கடந்த செப்டம்பர் 17 அன்று கரோனா முதல் அலை உச்சத்தைத் தொட்டது. அப்போது தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்தது. இரண்டாம் அலை 2021 மே முதல் வாரத்தில் உச்சம் தொட்டபோது, தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியது. அதாவது இரண்டாம் அலையில் பாதிப்பு நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. இந்த நிலையில், இன்னும் ஆறிலிருந்து எட்டு வாரங்களில் கரோனாவின் மூன்றாம் அலை தொடங்கும் என டெல்லி எய்ம்ஸ் தலைமை மருத்துவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கரோனா மூன்றாம் அலையை கரோனாவின் புதிய வேற்றுருவான டெல்டா பிளஸ் முடுக்கிவிடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மிகுந்த வீரியத்துடன் பரவும் தன்மைகொண்ட டெல்டா பிளஸ் வேற்றுருவால் உலக அளவில் இதுவரை 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் 30 பேர் இந்தியர்கள். மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த டெல்டா பிளஸ் நுழைந்துவிட்டது. பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட நாட்டின் மருத்துவக் கட்டமைப்பும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களும் இரண்டாம் அலையின் கொடிய தாக்கத்திலிருந்து மீள்வதற்கு முயலும் சூழலில்தான், டெல்டா பிளஸ் குறித்த அபாய ஒலி வலுத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
டெல்டா பிளஸ் என்பது என்ன?
நாவல் கரோனா வைரஸின் பி.1.617.2 வரிசையின் மூன்றாம் திரிபினால் உருவான ஒரு வேற்றுரு கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வேற்றுருவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஏற்பட்ட நாவல் கரோனா வைரஸின் இரண்டாம் அலைக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்தனர். கடந்த மே 31 அன்று உலக சுகாதார நிறுவனம் இதற்கு ‘டெல்டா’ என்று பெயரிட்டது.
» டெல்டா பிளஸ் பரவல்: ம.பி., கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
» வேளாண் அடையாள அட்டை விரைந்து வழங்க வேண்டும்: காரைக்கால் விவசாயிகள் கோரிக்கை
சார்ஸ்-கோவி-2 இன் அதிவேகமாகப் பரவும் தன்மைகொண்ட இந்த டெல்டா வேற்றுரு மேலும் திரிந்து, ஏஒய்1 வரிசையைச் சார்ந்த டெல்டா பிளஸ் வேற்றுருவானது. இது B.1.617.2.1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட பீட்டா வகையின் K417N திரிபை டெல்டா பிளஸ் வேற்றுரு தனது ஸ்பைக் புரதத்தில் கொண்டுள்ளது. அத்துடன், அதன் முன்னோடியான டெல்டா வேற்றுருவின் அனைத்து அம்சங்களையும் டெல்டா பிளஸ் கொண்டிருப்பதால், அதன் பரவும்தன்மை அதிக வீரியத்துடன் இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த வகையின் முதல் வரிசை மார்ச் 2021இல் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இதன் பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் இதுகுறித்து உடனடியாகக் கவலைப்படத் தேவையில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்டா பிளஸ் வேற்றுருவின் இருப்பைத் தீர்மானிக்க, தேசிய வேதியியல் ஆய்வகம் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.சி.எல்) இப்போது மகாராஷ்டிரத்திலிருந்து ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய நகரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்துவருகிறது. இந்த இரண்டு பிராந்தியங்களும் இந்தியாவில் கரோனாவினால் அதிக பாதிப்புக்கு உள்ளானவை.
அறிகுறிகள்
நாவல் கரோனா வைரஸின் இந்த வேற்றுரு குறித்து ஆய்வுகள் நடந்துவருகின்றன. கோவிட்-19இன் அறிகுறிகளுக்கும் டெல்டா பிளஸ் அறிகுறிகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைக் கண்டறிய விஞ்ஞானிகள் முயன்றுவருகின்றனர்.
நாவல் கரோனா வைரஸினால் வழக்கமாக ஏற்படும் வறட்டு இருமல், காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, தோல் வெடிப்பு, பாதங்களிலும் விரல்களிலும் ஏற்படும் நிறமாற்றம், தொண்டை வலி, வெண்படல அழற்சி, சுவையிழப்பு, வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், பேச்சு இழப்பு ஆகியவற்றுடன் டெல்டா பிளஸ் நோயாளிகளுக்கு வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்தி, மூட்டு வலி, காதுகேளாமை போன்றவையும் ஏற்படலாம் என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கண்டறியப்பட்ட, இரண்டாம் அலைக்குக் காரணமாக விளங்கிய டெல்டா அல்லது பி.1.617.2 வேற்றுருவில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக புதிய டெல்டா பிளஸ் வேற்றுரு உருவானது.
டெல்டா பிளஸ் மரபணுவின் ஆரம்ப வரிசை ஐரோப்பாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
டெல்டா பிளஸ் இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, போலந்து, ஜப்பான், நேபாளம், சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் 21 பேர் டெல்டா பிளஸ் வேற்றுருவின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் ரத்னகிரியில் ஒன்பது பேரும், ஜல்கானில் ஏழு பேரும், மும்பையில் இருவரும், பால்கர், தானே, சிந்துதுர்க் மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில், பாலக்காடு, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் குறைந்தது மூன்று பேர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் கடப்பிரப் பஞ்சாயத்துப் பகுதியைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலைச் சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கரோனா வைரஸின் புதிய டெல்டா பிளஸ் வேற்றுருவின் பாதிப்புக்கு உள்ளானார். கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருந்த அந்தப் பெண், வீட்டுத் தனிமையிலிருந்தே குணமடைந்தார்.
கர்நாடகத்தில் டெல்டா பிளஸ் வேற்றுருவால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தடுப்பூசி வேலை செய்யுமா?
டெல்டா பிளஸ் வேற்றுருவில் தடுப்பூசிகளின் செயல்திறனை விஞ்ஞானிகள் இன்னும் சோதிக்கவில்லை. ஆனால், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) முன்னாள் ஆணையாளர் டாக்டர் ஸ்காட் கோட்லீப் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
எம்ஆர்என்ஏ தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது டெல்டா மாறுபாட்டுக்கு எதிராக 88 சதவீதம் பாதுகாப்பை அளிக்கிறது. ஆனால், வைரல் வெக்டார் வகைத் தடுப்பூசிகள் 60 சதவீதம் பாதுகாப்பையே அளிக்கின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாடர்னா, பைஸர் / பயோஎண்டெக் ஆகியவை உருவாக்கிய தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்ட்ராஜெனகா ஆகியவற்றின் தடுப்பூசிகள் வைரல் வெக்டார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
டெல்டா, பீட்டா ஆகிய வகைகளுக்கு எதிராக கோவாக்சின் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என்று பாரத் பயோடெக் தெரிவிக்கிறது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பாரத் பயோடெக் ஆகியவற்றின் ஆய்வு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், 63 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவில் எய்ம்ஸ் நடத்திய ஆய்வில், கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் டெல்டா பிளஸ் வேற்றுருவுக்கு எதிராகச் செயல்படவில்லை.
மோனோகுளோனல் ஆன்டிபாடிகளை இது பயனற்றதாகுமா?
வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராட, நம் உடல் ஆன்டிபாடிகள் எனப்படும் எதிரணுக்களை உருவாக்குகின்றன. மோனோகுளோனல் ஆன்டிபாடிகள் என்பது நமது நோயெதிர்ப்பு அமைப்புகளின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் செயற்கை ஆன்டிபாடிகள். மனித ரத்தத்திலிருந்து குறிப்பிட்ட ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து அவற்றை குளோனிங் செய்வதன் மூலம் அவை தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் நாவல் கரோனா சிகிச்சைக்கு மோனோகுளோனல் ஆன்டிபாடிகள் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டன.
டெல்டா பிளஸ் வேற்றுருவின் பாதிப்பு எப்படி இருக்கும், நோயின் வளர்ச்சி எப்படி இருக்கும், கடுமையான பாதிப்புகள் இருக்குமா என்பதையெல்லாம் கண்டுபிடிக்க வல்லுநர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்த ஆய்வின் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகள், கோவிட்-19க்கான மோனோகுளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சைகளை டெல்டா பிளஸ் வேற்றுரு பயனற்றதாக்கும் எனத் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல், தடுப்பூசி, நாவல் கரோனா வைரஸ் தொற்று ஆகியவற்றால் நம் உடலில் ஏற்பட்டிருக்கும் நோயெதிர்ப்புத் திறனை மீறும் ஆற்றல் கொண்டதாக டெல்டா பிளஸ் இருக்கும் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் அச்சப்பட வேண்டுமா?
நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மீறும் ஆற்றல் டெல்டா பிளஸ் வேற்றுருவுக்கு உண்டு என்பதால், வரும் மாதங்களில் மூன்றாம் அலையை டெல்டா பிளஸ் கட்டவிழ்த்துவிடக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது டெல்டா பிளஸ் வேற்றுருவின் பரவல் இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதைவைத்து, வரும் நாட்களில் ஏற்படப்போகும் பாதிப்பு குறித்தோ, அதன் போக்கு குறித்தோ நாம் தீர்மானிக்க முடியாது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாவல் கரோனா வைரஸின் இரண்டாம் அலைக்குக் காரணமான டெல்டா வேற்றுருவும் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தது. இரண்டரை மாதத்தில் அது அபரிமித வளர்ச்சியடைந்து நாட்டையே சூறையாடியது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். எனவே, அலட்சியம் வேண்டாம். எச்சரிக்கையாய் இருப்போம். தடுப்பூசி, ஈரடுக்கு முகக்கவசம், சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவையே மூன்றாம் அலையிலிருந்து நம்மைக் காக்கும் அரண்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago