கிருமிதான் நோய்க்குக் காரணம் என்பதை இவனாவ்ஸ்கி கண்டார். இந்தக் கிருமி மிக மிக நுண்ணியது என்பதை, 1892-ல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து 1898-ல் மார்டினஸ் பெய்ஜெரின்க் என்னும் டச்சுத் தாவரவியலாளர், புகையிலைச் செடிகளின் நோய் குறித்து மேலும் பல சோதனைகளை மேற்கொண்டார். இச்சோதனைகளின் முடிவில், புகையிலைச் செடிகளைத் தாக்குவது பாக்டீரியாக்களைக் காட்டிலும் நுண்ணியதான ஏதோவொரு பொருள் என்று அறிவித்தார். பாக்டீரியாவிலிருந்து வேறுபட்டது என்று காட்டுவதற்காக, இப்பொருளுக்கு வைரஸ் (virus) என்று பெயர் சூட்டினார். லத்தீன் மொழியில், இச்சொல்லுக்கு ‘நச்சு’ என்று பொருள். 1935 முதல் 1941 வரை பல்வேறு அறிஞர்கள் நிகழ்த்திய சோதனைகளின் விளைவாக, இந்த வைரஸுக்குப் புகையிலை பல்துகள் வைரஸ் (Tobacco mosaic virus) என்று பெயரிடப்பட்டது. வைரஸ் என்பது திரவம் அல்ல, துகள் என்பதும் கண்டறியப்பட்டது.
டிமிட்ரி இவனாவ்ஸ்கி, மார்டினஸ் பெய்ஜெரின்க் ஆகிய இருவரும் வைராலஜி (virology) என்னும் புதிய துறையின் நிறுவனர் களாகக் கருதப்படுகின்றனர். கோடிக்கணக்கான, லட்சக்கணக்கான வைரஸ் வகைகள் உள்ளன. ஏறத்தாழ 5,000 வைரஸ் வகைகள் அடையாளம் காணப்பட்டி ருக்கின்றன. இன்னும் ஏராளமான வைரஸ் வகைகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வைரஸின் அமைப்பு என்ன?
ஆர்.என்.ஏ., டி.என்.ஏ. பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மரபியல் பொருள் வடங்கள் (genetic material strands) இவை. ஆர். என். ஏ., (ரைபோ நியூக்ளிக் அமிலம்; RNA – Ribo nucleic acid) என்பது ஒருவகையான வடம். டி.என்.ஏ., (டிஆக்ஸி ரைபோ நியூக்ளிக் அமிலம்; DNA – Deoxy ribo nucleic acid) என்பது மற்றொரு வகையான வடம்.
இந்த வடங்களில் ஏதேனும் ஒன்று,அதைச் சுற்றியொரு புரத உறை. இந்தப் புரத உறைக்கு கேப்ஸிட் (Capsid) என்று பெயர். இதுதான், பெரும்பாலான வைரஸ்களின் அமைப்பு. உள்ளிருக்கும் மரபியல் பொருளுக்கு கேப்ஸிட் பாதுகாப்பைத் தருகிறது. ஒரு சில வைரஸ்களில், கேப்ஸிட்டுக்கும் வெளியில் மற்றுமொரு உறை இருக்கக்கூடும். கொழுப்புப் பொருள் மிகுந்த இந்த உறை, உள்ளிருக்கும் மரபியல் பொருளுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தரும். இத்தகைய வைரஸ் துகள், உயிரற்ற இடத்தில்கூட, நீண்ட நேரத்திற்குச் சிதைவுறாமல் வீரியத்தோடு இருக்கும். மரபியல் பொருள், கேப்ஸிட் உறை ஆகியவற்றோடு கொழுப்புப் பொதி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இந்த அமைப்பு கொண்டதுதான் ஒரு வைரஸ்துகள்.
ஆர்.என்.ஏ. வைரஸ்கள் மனிதர்களை அதிகம் பாதிக்கின்றனவா?
மனிதர்களுக்கு நோயுண்டாக்கும் நிறைய வைரஸ்கள், ஆர்.என்.ஏ. வகையைச் சேர்ந்தவை. ஜலதோஷத்தை உண்டாக்குகிற ரைனோ வைரஸ், கல்லீரல் அழற்சியையும் மஞ்சள் காமாலையையும் தோற்றுவிக்கும் ஹெபடைட்டிஸ் ஏ, சி, டி, ஈ வைரஸ்கள், இளம் பிள்ளைவாதத்தை உண்டாக்குகிற போலியோ வைரஸ், ஜெர்மானியத் தட்டம்மையைத் தோற்றுவிக்கும் ருபெல்லா / ரூபி வைரஸ், டெங்குக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் டெங்கு வைரஸ், மஞ்சள் காய்ச்சல் நோயைத் தோற்றுவிக்கும் யெல்லோ ஃபீவர் வைரஸ், ஸிகா நோயை உண்டாக்கும் ஸிகா வைரஸ், சிக்குன்குனியா நோயைத் தோற்றுவிக்கும் சிக்குன்குனியா வைரஸ், எபோலா குருதிக்கசிவுக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் எபோலா வைரஸ் குழு, தட்டம்மை என்னும் மணல்வாரி அம்மையை உண்டாக்கும் மீஸில்ஸ் மோர்பில்லி வைரஸ், பொன்னுக்கு வீங்கி என்னும் புட்டாலம்மையை உண்டாக்கும் மம்ப்ஸ் வைரஸ், நிபா நோயைத் தோற்றுவிக்கும் நிபா வைரஸ், லாஸா குருதிக்கசிவுக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் லாஸா வைரஸ், குழந்தைகளில் சளி, இருமல் ஆகியவற்றோடு பலவகையான மூச்சுத்தடக் கோளாறுகளையும் நோய்களையும் உண்டாக்குகிற சுவாசச் சேர்ப்பு வைரஸ், வெறிநாய்க்கடி நோய்க்குக் காரணமான ரேபிஸ் வைரஸ், பலவகையான வயிற்றுப்போக்குகளையும், இரைப்பை - குடல் அழற்சிகளையும் உண்டாக்குகிற நோரோ வைரஸ்கள், இவற்றோடு இன்ஃப்ளுயன்சா காய்ச்சலை உண்டாக்கும் பலவகையான இன்ஃப்ளுயன்சா வைரஸ்களும், 2019 ஆண்டின் இறுதியிலிருந்து தொடங்கி உலகையே ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் கரோனா வைரஸும் (Corona virus) ஒற்றைவட ஆர்.என்.ஏ. வைரஸ்கள்.
குழந்தைகளிடையேயும் பெரியவர்களிடை யேயும் வயிற்றுப்போக்கைத் தோற்றுவிக்கும் ரோட்டா வைரஸ், பிகோபிர்னா வைரஸ் ஆகியவை இரட்டை வட ஆர்.என்.ஏ. வைரஸ்கள். ஆர்.என்.ஏ. வைரஸ்கள் பலவும் விலங்குகள், தாவரங்கள், காளான்கள் போன்ற பலவற்றிலும் நோயுண்டாக்குகின்றன. பாக்டீரியாக்களைப் பாதிக்கிற பாக்டீரியோஃபேஜ் (Bacteriophage) வைரஸ்கள் சிலவும், ஆர்.என்.ஏ. வைரஸ்களாகும்.
(டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய ‘உயிரற்றஉயிர்’ நூலிலிருந்து ஒரு பகுதி. கரோனா வைரஸ் பின்னணியில் அவர் எழுதியுள்ள விரிவான இந்த நூல் அண்மையில் வெளியானது.)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago