அது என்ன நீடிக்கும் கோவிட்?

By முகமது ஹுசைன்

நீடிக்கும் கோவிட், கரோனா தொற்றுநோயின் மிகவும் மர்மமான அம்சங்களில் முக்கிய மானது. நோயாளிகளின் வாழ்க்கைத்தரம், உடல் - மன ஆரோக் கியம், வேலைக்குத் திரும்பும் திறன் ஆகியவற்றில் ‘நீடிக்கும் கோவிட்’ ஏற்படுத்தும் பாதிப்புகள் எளிதில் கடந்துவிட முடியாதவை.

ஏறக்குறைய 20 கோடிக்கு அதிகமானோரை கோவிட் - 19 தாக்கியதாக அறியப்பட்ட நிலையில், நீடிக்கும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண் ணிக்கை தெரியாமல் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தி ருக்கிறது. கரோனாவின் தீவிர பாதிப்பு நிலையிலிருந்து மீண்ட பின்னர், நீடிக்கும் கோவிட் பாதிப்புடன் போராடும் நோயாளிகள் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என அது வலியுறுத்துகிறது.

நீடிக்கும் கோவிட் என்றால் என்ன?

கரோனா பெருந்தொற்றின் தொடக்கத்தில், அதனால் பாதிக்கப் பட்ட பெரும்பாலோருக்கு லேசான அல்லது மிதமான அறிகுறிகளே ஏற்பட்டன. பொதுவாக, நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் கரோனா பாதிப்பிலிருந்து அவர்கள் முற்றிலும் மீண்டுவிட்டனர். இருப்பினும், நாட்கள் செல்ல செல்ல, நோயின் தீவிரம் எப்படி இருந்திருந்தாலும், சிலருக்கு மட்டும் கரோனா பாதிப்புகள் நோய்த்தொற்றின் கடுமையான கட்டத்துக்குப் பிறகும் தொடர்ந்தன. இந்தப் பாதிப்புகளே ‘நீடிக்கும் கோவிட்’.

தெளிவான புரிதல்

நீடிக்கும் கோவிட் பற்றிப் புரிந்து கொள்வது கடினம். அதன் அறிகுறிகள் மாறுபட்டவை. அதை வரையறுப்பதும் கடினம். பாதிக்கப்பட்டவர்களில் பலர், தங்கள் நோய்த்தொற்றின் கடுமையான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்ந்திருக்கவில்லை. பெருந்தொற்றின் முதல் அலையில், அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டிருக்கவும் இல்லை. இதன் விளைவாக, அத்தகைய நோயாளிகளின் நீண்டகாலப் பாதிப்புகளுக்கும் அறிகுறிகளுக்கும் சாத்தியமான காரணங்கள் என்ன என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. அத்துடன் ‘நீடிக்கும் கோவிட்’ நோயின் இன்றைய அறிகுறிகளுக்கும், கரோனா பெருந்தொற்றின் ஆரம்பக் கட்டங்களில் நோயாளிகளிடம் இருந்த அறிகுறிகளுக்கும் உள்ள தொடர்பை அறிவதும் சிரமமாக இருக்கிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘தெரபிஸ் ஃபார் லாங் கோவிட்’ (டிஎல்சி) ஆய்வுக் குழுவின் ஆராய்ச்சியாளர்கள், நீடிக்கும் கோவிட் என்றால் என்ன, அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்டவற்றைத் தனித்தனி ஆய்வுகள் மூலமும் தரவைச் சேகரிப்பதன் மூலமும் வரையறுத்துள்ளனர். அவர்களுடைய ஆய்வுகள் நீடிக்கும் கோவிட் அறிகுறி களின் பரவல் பற்றிய தெளிவான புரிதலை வழங்குகின்றன.

நீடிக்கும் கோவிட் அறிகுறிகள்

l சுவாச மண்டலம், நரம்பு மண்டலம், இரைப்பை - குடல் உட்பட உடலின் எந்த மண்டலத்திலும் ‘நீடிக்கும் கோவிட்’ நோயாளிகளுக்கு நோய் அறிகுறிகள் தென்படலாம்.

l சோர்வு, மூச்சுத் திணறல், தசை வலி, இருமல், தலைவலி, மூட்டுவலி, நெஞ்சு வலி, வாசனை உணரும் திறனிழப்பு, வயிற்றுப் போக்கு, சுவை உணரும் திறனிழப்பு ஆகியவை நீடிக்கும் கோவிட்டில் பொதுவாகப் பதிவாகும் பத்து அறிகுறிகள்.

l சிந்தனைத் தெளி வின்மை, நினைவாற்றல் இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ‘பிரெய்ன் ஃபாக்’ எனப்படும் மூளைச் செயல்பாட்டுக் குழப்பம், ஒழுங்கற்ற தூக்கம், அதிகரிக்கும் இதயத் துடிப்பு, தொண்டைப் புண் ஆகியவையும் பிற பொதுவான அறிகுறிகளில் அடங்கும். தன்னையே வதைத்துக்கொள்ளுதல், தற்கொலை எண்ணம், வலிப்பு ஆகியவையும் சிலருக்கு அரிதாக ஏற்படும் சாத்தியம் உண்டு.

பெரும்பாலான ‘நீடிக்கும் கோவிட்’ நோயாளிகளுக்கு, கடுமையான நோய்த்தொற்றின்போது எதிர்கொண்ட அறிகுறிகள் தொடரும் அல்லது மீண்டும் ஏற்படும். இருப்பினும், கரோனா பாதிப்பின் தீவிர நிலையி லிருந்து ‘நீடிக்கும் கோவிட்’ வரை செல்லும்போது அறிகுறிகளின் எண்ணிக்கை நோயாளிகளுக்குக் குறைகிறது. சிலருக்கு ‘நீடிக்கும் கோவிட்’ நிலையில் புதிய அறிகுறிகளும் ஏற்படுகின்றன.

நீடிக்கும் கோவிட் நோயின் இடைக்கால, நீண்ட கால விளைவு களும் பாதிப்புகளும் இன்னும் முழுமை யாகப் புரிந்துகொள்ளப் படவில்லை. எவ்வாறாயினும், நீடிக்கும் கோவிட் நோயின் பாதிப்புக்கு உள்ளான வர்களுக்கு வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்கப் பாதிப்பு, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம், முழுநேர வேலைக்குத் திரும்புவதில் சிரமம், மனநலப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படுகின்றன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளி களில் 25 சதவீதத்தினர், கரோனா அறிகுறிகள் தோன்றிய ஆறு மாதங் களுக்குப் பிறகு மனக் கவலை அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். ஆனால், நீடிக்கும் கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர் களுக்கு மருத்துவ உதவி பெரும் பாலும் கிடைப்பதில்லை.

நீடிக்கும் கோவிட் பாதிப்பு ஏற்படும் சாத்தியத்தை அதிகரிப்பது எது?

நீடிக்கும் கோவிட் பாதிப்பு அதிகரிப்பதற்குப் பல காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன. வயதானவர் கள், பெண்கள் ஆகியோர் நீடிக்கும் கோவிட் ஏற்படும் அபாயத்துடன் உள்ளனர்.

கரோனா தொற்றின் தீவிர பாதிப்பு நிலையில் ஏற்படும் மூச்சுத் திணறல், மார்பு வலி, அசாதாரண இதய ஒலிகள் போன்ற சில அறிகுறிகள் நீடிக்கும் கோவிட் பாதிப்பின்போது ஏற்படும் அறிகுறிகளோடு தொடர்பு டையவை. ஏற்கெனவே ஆஸ்துமா இருப்பது, நீடிக்கும் கோவிட் பாதிப்பின் ஆபத்தை அதிகரித்தது.

மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா?

பள்ளி வயதுக் குழந்தைகளில் ஏற்பட்ட கோவிட் பாதிப்பு குறித்த விரிவான ஆய்வை ‘தி லான்செட் சைல்ட் & அடலசென்ட் ஹெல்த்’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின்படி, 2 முதல் 17 வயதினருக்கு நீடிக்கும் கோவிட் பாதிப்பு ஏற்படுவது ஏற்படுவது அரிது. கரோனா பாதிப்பின் அறிகுறிகள் சராசரியாக, இளைய குழந்தைகளில் (ஐந்து முதல் 11 வயது வரை) ஐந்து நாட்களும், பெரிய குழந்தைகளில் (12 முதல் 17 வயது வரை) ஏழு நாட்களும் நீடிக்கும். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 4.4 சதவீதக் குழந்தைகளுக்கு நான்கு வாரங்களும், 50இல் ஒருவர் அதாவது 1.8 சதவீதக் குழந்தைகளுக்கு மட்டும் இரண்டு மாதங்களுக்கு மேலும் கரோனாவின் அறிகுறிகள் நீடிப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இன்றைய தேவை

‘நீடிக்கும் கோவிட்’ பாதிப்பின் மிகப்பெரிய புதிர் என்னவெனில், அது பல்வேறு அடிப்படை நோய்களுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளது. எனவே, ‘நீடிக்கும் கோவிட்’டின் அடிப்படை உயிரியல், நோயெதிர்ப்பு வழிமுறைகளைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வதே, அதற்குப் பயனுள்ள சிகிச்சைகளை உருவாக்க உதவும்.

வாழ்க்கை, வேலை, மன ஆரோக்கியம் ஆகியவற்றில் நீடிக்கும் கோவிட் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து நோயாளிகள் எழுப்பும் அபயக்குரல், அதனால் பாதிக்கப் பட்டவர்களைக் கவனிப்பதற்கான சிறந்த வழிகள் அவசரமாகத் தேவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அறிகுறிகளை மதிப்பீடு செய்தல், நீடிக்கும் கோவிட்டின் அடிப்படை வழிமுறைகளை ஆராய்வது, நீடிக்கும் கோவிட் பாதிப்புக்குச் சாத்தியமான சிகிச்சைகளைப் பரிசோதனைகளால் மதிப்பீடு செய்வது போன்றவற்றை நோக்கி அறிவியலாளர்கள் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேநேரம் சென்னை கிண்டியில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாகச் செயல்பட்டுவரும் ‘கோவிட்டுக்குப் பிந்தைய சிகிச்சை மையம்’ சரியான முன்மாதிரி. இதுபோல் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் கோவிட்டுக்குப் பிந்தைய சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்