மரபு மருத்துவம்: நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இந்திய மருந்துகள்

By டாக்டர் வி.விக்ரம்குமார்

நீரிழிவு நோயின் கூடாரமாகி வருகிறது நம் நாடு. 40, 50 வயதுகளில் தலைகாட்டத் தொடங்கிய டைப் -2 வகை நீரிழிவு நோய் இப்போது குழந்தைகளையும்கூடத் தாக்கத் தொடங்கியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சி. குடும்பத்தில் ஒருவருக்காவது நீரிழிவு நோய் இருப்பது சாதாரணமாகி வருகிறது. இது மரபியல்ரீதியாக அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவம் மட்டுமே ஒரே தீர்வு என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், இந்திய மருத்துவ முறையில் பல மருந்துகள் உள்ளன, புதிதாக வந்துகொண்டிருக்கின்றன.

காரணங்கள்

நீரிழிவு நோய்க்கு மதுமேகம், சர்க்கரை வியாதி, டயாபடிஸ் எனப் பல வழக்குப் பெயர்கள் உண்டு. உடல்பருமன், போதிய உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், மரபியல் எனப் பல காரணங்கள் இதற்கு முன்னிறுத்தப்பட்டாலும், முறையற்ற உணவு முறைதான் முதன்மைக் காரணம். மதுமேக நோய் உண்டாவதற்கு வேகாத உணவு, செரிக்காத உணவு, அதிக இனிப்பு சேர்ந்த உணவு, அதிக அளவு உணவு, கெட்டுப்போன இறைச்சி, மதுபானம் எனப் பல காரணங்களைப் பட்டியலிடுகிறது சித்த மருத்துவம். இந்தப் பட்டியலில் உள்ள அனைத்தும் துரித உணவின் மூலம் ஒரே நேரத்தில் நமக்குக் கிடைத்து, நீரிழிவு நோய் உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு இந்திய மருத்துவ முறையிலேயே பல்வேறு சிகிச்சைகள், மாத்திரைகள் உள்ளன.

‘BGR 34’ மாத்திரை

அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்கான கவுன்சிலை (C.S.I.R.) சார்ந்த தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (N.B.R.I.) மற்றும் மத்திய மூலிகைச் செடிகள் ஆராய்ச்சி நிறுவனம் (C.I.M.A.P.) இணைந்து `BGR 34’ என்ற நீரிழிவு நோய்க்கான மாத்திரையைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளன. BGR என்பது Blood Glucose Regulator என்பதையும், 34 என்பது மாத்திரையில் உள்ள 34 வகையான முக்கிய வேதிப்பொருட்களையும் குறிக்கின்றன.

Berberine, Xanthopurin, Scopoletin, Pterostillbene, Palmatine, Isoquinoline போன்று இதில் உள்ள 34 வேதிப்பொருட்களும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மரமஞ்சள், வேங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தில், மஞ்சிட்டி, வெந்தயம் ஆகிய ஆறு மூலிகைகளின் சூரணம் மற்றும் சத்துகள் `BGR 34’ மாத்திரையில் கலந்துள்ளன. இந்த மாத்திரை ஆயுர்வேத மருந்தாக, மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

கணையத்துக்குப் பாதுகாப்பு

`BGR 34’ அதிசர்க்கரை அளவை குறைப்பதுடன், இதயத்தையும் வலுவாக்குகிறது. இந்த மருந்து எதிர்-ஆக்ஸிகரணியாகவும் (Anti-oxidant) செயல்படுகிறது. மேலும் கணையச் செயல்பாடுகளைச் சிறப்பாக்குவதுடன், கணைய செல்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் தடுக்கிறது. காலை, இரவில் இரண்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இதுவரை நடைபெற்ற ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த மாத்திரையால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அதேநேரம் கர்ப்பிணிகள் மாத்திரையைப் பயன்படுத்தலாமா என்பதைப் பற்றி ஆய்வுகள் நடைபெறவில்லை.

`D 5’ நீரிழிவு சூரணம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள `சித்த மருத்துவ மைய ஆராய்ச்சிக் கழகம்’ ஒரு வருடத்துக்கு முன்பு `D 5’ எனும் நீரிழிவு நோய்க்கான சூரணத்தை அறிமுகப்படுத்தியது. இது வெளிநோயாளர் பிரிவில் இப்போதும் வழங்கப்பட்டுவருகிறது. இரண்டு கிராம் சூரணத்தை, வெந்நீரில் கலந்து இரண்டு வேளை எடுத்துக்கொள்ள நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுவதாக ‘C.C.R.S.’ நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திங்கள்கிழமைகளிலும், மூத்த குடிமக்களுக்குப் பிரத்யேகமாகச் செவ்வாய்க்கிழமைகளிலும் இம்மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

நாவல் கொட்டை சூரணம்

`சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா’ என்று முருகன் ஔவையிடம் கேட்டதாக வரும் புராணப் பதிவுகளுக்கு, நாவல் பழத்தின் மருத்துவக் குணங்களும்கூட ஒரு காரணியாக இருந்திருக்கலாம். நாவல் பழத்தைச் சுவைத்துவிட்டு, அதன் கொட்டையைக் காயவைத்து அரைத்த சூரணத்தை ஐந்து கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க, நீரிழிவு நோயால் உண்டாகும் அதிக தாகம் (Polydipsia) குறையும். நீரிழிவு நோயும் கட்டுப்படும்.

‘நீரிழிவும் சேருமோ, தாகமும் போம்' என்ற தேரையரின் வரிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. சதுரகிரி மலைப் பாதையில் இருக்கும் `நாவல் ஊற்று’ நீரைக் குடிக்க நீரிழிவு நோய் குறைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆவாரைக் குடிநீர்

ஆவாரை, கொன்றை, நாவல், கடல் அழிஞ்சில், முத்தக்காசு, கோஷ்டம், மருதம்பட்டை ஆகியவை கலந்த குடிநீர் சூரணம் ஐந்து கிராமுக்கு, 300 மி.லி. தண்ணீர் சேர்த்து 40 மி.லி. ஆக வற்றச் செய்து குடித்துவந்தால், `காவிரி நீரோடு கடல் நீரும் வற்றும்’ என்ற உவமையை முன்வைக்கிறது சித்தர் பாடல். அதாவது மதுமேக நோயில் காணப்படும் அதி சிறுநீர் (Polyuria) கழிதல் என்ற அறிகுறி கட்டுப்படும் என்பதையே இந்த வரிகள் உணர்த்துகின்றன. இலை, பூ, பட்டை, வேர், பிசின் என ஆவாரையின் அனைத்து உறுப்புகளும் நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

நீரிழிவு நோய்ப் புண்ணுக்கு

ஊமத்தை இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் `மத்தன் தைலம்’ என்ற சித்த மருத்துவ எண்ணெயை வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்த நீரிழிவு நோய் காரணமாக உண்டாகும் புண்கள், பிளவை முதலியவை குணமாகும். ‘விரணமும் போம் வாய்க்குழிப்புண் கட்டிகளும் மாறுங்காண்' என்ற சித்தர் விளக்கப் பாடல் இதற்கான ஆதாரத்தை வெளிப்படையாய்ச் சொல்கிறது. அதேநேரம் புண்கள் மட்டுமில்லாமல், தங்கள் பாதங்களுக்குத் தனிக் கவனம் செலுத்தி நீரிழிவு நோயாளிகள் பாதுகாப்பது அவசியம்.

மேலும் சில மருந்துகள்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெந்தயப் பொடி, வெந்தய ஊறல் நீர், சிறுகுறிஞ்சான் பொடி, ஆவாரம் பூ (பச்சையாக), கறிவேப்பிலை பொடி, இதயத்தை வலுவாக்க மருதம் பட்டை சூரணம், சீந்தில் சூரணம், திரிபலா சூரணம், நிலவேம்புக் குடிநீர் ஆகியவற்றை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். அனைத்து அரசு சித்த மருத்துவப் பிரிவுகளிலும் நீரிழிவு நோய்க்கு மதுமேக சூரணம், மதுமேக மாத்திரை, புண்களைப் போக்கும் மத்தன் தைலம் இலவசமாக வழங்கப்படுகிறது. வாரம்தோறும் குறிப்பிட்ட நாட்களில் மதுமேக நோய்க்கான சிறப்பு முகாம்கள் அரசு சித்தா பிரிவில் நடைபெறுகின்றன.

யோகாவும் இயற்கை மருத்துவமும்

வில்லாசனம், கலப்பை ஆசனம், சர்வாங்காசனம், பவனமுக்தாசனம், பாதஹஸ்தாசனம் போன்ற யோகாசனப் பயிற்சிகள் மதுமேக நோய் வராமல் தடுப்பதுடன், கணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் செய்கின்றன. வயிற்றுப் பகுதிக்கான மண் சிகிச்சையும் இடுப்புப் பகுதிக்கான ‘ஹிப் பாத்’ எனும் நீர் சிகிச்சையும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறை மருத்துவங்கள்.

சேர்த்தலும் தவிர்த்தலும்

மதுமேக நோயாளிகள் பழங்க ளையே சாப்பிடக் கூடாது என்ற கருத்து மிகவும் தவறானது. கொய்யா, பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு பழங்களின் சில துண்டுகளைச் சாப்பிடலாம். பச்சைக் காய்கறிகள், பாகற்காய் சாறு, தக்காளி சாறு, நெல்லிக்காய், முளைகட்டிய தானியங்கள், மோர், சிவப்பரிசி, பூண்டு, சீரகம், இஞ்சி, வெங்காயம், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

சத்து நீக்கப்பட்ட வெள்ளை அரிசி உணவைக் குறைத்துக்கொள்வது நல்லது. சர்க்கரை, பப்ஸ், பீட்ஸா, பர்கர் போன்ற பேக்கரி உணவு, கிழங்கு வகைகள், செயற்கை குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மதுவும் புகையும்

மதுமேக நோயாளிகள் மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். புகைப் பழக்கம் கொண்ட மதுமேக நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பொதுவாகவே நீண்ட நாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தக் குழாய்கள் சேதமடைந்திருக்கும். அதோடு நிகோடின் கலந்த புகையும் சேர்ந்துகொண்டால் ரத்தக்குழாய்கள் சீரழிவது உறுதி.

கட்டுப்பாடு முக்கியம்

நீரிழிவு நோய்க்கான மருந்துகள் எதுவாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தச் சர்க்கரையின் அளவைப் பொறுத்து மருந்துகளின் அளவை நோயாளிகளே அதிகரிப்பதையும் குறைப்பதையும் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். நீரிழிவு போன்ற சில நோய்களை வராமல் பார்த்துக்கொள்வதே நல்லது. நோய் வந்துவிட்டால் மருந்துகள், தகுந்த உணவு முறை, நடைப்பயிற்சி மூலம் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

‘நீரிழிவு நோயாளர்களை அதிகம் கொண்டிருக்கும் நாடு' என்ற பெருமையை வருங்காலத்திலாவது நாம் விட்டுக்கொடுக்கவும் உருமாற்றவும், உணவு மற்றும் வாழ்க்கை முறையை அக்கறையுடன் வடிவமைப்பது அவசியம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்