வளர் இளம்பருவத்தில் `வரும், ஆனா வராது’ என்பதுபோல, `இருக்கும், ஆனா இருக்காது’ வெளிப்படும் ஒருவகை மனநலப் பிரச்சினை உண்டு. இதை வாசிக்கும்போதே கொஞ்சம் புதிராக இருப்பதுபோல, இந்த நோயும் கொஞ்சம் புதிர் நிறைந்ததுதான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவர்களைத் திணறச்செய்த ஒரு நோய்க்கு `ஹிஸ்டீரியா’ (Hysteria) என்று பெயர். இதில் நரம்பு பிரச்சினைக்கான அறிகுறிகள் இருக்கும், ஆனால் நரம்புகளில் எந்தவித சேதமோ, மாற்றமோ இருக்காது. மனரீதியான பிரச்சினைகள்தான் அதற்குக் காரணமாக இருந்ததைக் கண்டுபிடித்து `ஹிப்னாசிஸ்’ (Hypnosis) என்ற முறையில் அதற்குத் தீர்வுகாணும் முயற்சியில் வெற்றியும் கண்டார் பாரீஸில் பிறந்த பிரபல நரம்பியல் நிபுணர் ஜீன் மார்டின் சார்கோட். அவரிடம் சில காலம் பயிற்சி பெற்ற சிக்மண்ட் ஃப்ராய்டு இதை மேலும் ஆழமாக ஆய்வு செய்து, உளப் பகுப்பாய்வு சிகிச்சை (Psychoanalysis) முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்ததால், ‘உளப்பகுப்பாய்வின் தந்தை’ என்று அவர் அழைக்கப்பட்டார்.
எப்படி உருவாகிறது?
சிக்மண்ட் ஃப்ராய்டுதான் உடலின் பாகங்களைப்போல மனதுக்கும் ஒரு கட்டமைப்பு உண்டு என்னும் கருத்தை வெளியிட்டார். அவருடைய கூற்றுப்படி எல்லா மனிதருக்கும் ஆழ்மனது, சுயஉணர்வுடன் கூடிய வெளிமனது என இரண்டு உண்டு. நாம் பிறந்தது முதல் இன்றுவரை நடந்த எல்லா அனுபவங்களும் முழுமையாகவோ அல்லது சிறு பகுதியாகவோ ஆழ்மனதில் கணினியின் ‘ஹார்டு டிஸ்கில்’ பதிவதுபோல பதிந்துகொண்டே வரும். ஆனால், எது பதிகிறது என்பது வெளிமனதுக்கு தெரியாது. பதிந்த விஷயங்கள் அவ்வப்போது வெளிவர முயற்சிக்கும்.
ஆழ்மனதில் இருக்கும், ஆனால் வெளிமனதுக்கு ஒத்துவராத குழப்பங்கள் சில நேரங்களில் மனநலப் பிரச்சினையாக வெளிப்படுவதற்குப் பதிலாக உடல் நோய் தொந்தரவுகளாக, குறிப்பாக நரம்பு நோய்களாக வெளிப்படும். இதற்குத்தான் `ஹிஸ்டீரியா’ என்று பெயர். உடல் நோயாக வெளிப்பட்டாலும், மனநலச் சிகிச்சையால் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியும்.
யாரை பாதிக்கும்?
இந்த மனநோய் வளர்இளம் பெண்களைத்தான் மிக அதிக அளவில் பாதிக்கும். சில நேரங்களில் திருமணத்துக்குப் பின்கூட பாதிப்பு ஏற்படலாம். ஆண்களும், இந்த நோய்க்கு விதிவிலக்கல்ல. ஆனால், சொற்ப அளவில்தான் பாதிக்கப்படுகின்றனர். சிறுவயதில் பெற்றோரை இழப்பது, சிறுவயதில் பாலியல் ரீதியான பாதிப்புகள், குடும்பப் பிரச்சினைகள், பள்ளியில் மற்றும் படிப்பில் ஏற்படும் பிரச்சினைகள், விடலை காதல் அனுபவங்கள், மனக்கசப்புகள், பெற்றோரால் வளர்க்கப்படாமல் வேறு குடும்ப உறுப்பினர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், போதுமான அன்பு மற்றும் கவனம் கிடைக்காத குழந்தைகள் ஆகியோர் வளர்இளம் பருவத்தில் இந்த நோயினால் மற்றவர்களைக் காட்டிலும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.
பெற்றோர்களில் ஒருவரிடம் மட்டும் அதிக நெருக்கமாக இருந்து, ஒருவரை புறக்கணிப்பதும் இதற்குக் காரணமாக அமையலாம். குறிப்பாக அப்பாவால் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள் அதிகப் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. சில நேரம் மனநோய்களில் ஒன்றான மன அழுத்த நோய் (Depression) கூட இதுபோல வெளிப்படும்.
மனமும் குணமும்
சிலர் இதுபோன்ற ஹிஸ்டீரியாவின் தாக்கத்துக்கு ஆளாகும் அளவுக்குக் குணரீதியாகவே வளர்ச்சியில் மாற்றங்கள் காணப்படும். அவர்களின் குணநல மாற்றங்களை வைத்து இந்த ஹிஸ்டிரியானிக் பெர்சனாலிட்டியை (Histrionic personality) அடையாளம் கண்டுகொள்ளலாம். இவர்கள் எப்போதும் எந்த இடத்திலும், தான் மட்டும்தான் நடுநாயகமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதுடன் மற்றவர்களின் பாராட்டுகள், புகழ்ச்சியைப் பெறுவதற்காக எந்தச் செயலையும் செய்வார்கள்.
எளிதில் உணர்ச்சிவசப்படுவது, தன்னைக் கவர்ச்சியாகவும் அழகாகவும் காண்பித்துக்கொள்வதில் அதிகச் சிரத்தை எடுப்பது, பேச்சால் பிறரை எளிதில் வசப்படுத்தும் தன்மை இருந்தாலும், இவர்களுடைய பேச்சு வாயோடு நின்றுபோகுமே தவிர, மனப்பூர்வமாக இருக்காது.
‘ஏத்திவிட்டு ரணகளமானாலும்’ பிறர் தங்களைக் கேலி பொருளாக்குவதைக்கூட, இவர்களால் புரிந்துகொள்ள இயலாது. ‘எடுப்பார் கைப்பிள்ளைபோல’ பிறரிடம் பாராட்டுகளைப் பெறப் பல முயற்சிகள் எடுக்கும் இவர்கள், பிறருடைய கவனத்தைப் பெறவில்லை என்றால் ஆக்ரோஷமாக நடப்பது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் பலநேரங்களில் ஹிஸ்டீரியாவுக்கு உண்டான நரம்பியல் அறிகுறிகளையும் வெளிப்படுத்துவார்கள்.
ஹிஸ்டீரியாவால் வர வாய்ப்புள்ள நோய்கள்
# வலிப்பு நோய்
# திடீரென ஏற்படும் மயக்கம்
# உணர்ச்சியற்ற கோமா போன்ற நிலை
# பக்கவாதம்
# கை, கால் நடுக்கம்
# பேச முடியாமை
# நடக்க இயலாமல் தடுமாற்றம்
# உடல் மரத்துப்போதல்
# மூச்சடைப்பு
(அடுத்த வாரம்: தேவை கையாள்வதில் கவனம் )
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago