கருப்புப் பூஞ்சை நோயை வரும்முன் காப்பதே நன்று: டாக்டர் சிவப்பிரகாஷ்

By செய்திப்பிரிவு

கரோனா இரண்டாம் அலை சற்றே குறையத் தொடங்கிவிட்டது என்று ஆசுவாசம் கொள்ளும் வேளையில், கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று (மியூகோமைகோசிஸ்) அதிகரிக்கத் தொடங்கி, உலகின் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000க்கு மேல் சென்றுவிட்டது. உலக அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவீதத்தினர் இந்தியர்களே.

இந்த நோய் கரோனாவைவிட மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல; அதிக அளவில் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இது கரோனா தொற்றைப் போன்று ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவாது. கரோனா சிகிச்சையின் போதும், கரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் சற்று கவனத்துடன் இருந்தால், கருப்புப் பூஞ்சை நோயை வரும் முன்னரே தடுத்துவிட முடியும்.

மியூகோமைகோசிஸ்

கருப்புப் பூஞ்சை நோய் (மியூகோமைகோசிஸ்) என்பது, ‘ரைசோபஸ் ஓரிஸா’ எனும் பூஞ்சையால் மனிதர்களுக்கு ஏற்படும் ஓர் அரியவகை பாதிப்பு. இந்தப் பூஞ்சைகள் சுற்றுச்சூழல் முழுவதும், குறிப்பாக மண், இலைகள், உரக் குவியல்கள், அழுகிய மரம், அழுகும் கரிமப் பொருட்கள் போன்றவற்றில் வாழ்கின்றன. இந்தப் பூஞ்சை வித்துகளைச் சுவாசிக்க நேரும்போது, மனிதர்களுக்கு இந்த நோய்த்தொற்றின் பாதிப்பு நுரையீரலிலோ சைனஸிலோ (மூக்கைச் சுற்றியிருக்கும் காற்றுப் பைகள்) ஏற்படுகிறது. இந்த நோயைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை எதுவும் கிடையாது, அறிகுறிகளை வைத்தே இந்த நோயைக் கண்டறிய முடியும் என்பதால், லேசான அறிகுறிகளாக இருந்தாலும் அவற்றை உடனடியாக மருத்துவரிடம் நோயாளிகள் தெரிவித்துவிட வேண்டும்.

சைனஸ் - கண் - மூளை (Rhino orbital cerebral) பகுதிகளில் ஏற்படும் பாதிப்பு

இதில் பாதிப்பு நம்முடைய சைனஸில் ஏற்பட்டு, அதிவேகமாகக் கண்களுக்கும் மூளைக்கும் பரவும். தலைவலி, முகத்தில் மதமதப்பு, வீக்கம், வலி, கண் சிவத்தல், கண் வலி, கண் வீக்கம், திடீர் பார்வைக் குறைபாடு, மூக்கிலிருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் சீழ் வருதல், மேல் வாயிலோ (அண்ணத்தில்) மூக்கு துவாரங்களிலோ முகத்தின் மீதோ கருப்பு நிறத்தில் கட்டியோ புண்ணோ தெரிதல் போன்றவை இதன் அறிகுறிகள்.

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லது குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களிடமும் நுரையீரல் (Pulmonary) மியூகோமைகோசிஸ் காணப்படும் சாத்தியம் அதிகம். கட்டுப்படாத காய்ச்சல், இடைவிடாத கடும் இருமல், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், உமிழ்நீரில் / சளியில் ரத்தம் போன்றவை இதன் அறிகுறிகள்.

உடலின் பாதுகாப்பு அடுக்குக்குள் வெள்ளை ரத்த அணுக்களில் இருக்கும் மேக்ரோபேஜ் உயிரணுக்களே பூஞ்சைக்கு எதிரான முதன்மைப் பாதுகாப்பு அடுக்கு. பூஞ்சைகளை முற்றிலும் அழிக்கும் திறன் இவற்றுக்கு உண்டு. பூஞ்சைக்கு எதிரான அடுத்தமட்டப் பாதுகாப்பு அடுக்காக டி-செல் லிம்போசைட்டுகள் உள்ளன. பூஞ்சை தொற்றுநோய்களுக்கு எதிரான முழுமையான நோய் எதிர்ப்பாற்றலுக்கு இவை இரண்டும் அவசியம்.

உடலின் அதிக சர்க்கரை அளவு அதிகரிப்பு மேக்ரோபேஜ் செயல்பாட்டை பாதிக்கும். அதிக அளவிலான ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது மேக்ரோபேஜ் செயல்பாட்டோடு சேர்த்து டி-செல் லிம்போசைட்டுகளின் செயல்பாட்டையும் பாதிக்கும். இதனால்தான், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளிடமும், ஸ்டீராய்டுகளை (குறிப்பாக கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்) அதிக அளவில் எடுத்துக் கொள்பவர்களிடமும் கருப்புப் பூஞ்சை தொற்று பெருமளவில் காணப்படுகிறது.

டாக்டர் சிவப்பிரகாஷ்

யாரையெல்லாம் பாதிக்கும்?

1. சர்க்கரைக் கட்டுப்பாடு குறைவாக உள்ள நீரிழிவு நோயாளிகள்.
2. கரோனா பாதிப்பினால் இன்சுலின் உற்பத்தியும் அதன் செயலாற்றும் குறைதல். காரணமாக திடீரென்று அதிகரிக்கும் சர்க்கரை அளவு.
3. முழுமையான இன்சுலின் குறைபாட்டை பிரதிபலிக்கும் நீரிழிவு கீட்டோ அமிலத்தன்மை (DKA) நிலை.
4. அதிக அளவில் ஸ்டீராய்டு சிகிச்சை பெறுபவர்கள்.

கரோனாவால் அதிகரிக்கும் மியூகோமைகோசிஸ்

நம் உடலின் நோயெதிர்ப்புச் செயல்பாடு கோவிட் பாதிப்பால் மாற்றியமைக்கப்படுகிறது. டி.லிம்போசைட்டுகள் குறைவு, என்.கே. செல்கள் போன்றவை இந்தப் பூஞ்சையின் ஊடுருவலுக்கு ஏதுவாக அமைகின்றன. மேலும், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுப்பாடற்ற அளவில் அதிகரிக்கும். இதனுடன் கரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டும் சேரும்போது, சர்க்கரை அளவு அபாயகரமான அளவில் அதிகரிக்கத் தொடங்கும். இந்த அதீத சர்க்கரை அளவு, உடலின் நோயெதிர்ப்புத் திறனைக் குறைக்கும். இதன் விளைவாக அவர்களுக்குக் கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிக்கச் சாத்தியம் உள்ளது.

கடுமையான கோவிட் பாதிப்பு உட்படப் பல நோய்களுக்கு ஸ்டீராய்டுகள் உயிர்காக்கும் மருந்துகளாக உள்ளன. கரோனாவைப் பொறுத்தவரை, கோவிட் நிமோனியாவுக்கு ஒரே அறிகுறி ஆக்சிஜன் அளவு 93%க்கும் குறைவாகச் செல்வது. இதை கவனத்தில் கொள்ளாமல், ஸ்டீராய்டுகளை அதிக அளவு, நீண்ட காலம் அல்லது எந்த அறிகுறியும் இல்லாமல் நோயாளிகளுக்குக் கொடுப்பது பூஞ்சை தொற்றுக்கே வழிவகுக்கும். ஸ்டீராய்டு சர்க்கரை அளவை மட்டும் அதிகரிப்பதில்லை. உடலின் நோயெதிர்ப்பு திறனையும் அது குறைக்கும்.

கரோனாவினால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

கோவிட் பாதிப்பினால் சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால் (லேசான கோவிட் பாதிப்புடன் நோயாளி நன்றாக இருந்தாலும்), சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு இன்சுலின்தான் முக்கிய சிகிச்சை. அப்போது மாத்திரைகள் உரிய பலனளிக்காது. பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியமும் உண்டு.

இன்றும் இன்சுலின் குறித்துப் பல நோயாளிகளுக்கு ஆதாரமற்ற அச்சங்கள் உள்ளன. இந்த கோவிட் காலத்தில், இன்சுலின் எடுக்க மறுப்பதால் பூஞ்சை தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்பதை அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் சிகிச்சையின்போதோ சிகிச்சைக்குப் பின்னரோ வீட்டில் இருக்கும்போது குளுக்கோமீட்டரால் சர்க்கரை அளவைக் கண்காணித்து வரவேண்டும். சர்க்கரை அளவு 200-ஐத் தாண்டினால், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மியூகோமைகோசிஸ் சிகிச்சைகள்

சிகிச்சையைப் பொறுத்தவரை விரைந்து கண்டறிதலே, அதன் பாதிப்புகளின் தீவிரத்திலிருந்து மீளும் வழி. ஆம்போடெரிசின் பி, லிபோசோமல் ஆம்போடெரிசின் பி (சிறுநீரக நச்சுத்தன்மையைக் குறைப்பதற்கு) இதற்கான முதல்நிலை மருந்துகள். ஆம்போடெரிசின் பி மருந்துக்குப் பாதகமான விளைவுகளையோ ஒவ்வாமையோ கொண்ட நோயாளிகளுக்கு போசகோனசோல், இசாவுகோனசோல் போன்ற மருந்துகள் வழங்கப்படும். மிகவும் அதிக விலைகொண்ட இந்த மருந்துகளைச் சில நோயாளிகள் மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த நோய்க்கான சிகிச்சை செலவு கரோனாவை விடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும். கரோனா சிகிச்சையைப் போல, மியூகோமைகோசிஸ் சிகிச்சையையும் காப்பீட்டுக்குக் கீழ் கொண்டுவருவது, நோயாளிகள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

அச்சம் தவிர்ப்போம்

மியூகோமைகோசிஸ் பாதிப்பில் இறப்பு சதவீதம் அதிகம், கண்பார்வை இழப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம், நோயிலிருந்து மீண்டாலும் உளவியல் ரீதியிலான பாதிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் நபருக்கு இந்தத் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் அரிதினும் அரிது என்பதே நிதர்சனம். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலமும், ஸ்டீராய்டுகளை கவனத்துடன் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்வதன் மூலமும் கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்களைத் தவிர்த்துவிட முடியும். எனவே, அச்சம் தவிர்ப்போம். இந்த நோயை வரும் முன்னரே தடுப்போம்.

டாக்டர் சிவப்பிரகாஷ்,

நாளமில்லா சுரப்பியில் நிபுணர், நீரிழிவு சிறப்புச் சிகிச்சை நிபுணர். தொடர்புக்கு: sivaprakash.endo@gmail.com

தொகுப்பு: முகமது ஹுசைன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்