டாஸ்மாக்கும், ‘குவார்ட்டர் சாங்’ எனப் போதையில் பாடும் சோகப் பாடலும் இல்லாத தமிழ்ப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘எல்லாப் பிரச்சினைகளுக்கும், மதுதான் தீர்வு’ என்பதுபோல் நகைச்சுவை நடிகர்கள் மதுவுக்கு ‘பிராண்ட் அம்பாசடர்’ ஆக மாறி நடித்துக் கொண்டிருக்கும் வேதனையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆபத்தான ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சாதாரணமாகக் காண்பிப்பதன் மூலம், அது தவறு இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். இதைக் கூர் உணர்ச்சியைக் குறைத்தல் அல்லது Desensitization என்று சொல்வார்கள். சினிமாக்களில் காண்பிக்கப்படுவதெல்லாம் நடிப்புதான் என்பதையும், அதில் காண்பிக்கப்படும் எல்லாமே நிஜ வாழ்க்கைக்கு பொருந்திவராது என்பதையும் வளர்இளம் பருவத்தினருக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
வீழ்ச்சி போக்கு
சமீபகாலமாக இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கும் சராசரி வயது குறைந்துகொண்டே வருவதற்குச் சினிமாவும் ஒரு முக்கியக் காரணம். இந்தப் போக்கு இளைஞர்களை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஆபத்தான விஷயம். புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தில் ஆரம்பித்துக் கஞ்சா, ஹெராயின் உட்படப் பல வகை போதைப் பழக்கங்களை வளர்இளம் பருவத்தினரிடையே பார்க்க முடிகிறது.
பொதுவாகப் போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மட்டும் உருவாவதில்லை. குடும்பச் சூழல், சமுதாயம், கல்வி, பொருளாதார நிலை, தனிப்பட்ட குணநலன், மரபணு மாற்றம் போன்றவை சேர்ந்த கலவைதான், போதைப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையாகும் தன்மையைத் தீர்மானிக்கின்றன.
குடும்பச் சூழல்
ஒரு குழந்தை வளரும்போது, நல்ல குடும்பச் சூழல்தான் ஆரோக்கியமான மனநல வளர்ச்சிக்கு அடித்தளம். வளர்இளம் பருவத்தில்தான் ஒருவருடைய குணநலன் முதிர்ச்சி அடைய ஆரம்பித்து வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். ஆராய்ச்சி முடிவுகளின்படி சிறுவயதில் பெற்றோரில் ஒருவரை இழப்பது, குடும்ப வன்முறைகளைக் கண்கூடாகப் பார்ப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவை இளம் வயதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதற்குச் சாதகமான குடும்பச் சூழல் என நிருபிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் பங்கு
தீவிரமான போதை அடிமைத்தனத்துக்கு உட்படும் நபர்களில் 80% பேரின் தந்தை, அதேபோன்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு முதல் மாதிரிப் பெற்றோர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்பா தினமும் போதையில் வருவதையே பார்த்து வளரும் சிறுவனுக்கு, தானும் குடித்தால் தவறில்லை என்ற எண்ணம் வருவது இயற்கைதானே.
ஒரு விலங்கைக்கூடத் திரும்பத் திரும்ப அடித்தால், ஒன்று வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் அல்லது எதிர்க்கத் தொடங்கும். மனிதனின் கற்றுக்கொள்ளுதலும் அப்படித்தான். பெற்றோரின் போதைப்பழக்கச் சூழலில் வளரும் வளர்இளம் பருவத்தினர், ஒன்று தாங்களும் போதைப்பழக்கத்துக்கு உள்ளாவார்கள் அல்லது அவர்களுடைய எதிர்ப்பு குணரீதியான, ஆக்ரோஷமான நடவடிக்கை மாற்றங்களாக, படிப்பில் பின்தங்குதல் போன்றவையாக வெளிப்படும்.
பரம்பரை வியாதியா?
‘ஆள் பாக்கிறதுக்கு மட்டுமல்ல, குணமும் அப்பாவை மாதிரியே அச்சுஅசலாக இருக்கிறது’ என்று குழந்தைகளைக் கொஞ்சுவதுண்டு. இது உருவ ஒற்றுமைக்கு மட்டுமல்ல, போதைப் பழக்கத்துக்கும் பொருந்தும். மரபணுக்கள் மூலமாகவும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் தன்மை பெற்றோரிடமிருந்து வாரிசுகளுக்குச் செல்வதால், சிலருக்கு இது பரம்பரை நோயாகவே மாறிவிடுகிறது. வளர்இளம் பருவத்திலேயே போதைப் பழக்கத்தை ஆரம்பிக்கும் நபர்கள், பெரும்பாலும் இந்த மரபணு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் குளோனிங்கர் என்ற மனநல மருத்துவர் நிருபித்திருக்கிறார்.
‘அப்படியானால் அப்பா குடிகாரராக இருந்தால் மகன் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்க முடியாதா?’ என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இங்குதான் வளரும் சூழ்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. மரபணுக்கள் 60% வரை இதைத் தீர்மானித்தாலும் ஆதரவான குடும்ப, சமுதாயச் சூழல், கல்வி, பொருளாதார முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில், இதைத் தடுக்கமுடியும்.
நட்பு வட்டம்
பெரும்பாலான வளர்இளம் பருவத்தினருக்குப் போதைப்பழக்க அறிமுகம் நண்பர்கள் மூலம்தான் கிடைக்கிறது. அவர்களின் உற்சாகத் தூண்டுதல், போதைப் பொருட்களைப் பற்றிய தவறான வழிகாட்டுதல் போன்றவையும், ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாட ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம், நாளடைவில் எல்லாச் சூழ்நிலைகளிலும் தொடரும் அளவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்.
பின்பு குடிப்பதற் கென்றே அவர்களாகவே சூழ்நிலைகளை ஏற்படுத்தி, அதைக் குடிப்பதற்கான சாக்குபோக்காக மாற்றிக்கொள்ளும் மனநிலை ஏற்படும். மனதுக்கு உற்சாகம் இல்லாத நேரம் மற்றும் தோல்விகளால் துவண்டு கிடக்கும் நேரத்தில் ‘சரக்கு அடிச்சா உன் கவலையெல்லாம் பறந்து போய்விடும்’ என்று நண்பர்கள் தூண்டுவது பலருக்குப் போதைப்பழக்கத்தின் முதல்படியாக அமைந்துவிடும்.
எனவே, இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களிடம் வளர்இளம் பருவத்தினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெற்றோர்களும் இவர்களுடைய தனிமை, தோல்வி, விரக்தியான நேரத்தில் ஆதரவாக இருந்தால் இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களுக்கு இளம்பருவத்தினர் செவிசாய்ப்பதைத் தடுக்க முடியும்.
(அடுத்த வாரம்: தனிமையும் மனநோயும்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago