நீரிழிவின் வரலாற்றை மாற்றிய இன்சுலின்

By முகமது ஹுசைன்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், நீரிழிவு நோயாளிகள் கூடுதல் மன அழுத்தத்துக்கும் அச்சத் துக்கும் உள்ளாகி இருக்கின்றனர். காரணம் நீரிழிவு நோயாளிகளுக்கு கரோனா எளிதில் தொற்றிவிடும். மேலும், கறுப்புப் பூஞ்சை போன்ற ஆபத்தான நோய்த்தொற்றுகள் நீரிழிவு, கரோனா இரண்டும் உள்ளவர்களையே அதிகம் தாக்குகின்றன. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நீரிழிவு நோயே கரோனாவைவிட ஆபத்தான நோயாகத்தான் இருந்தது.

அப்போது நீரிழிவு உயிரைப் பறிக்கக்கூடியதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில், டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுள் சில வாரங்களுக்குள்ளாகவோ மாதங்களுக்குள்ளாகவோ முற்றுப் பெற்றுவிடும். 100 ஆண்டுகளுக்கு முன்னர் இன்சுலின் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இந்த நிலை மாறியது. நீரிழிவு நோயை இன்றைக்குச் சமாளித்து வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏன் ஏற்படுகிறது?

உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோதோ உற்பத்தி செய்யப்படும் இன்சுலினுக்குச் சரியான முறையில் எதிர்வினையாற்ற முடியாதபோதோ நீரிழிவு நோய் உருவாகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

3,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர்கள் டைப் 1 நீரிழிவு நோய் போன்ற ஒரு நிலையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அந்த நிலையின் அறிகுறிகளாக அதிகப்படி சிறுநீர் கழித்தல், தாகம், எடையிழப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளைக் குறைக்க முழுதானிய உணவைப் பின்பற்றுமாறு எகிப்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பண்டைய இந்தியாவில், மனிதனின் சிறுநீரை எறும்புகளுக்கு வழங்கி நீரிழிவு நோயைச் சோதிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதில் மனிதனின் சிறுநீருக்கு அருகில் எறும்புகள் வருவதே அதிக சர்க்கரை அளவு இருப்பதற்கான அறிகுறி. அந்த நிலை மதுமேஹா எனப்பட்டது.

நீரிழிவு நோயின் வகைகள்

பொ.ஆ.மு. (கி.மு.) மூன்றாம் நூற்றாண்டின்போது, மெம்பிஸின் அப்பல்லோனியஸ் ‘நீரிழிவு நோய்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதுவே நீரிழிவு குறித்த ஆரம்பக் குறிப்பு. காலப்போக்கில், கிரேக்க மருத்து வர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் நீரிழிவு நோய் (diabetes mellitus), சர்க்கரை அளவை அதிகரிக் காத நீரிழிவு நோய் (diabetes insipidus) ஆகிய இரண்டு நிலைகளைக் கண்டறிந்தார்கள்.

நீரிழிவு இன்சிபிடஸ் பாதிப்பின் போது அதிகப்படியான சிறுநீர் கழித்தல், தாகம் போன்றவை ஏற்பட்டாலும், அது உடலின் இன்சுலின் உற்பத்தியையோ இன்சுலின் பயன்பாட்டையோ பாதிக்காது. நீரிழிவு இன்சிபிடஸ், பிட்யூட்டரி சுரப்பி உருவாக்கும் வாசோபிரசின் என்கிற ஹார்மோனின் சிக்கலால் ஏற்படுகிறது.

ஆரம்பக் கால கிரேக்க மருத்து வர்கள் நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை யாகக் குதிரையேற்றம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைப் பரிந்துரைத்தனர். அதிகப்படியான உடல் செயல்பாடு சிறுநீர் கழிப்பதற்கான தேவையைக் குறைக்கும் என்று அவர்கள் நம்பினர்.

டைப் 1 / டைப் 2 நீரிழிவு

பொ.ஆ. (கி.பி.) ஐந்தாம் நூற்றாண்டுக்குள், டைப்-1 நீரிழிவு, டைப்-2 நீரிழிவு ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடுகள் இருப்பது இந்தியாவிலும் சீனாவிலும் கண்டறியப் பட்டது. டைப் 2 நீரிழிவு நோய், மற்றவர்களைவிட உடல் பருமன் மிகுந்த செல்வந்தர்களிடையே அதிகம் காணப்படுகிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பதை 1776இல் மேத்யு டாப்சன் கண்டறிந்தார். நீரிழிவு சிலருக்கு ஆபத்தானது, மற்றவர்களுக்கு நாள்பட்டது என்று டாப்சன் குறிப்பிட்டுள்ளார். இது டைப் 1, டைப் 2 ஆகியவற்றுக்கு இடையி லான வேறுபாடுகளை மேலும் தெளிவுபடுத்தின.

கணையத்தின் பங்கு

நாய்களிடமிருந்து கணையத்தை அகற்றினால் நீரிழிவு நோய் ஏற்பட்டு விரைவில் அவை இறந்துவிடும் என்பதை 1889இல் ஜோசப் வான் மெரிங், ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி ஆகியோர் கண்டறிந்தனர். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் கணையத்திற்கு இருக்கும் பங்கைப் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது.

கணையம் உற்பத்தி செய்யும் ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் உடலில் இல்லாதபோது நீரிழிவு நோய் உருவாகிறது என்பதை எட்வர்ட் ஆல்பர்ட் ஷார்பே-ஷாஃபர் 1910இல் கண்டறிந்தார். அதை அவர் இன்சுலின் என்றார். இன்சுலா என்றால் தீவு என்று பொருள். ஏனெனில், கணையத்தில் உள்ள லாங்கர்ஹான்ஸ் எனும் தனித்திருக்கும் மேட்டுப்பகுதியில் உள்ள செல்களே இன்சுலினை உருவாக்குகின்றன.

1921இல் ஃபிரெட்ரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகியோர் ஆரோக்கிய மான நாய்களின் கணையத்திலிருக்கும் லாங்கர்ஹான்ஸ் (தீவு செல்கள்) உற்பத்தி செய்யும் வேதிப்பொருளைப் பிரித்தெடுத்து நீரிழிவு நோயுள்ள நாய்க்குச் செலுத்தினர். இது நாயின் நீரிழிவு நோயைக் குணப்படுத்தியது. இன்சுலின் என்கிற ஹார்மோன் தயாரிப்புக்கும் வழிவகுத்தது.

அவர்கள் மேலும் இரண்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து, நீரிழிவு நோய்க்கான முதல் சிகிச்சைக்குப் பசுக்களின் கணையத்திலிருந்து பிரித் தெடுத்து, சுத்திகரித்த இன்சுலினைப் பயன்படுத்தினர். 1922 ஜனவரியில், நீரிழிவு நோய் சிகிச்சைக்கு இன்சுலின் ஊசி பெற்ற முதல் நபர் ஆனார் லியோனார்ட் தாம்சன் (14). அதன் பின்னர் 13 ஆண்டுகள் வாழ்ந்த தாம்சன், நிமோனியாவால் இறந்தார்.

இன்சுலின் எதிர்ப்புநிலை

டைப் 1, டைப் 2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்தும் ஆராய்ச்சியை ஹரால்ட் பெர்சிவல் ஹிம்ஸ்வொர்த் 1936இல் வெளியிட்டார். இன்சுலின் குறைபாட்டைவிட இன்சுலின் எதிர்ப்பு நிலை பலருக்கும் இருப்பதை அவர் கண்டறிந்தார்.

இன்சுலின் எதிர்ப்பு நிலை என்பது டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் ஒரு காரணி. ஒரு நபருக்கு இன்சுலின் எதிர்ப்பு நிலை ஏற்படும்போது, உடல் செல்கள் இன்சுலினை உணரும் திறனை இழக்கும். இது குளுக்கோஸைக் கிரகிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். இதற்கு எதிர்வினையாக, கணையம் இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கும். இது தொடர்ந்து நடப்பதால், கணையம் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகும். இதன் விளைவாகக் கணையம் பழுதடையும்.

சிகிச்சை வகைகள்

பல ஆண்டுகளாக விலங்கு சார்ந்த இன்சுலினே சிகிச்சைக்குப் பயன் படுத்தப்பட்டு வந்தது. மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட இன்சுலின் 1978இல் உருவாக்கப்பட்டது. அது ஹியுமலின் (humalin) எனப்பட்டது. மனித இன்சுலின் கட்டமைப்பை ஒத்தது ஹியுமலின். நீண்ட நேரம் செயலாற்றும் இன்சுலின் டோஸ் நாள் முழுவதும் வேலை செய்யவும், குறுகிய செயல்பாட்டு இன்சுலின் டோஸ் உணவு உட்கொள்ளும் நேரங்களில் இன்சுலின் அளவை அதிகரிக்கவும் பயன் படுகின்றன. இன்சுலின் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த இரண்டு வகை இன்சுலின்களும் தேவை.

சமீப ஆண்டுகளில் இன்சுலின் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்சுலின் அனலாக்ஸ் அறிமுகம், இன்சுலின் பேனா, இன்சுலின் பம்பு உள்பட இன்சுலின் செலுத்தும் முறைகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையைச் செயலாற்றல் மிக்கதாக மாற்றியுள்ளன.

இன்சுலின் அல்லாத சிகிச்சைகள்

20ஆம் நூற்றாண்டில் நீரிழிவு நோய்க்கு இன்சுலின் அல்லாத சிகிச்சை கள் நடைமுறைக்கு வந்துள்ளன. மெட்ஃபார்மின், சல்போனிலூரியாஸ், பிராம்லிண்டைட், எஸ்ஜிஎல்டி 2 தடுப்பான்கள், ஜி.எல்.பி -1 ஏற்பி தடுப்பான்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளி களுக்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய நோயெதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy), செயற்கைக் கணையம் (Artificial pancreas) உள்ளிட்ட புதிய வழிமுறைகளைக் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைக்கு நடைமுறையிலி ருக்கும் பல்வேறு நவீன சிகிச்சை முறைகளும் வாழ்க்கை முறை மாற்ற நடவடிக்கைகளும் நீரிழிவு நோயைத் திறம்பட நிர்வகிக்க மக்களுக்கு உதவுகின்றன. வருங்காலத்தில் நீரிழிவு நோயை எளிதில் எதிர்கொள்ளும் வல்லமை மனிதர்களின் இயல்பாக மாறக்கூடும்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்