இனி வரும் காலத்தில் தினசரி சாப்பிடு வதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி அத்தியாவசியம்!
அந்தக் காலத்தில் ஆன்மிகத் தலங்களுக்குப் பாத யாத்திரை, கிரிவலம், மலைமேல் நடப்பது எனப் பலரும் நடையாய் நடந்தது உண்டு. இன்றைக்கு மோட்டார்களும் எஞ்சின்களும் படுவேகத்தில் இயங்கவைக்கும் நிலையில், நடைபயிற்சி எனும் சிறந்த பழக்கத்தை ஏறக்குறைய மறந்தேவிட்டோம்!
உடலுக்குள் அவலங்கள்
உடலுக்குத் தேவையான அளவு அசைவு களைக் கொடுக்காததால், எவ்வளவு உடல் உபாதைகள் நமது உடலுக்குள் குடியிருக் கின்றன தெரியுமா? ரத்தக்குழாய்களில் தடிமனாகப் படிந்துள்ள கொழுப்புப் திட்டுக்கள், பானையைப் போன்ற வயிறு, சூரிய ஒளி பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் வைட்டமின் – டி குறைபாடு, நெகிழ்வாக இருக்க வேண்டிய மூட்டுப் பகுதிகள் அசைவின்றிக் கடினமாக மாறிவிட்ட அவலம், உடலின் முக்கிய உள்ளுறுப்பு களின் திறன் குறைபாடு, உறக்கமின்மை எனும் மனரீதியான துன்பம், கஷ்டப்பட்டு உறங்கினாலும், மறுநாள் காலையில் ஏற்படும் கடுமையான உடற்சோர்வு, இயற்கையாக நிகழ வேண்டிய கழிவு நீக்க முறைகளில் பெரும் தடை, திக்கித் திணறும் செரிமானம் என எண்ணி லடங்காத உடல்ரீதியான திண்டாட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
நோய்களின் தலைமுறை
இதெல்லாம் ஏதோ முதிய வயதில் ஏற்படும் தொந்தரவுகள் அல்ல. முறையான உடற் பயிற்சி இல்லாமல் நடுத்தர வயதினருக்கே ஏற்பட்டுவரும் நவீன கால உபாதைகள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி. துள்ளல் நிறைந்த குழந்தைப் பருவத்தில் நீரிழிவு நோயையோ, இளம் வயதில் அதீத உடற் பருமனையோ, இளம் வயதில் மாரடைப்பையோ, திருமணப் பருவத்தில் குழந்தையின்மை பிரச்சினையையோ நாற்பதுகளில் மூட்டுப் பிரச்சினைகளையோ சென்ற தலைமுறை எதிர்பார்த்திருக்குமா? உடல் உழைப்புக் குறைபாட்டால் மேற்சொன்ன விபரீதங்களை இந்தத் தலைமுறை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
நோய்களின் அறிக்கை
பெரும்பாலானோர் நடைப்பயிற்சி செய்வ தில்லை. காரணம் சொகுசான வாழ்க்கை, வேலைப் பளு. இதிலிருந்து எப்படி மீள்வது? மனோதிடத்துடன் உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்! விழித்துக்கொள்ளவில்லை எனில் நோய் வருகையை அறிவிக்கும்.
நலக் கண்ணாடி
நடைபயிற்சி என்பது உடல் எவ்வகையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் நலக் கண்ணாடி! நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, இயல்பைவிட அதிக அளவில் மார்புப் படபடப்போ, மூச்சு வாங்கும் அறிகுறியோ, வேறு அறிகுறியோ தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், நடைபயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதால், நம்மிடம் உடல் என்ன சொல்ல வருகிறது என்பதைக் கேட்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.
நேர்மறை சிந்தனை
குளிர்ச்சியான ஒரு காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது உண்டாகும் பரவசத்தை உணரத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் நடைபயிற்சியை அசையும் சொத்தாகப் பத்திரப்படுத்திக்கொள்வீர்கள். நடக்கும்போது உடலுக்குக் கிடைக்கும் பலன்களுக்கு இணைப்பாக மனத்துக்கும் உற்சாகம் கிடைக்கும். ‘நடைபயிற்சியின் மூலம் தினமும் நமது உடலுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைத்துக்கொண்டிருக்கும்…’ எனும் நேர்மறை எண்ணமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என்கின்றன ஆராய்ச்சிகள்.
காத்துக்கிடக்கும் பலன்கள்
உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க, மருந்துகளோடு நடைபயிற்சியும் அவசியம் என்கின்றன ஆய்வறிக்கைகள். ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க நடைபயிற்சி பெரிய அளவில் பலன்கொடுக்கும்.
இரவில் ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுப்பதோடு, நாள் முழுவதும் உற்சாகத்தை அள்ளிக்கொடுக்க நடைபயிற்சி அவசியம். இளமையைச் செலவில்லாமல் நீட்டிக்க ஒரே வழி நடைபயிற்சி! நடைபயிற்சியின் மூலம் எலும்புகள், தசைகள் வலிமை அடைவதோடு சுவாசப்பாதையும் புத்துணர்வு பெறும். செரிமானக் கருவிகளில் தேங்கும் கழிவு முழுமையாக அகல பேருதவி புரியும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் அரை மணி நேர நடை மேற்சொன்ன அனைத்துப் பலன்களையும் வழங்கும்.
கைப்பேசி இன்றி நடப்போம்
வாய்ப்பிருந்தால் கைப்பேசி துணையில்லா மல் ஒரு நடை சென்று வாருங்கள். நீங்கள் தொலைத்த அற்புத உலகத்தை உங்கள் கற்பனாசக்தி கண்முன் நிறுத்தும். அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்கிறீர்கள் என்றால், வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டுச் செல்லலாம் அல்லது செல்போன் ஒலிப்பானை அணைத்துவிட்டு, நடைபயிற்சி முடிக்கும் வரை, எக்காரணத்தைக் கொண்டும் செல்போனை எடுத்து வாட்ஸ்-அப்பையோ முகநூலையோ பார்க்க மாட்டேன் எனும் மனோதிடத்தை உருவாக்கிக்கொள்ளப் பழகுவது மனத்துக்குச் சுகமளிக்கும். இடையூறு அற்ற நடைபயிற்சி புது சிந்தனைகளைத் தூண்ட உதவும். கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புதிய இடம், அழகிய சூழல் வார்த்தைகளை வழங்குவதைப் போல, அனைவருக்கும் மகிழ்ச்சியான புதுப்புது சிந்தனைகளை மலரச் செய்து மனத்துக்குப் புத்துணர்வு அளிக்க நடைபயிற்சி துணை நிற்கும். அதே நேரம், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது தொடர்புக்காக அலை பேசியை வைத்துக்கொள்வதில் தவறில்லை.
கரோனா கால நடைப்பயிற்சி
கரோனா காலத்தில் வாழ்ந்துகொண்டி ருக்கிறோம். கூட்டமாக நடைபயிற்சி மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தனித்தனியாக இடைவெளியோடு நடைபயிற்சி செய்வது முக்கியம். முகக்கவசம் அணிந்துகொண்டு நீண்ட நேரம் நடைபயிற்சி செய்வது மூச்சுத் திணறலை உண்டாக்கலாம் என்பதால் கவனம் தேவை.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago