கண்கள் இல்லையென்றால் வெளிச்சம் இல்லை, வண்ணங்கள் இல்லை, ஏன் இந்த உலகமே இல்லை. அதனால்தான், ‘கண்களை நேசியுங்கள்’ என்பது கடந்த மாதம் கொண்டாடப்பட்ட உலகப் பார்வை நாளின் (World Sight Day) கருப்பொருளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடை கடையாக ஏறி இறங்கி, பார்த்துப் பார்த்து வாங்கி, தரமான ஆடைகளை உடுத்துகிறோம். கூடுதல் கவனத்துடன் உடலை அழகுபடுத்திக்கொள்கிறோம். ஆனால், கண்களின் பாதுகாப்பு பற்றிச் சிந்தித்திருக்கிறோமா? வலக்கண்ணை மூடிக்கொண்டு இடக்கண்ணால் பாருங்கள் ஒரு காட்சி தெரியும். பிறகு இடக்கண்ணை மூடிக்கொண்டு வலக்கண்ணால் பார்த்தாலும் ஒரு காட்சி தெரியும். ஆனால், இரண்டு கண்களால் பார்த்தாலும் ஒரு காட்சிதானே தெரிகிறது. நியாயமாக இரண்டு காட்சிகள் அல்லவா தெரிய வேண்டும். அப்படியில்லாமல் ஒரே காட்சி தெரிவதுதான் இயற்கையின் அற்புதப் படைப்பு.
சிறு தூசி என்று நினைக்கலாமா?
திடீரெனக் கண்ணில் உறுத்தல் ஏற்பட்டால், கண்களை நன்றாகத் தேய்த்துவிடுவோம். பின்னர் வேலையில் மறந்துவிடுவோம். மீண்டும் உறுத்தல் நினைவுக்கு வரும்போது வீட்டில் இருக்கும் பழைய கண்சொட்டு மருந்தைக் கண்ணில் விடுவோம் அல்லது மருந்துக் கடையில் கிடைக்கும் சொட்டுமருந்தைப் போடுவோம். உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் என நினைப்பது கிடையாது.
கண்ணில் தூசி பதிந்திருந்தால், உரிய வகையில் தூசியை எடுத்தால்தான் வெளியேறும். உறுத்தலும் சரியாகும். அதை விடுத்து நீங்களாகச் சொட்டு மருந்து போடுவதால் அது வெளியேறாது. நீங்கள் பயன்படுத்திய மருந்து, பழைய சொட்டு மருந்தாக இருக்கும்பட்சத்தில், பிரச்சினை மேலும் அதிகரிக்கவே செய்யும். கடையில் வாங்கிய சொட்டு மருந்து ஸ்டீராய்டு வகையாக இருந்தாலும் பிரச்சினைதான். மேலும் மேலும் கண்ணைத் தேய்த்துவிடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஒருவேளை தூசி கருவிழியில் (Cornea) இருக்கும்போது தேய்த்துவிட்டால், தூசியினால் கருவிழியில் புண் (Corneal Ulcer) ஏற்படும். சாதாரண தூசியினால் கண்ணின் கருவிழி தேவையில்லாமல் புண்ணாக நாமே காரணமாக இருக்கலாமா?
தலைவலி கவனம் தேவை
தலைவலி வராதவர்கள் யாராவது இருக்கி றார்களா? தலைவலி என்றதும் பாராசிட்டமாலை உட்கொள்கிறோம். 35 வயதுக்குமேல் அடிக்கடி தலைவலி தொடர்ந்துகொண்டே இருந்தால், எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தாக வேண்டும். தலைவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு வேளை கண்ணில் அழுத்தம் (Eye Pressure) உயர்ந்தாலும் தலைவலி வரலாம்.
கண்ணில், கண்நீர் அழுத்தம் ஏற்பட்டு நாள்பட்ட நிலையில் கண் மருத்துவரைப் பார்க்கும்போது அழுத்தம் அதிகமாக உயர்ந்திருக்கலாம் (Glaucoma). அதனால், பார்வை நரம்புகள் நசிந்து பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். தலைவலி வந்தவுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றிருந்தால் கண்நீர் அழுத்த உயர்வினை தொடக்கத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால், அந்த வாய்ப்பைப் பலரும் இழந்து துன்பப்படுவதுதான் நடக்கிறது. ஒருமுறை அழுத்த உயர்வினால் ஏற்பட்ட பார்வை இழப்பினை மீண்டும் சரிசெய்ய முடியாது. எனவே, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண்நீர் அழுத்தச் சோதனையையும் செய்துகொள்ள வேண்டும்.
நீரிழிவு பாதிப்பு
தேநீர்க்கடைக்கு நான்கு பேர் சென்றால், நான்கில் இரண்டு சர்க்கரையுடனும், ஒன்று அரை சர்க்கரை, இன்னொன்று சர்க்கரை இல்லாமலும் கேட்கக்கூடிய நிலைமை இருக்கிறது. அந்த அளவுக்குச் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சர்க்கரை நோயினால் மூளை, சிறுநீரகம், நரம்பு மண்டலம், கண், இதயம் போன்றவை பாதிக்கப்படலாம். கண்ணைப் பொறுத்தவரையில் நீரிழிவு நோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முறையாக மருத்துவம் செய்துகொள்ளாதவர்களுக்குக் கண்ணில் சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy) ஏற்பட்டுப் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படலாம். சர்க்கரைநோயை அலட்சியப்படுத்துவதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு வருந்துவதால் பயன் ஏதுமில்லை. நீரிழிவு நோயையும் கவனிக்க வேண்டும். கண்ணையும் பார்க்க வேண்டும். நீரிழிவு நோய்க்குப் பொதுமருத்துவரைப் பார்ப்பதுபோல் ஆண்டுக்கு ஒரு முறை கண்களையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
கண் பாதுகாப்புக்கு எளிய வழி
வாழ்நாள் முழுவதற்கும் கண் பார்வை தேவை. அதற்கு சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். தினமும் காலையில் எழுந்தவுடன் அறையில் இருக்கும் ஏதாவது ஒரு படத்தைப் பார்க்க வேண்டும். தனித்தனியாக ஒவ்வொரு கண் மூலம் பார்க்க வேண்டும். இரண்டு கண்ணிலும் படம் ஒரே மாதிரியாகத் தெரிந்தால் பிரச்சினை ஏதுமில்லை. மாறாக திடீரென ஒரு கண்ணில் நன்றாகவும் இன்னொரு கண்ணில் தெளிவில்லாமலும் தெரிந்தாலோ அல்லது இரண்டு கண்ணிலுமே பார்வை மங்கலாகத் தெரிவதுபோல் உணர்ந்தாலோ உடனே கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
கண்ணில் சிவப்பாகவோ, வலியோ, உறுத்தலோ அல்லது பார்வை மங்கல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது. சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் தொடக்க நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெறுவது நல்லது. அதனால், பார்வை பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். அழகான ஓவியத்தையோ சிற்பத்தையோ காணும்போது ஆனந்தம் அடைகிறோம். அந்த ஆனந்தம் நிலைக்கவும், நீடிக்கவும் கண்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago