அமெரிக்கா, இங்கிலாந்து என்று மிரட்டிக்கொண்டிருந்த மிஸ்-சி எனும் அழற்சி பாதிப்பு தற்போது இந்தியக் குழந்தைகளையும் தாக்கிவருகிறது. சென்னை, மதுரை, கோவை எனத் தமிழகத்திலும் மிஸ்-சியால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2-4 வாரங்களில் எதிர்ப்பாற்றல் குறையும்போது இந்த அழற்சி ஏற்படுவதாகவும், அனைத்துக் குழந்தைகளையும் பாதிப்பதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 1,000 குழந்தைகளில் ஒருவருக்கு மிஸ்-சி வரு வதற்கான சாத்தியம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தற்போதைய தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமானோர் பாதிக்கப்படலாம். மிஸ்-சி பாதிப்பு குறித்து விளக்குகிறார் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் சே. சரவணகுமார்.
மிஸ்-சி என்பது என்ன?
கரோனா பாதித்த குழந்தைகளின் எதிர்ப்பாற்றல் குறையும்போது 2-4 வாரங்கள் கழித்து ஏற்படும் அழற்சியை 'மிஸ்-சி' (MIS-C: Multisystem Inflammatory Syndrome in Children) என்கிறோம். குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுவதாலும், இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய நோய் என்பதாலும் மிஸ்-சி என்று அழைக்கப் படுகிறது. இது நோய் அறிகுறிதான். 0-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கிறது. இதேபோன்ற அறிகுறிகள் தீவிர பாக்டீரியா தொற்று, தீவிர ஸ்ட்ரெப்சில்ஸ் அல்லது கவசாகி (ரத்தக் குழாய் அழற்சி) நோயிலும் ஏற்படும்.
யாருக்கு மிஸ்-சி பாதிப்பு வரும்?
கோவிட் பாதிப்புக்குள்ளான 0-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மிஸ்-சி பாதிப்பு வரலாம். நோய் எதிர்ப்பாற்றல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், இதயம், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மிஸ்-சி பாதிப்பு தீவிரமடையச் சாத்தியமுள்ளது. கோவிட் பாதித்த 2-4 வாரங்களில் குழந்தைகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் சாதாரணமாகக் கடந்துவிடக் கூடாது.
இதன் அறிகுறிகள் என்ன?
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் அடிக்கும். பாரசிட்டமால் மாத்திரை கொடுத்தாலும் காய்ச்சல் குறையாது. உடல் முழுக்கத் தடிப்பு ஏற்படலாம். கண் சிவந்துவிடும், நீர் வடியலாம். வாயில் புண் ஏற்படலாம். உள்ளங்கை, உள்ளங்காலில் தடிப்புகள் ஏற்படலாம். இதயத் துடிப்பு குறையலாம். நடக்கும்போது, உட்காரும்போது மூச்சு வாங்கி, மூச்சுத்திணறல் ஏற்படலாம். காலும் முகமும் வீங்கக்கூடும். வயிற்றில் நீர் சேரலாம். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படலாம். ரத்த நாளங்களில் ரத்த உறைவு ஏற்படலாம். அதனால், இதயத்துக்கும் மற்ற உறுப்புகளுக்கும் ரத்தம் செல்வது பாதிக்கப்படலாம்.
என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?
சி-ரியாக்டிவ் புரோட்டீன் (சி.ஆர்.பி.),ஈ.எஸ்.ஆர். ஆகிய பரிசோதனைகள் மூலம் இதன் பாதிப்பை அறியலாம். ப்ரோ கால்சிடோனின் பரிசோதனை மூலம் அழற்சி, வீக்கத்தின் தீவிரத்தன்மையை அறிய முடியும். அதன் அடிப்படையில் அறிகுறியை மிதமானது, தீவிரமானது எனப் பிரிக்கலாம்.
சிகிச்சை முறை என்ன?
நோய் அறிகுறி மிதமானது என்றால் காய்ச்சலுக்கும் தடிப்புக்கும் பாரசிட்டமால் மாத்திரை கொடுக்கலாம். நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலை இதயத்தைப் பாதிக்காது என்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. குழந்தைக்கு ஓய்வளிப்பது, பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவைக் கண்காணிப்பது, குழந்தையைச் சிகிச்சைக்கு அனுமதித்துக் கண்காணிப்பதன் மூலம் ஆபத்து நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
பாதிப்புத் தீவிரமடையும் நிலையில் ஸ்டீராய்டு, இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) ஊசி போட வேண்டும். ரத்தம் வடியும் பிரச்சினை இருந்தால் ரத்தம் உறையும் தன்மையைப் போக்க ஹெப்பாரின் மருந்து தர வேண்டும்.
மிஸ்-சி பாதிப்பிலிருந்து 70-90 சதவீதக் குழந்தைகள் குணமடைகிறார்கள். எல்லா உடல்நலப் பாதிப்புகளிலிருந்தும் 90-120 நாட்களில் மீண்டு, இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்கள். இதனால் கவலைப்படத் தேவையில்லை.
பாதுகாப்பது எப்படி?
கோவிட் பாதிப்புக்குள்ளான குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், சத்தான உணவைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும். காலை, மாலையில் 30 நிமிடம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாட்டு என்று உடல்ரீதியாக வலுப்படுத்த வேண்டும்.
பெரியவர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும். வீட்டுக்கு வெளியே செல்லும் இளைஞர்கள், பெற்றோர், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் குழந்தைகளின் பாதுகாப்பை மனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
மருத்துவர் சரவணன் தொடர்புக்கு: drcskpaed1978@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago