லாங் கோவிட் என்றால் என்ன?
கரோனா வைரஸ் (கோவிட்) தொற்று ஏற்பட்ட சில வாரங்களில் பெரும்பாலோர் நலம்பெற்று விடுவார்கள். ஆனால், சிலருக்கு நான்கு முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்குப் பிறகும்கூட நோயின் தாக்கம் - அறிகுறிகள் நீடிக்கலாம். இவ்வாறு நீடிக்கும் கோவிட் தொடர்புடைய அறிகுறிகள்‘ லாங் கோவிட்’எனப்படுகின்றன.
லாங் கோவிட் யாரைப் பாதிக்கும்?
தற்போதைய மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, கோவிட் தொற்று வந்த யாரை வேண்டுமானாலும் லாங் கோவிட் பாதிக்கலாம். குறிப்பாக, லேசான - மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்கள், லாங் கோவிட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
லாங் கோவிட்டின் அறிகுறிகள் என்ன?
அயர்ச்சி: மிதமிஞ்சிய சோர்வால் அவதிப்படுவார்கள். இந்த அயர்ச்சி, சாதாரண சோர்வுபோல் இல்லாமல், மிகக் கடுமையானதாக இருக்கலாம். தூங்குவதாலும் ஓய்வெடுப்பதாலும் இது குறைந்துவிடாது. இந்த அயர்ச்சி எப்போது வரும், எப்போது மோசமடையும் என்று கணிக்க முடியாத வகையில் இருக்கலாம். தினமும் செய்யும் சாதாரண வேலைகளைச் செய்வதில்கூடச் சிரமம் ஏற்படலாம்.
ஆயாசம் / அறிகுறிகள் தீவிர மடைதல்: கடுமையான அயர்ச்சி இருக்கும்பட்சத்தில் கடின உடல் உழைப்பு, உணர்வுவசப்படுதல், அதிகப் படியான வேலை போன்றவற்றைச் செய்தால் யோசிக்கும் திறன், உடற்பயிற்சியைத் தாங்கும் திறன் போன்றவை பாதிப்படையலாம். இது உடல் வலியையும் ஏற்படுத்தலாம். இது கடுமையான உடல் அல்லது உளம் சார்ந்த வேலைகளுக்குப் பிந்தைய ஆயாசம் எனப்படுகிறது. இதற்குச் சிகிச்சையளிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
தலைச்சுற்றல்/மயக்கம்: நமது உடலில் தன்னியக்க நரம்பு மண்டலம் என்பது உடலுக்குள் நடைபெறும் ரத்த அழுத்தம், செரிமானம், சுவாசம், உடல் தட்பவெப்ப நிலை போன்ற தானியங்கிச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதி. இந்த மண்டலம் சரியாகச் செயல்படாதபோது உடல் வெப்பநிலை,ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். இவ்வாறு சிரமங்கள் ஏற்படும்போது தலைச்சுற்றல், மூச்சு விடுவதில் சிரமம் - தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இந்த அறிகுறிகள் கோவிட் போன்ற வைரஸ் தொற்றுகளால் தூண்டப்படக்கூடும். கோவிட் தொற்றால் உட்காரும்போது அல்லது எழுந்து நிற்கும்போது, இதயத் துடிப்பு அதிகரித்து தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படக்கூடும்.
மூளைத்திறன் பாதிப்பு: லாங் கோவிட் கொண்ட பலருக்கு மூளைத்திறன் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதி செய்து வருகின்றன. இது ‘பிரெய்ன் ஃபாக்’ எனப்படுகிறது. வேலையில் கவனம் செலுத்துவது, நினைவுத்திறன், யோசிப்பது, உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.
சுவாசக் கோளாறுகள்: கோவிட் தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் சுவாசிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பழைய நிலைக்குத் திரும்பாமல், லாங் கோவிட் காலத்திலும் சிலருக்குத் தொடரலாம். இத்தகைய கோளாறுகளை இயல்பாக மூச்சுவிடும் முறையிலிருந்து மாறுபட்டு, தேவைக்கு அதிகமாக மூச்சுவிடுவதைக் குறிக்கிறது. வாய் அல்லது மேல் மார்புப் பகுதியிலிருந்து மூச்சுவிடுவது, தவறான மூச்சுத் தசைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பிரச்சினை ஏற்படக்கூடும்.
லாங் கோவிட்டின் விளைவுகளை எப்படிச் சமாளிப்பது?
ஓய்வு
லாங் கோவிட் கொண்டவர்களுக்கு உடல்,மனம் இரண்டின் ஓய்வு மிக முக்கியம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் ஓய்வு தேவைப்படும். எனவே, அறிகுறிகள் குறையும் வரைக்கும், உடலுக்கும் மனத்துக்கும் தகுந்த ஓய்வு வேண்டும். அன்றாட வேலைகளுக்கிடையே சரியான ஓய்வு எடுக்கவில்லை என்றால், லாங் கோவிட் கூடுதலாக மோசமடையும் அல்லது நீடிக்கும்.
நன்கு ஓய்வுபெற கைபேசி, தொலைக்காட்சிப் பயன்பாட்டைத் தவிருங்கள் அல்லது குறையுங்கள். சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதைத் தவிருங்கள். முடிந்தால் தியானம் செய்யலாம். இரவில் தூக்கத்தைத் தள்ளிப்போடக் கூடாது. ஓய்வெடுப்பதை அலட்சியப்படுத்த வேண்டாம்.
உடற்பயிற்சியில் கவனம்
முறைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சி, உடலியக்க நடவடிக்கைகள் (நடைப் பயிற்சி, ஓடுவது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது) உடல், மனம் சார்ந்த பயன்களை அளித்தாலும், லாங் கோவிட் கொண்டவர்களுக்கு வழிகாட்டு முறைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. அயர்ச்சி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைதல், ஆயாசம் போன்றவை இருக்கும்பட்சத்தில், லாங் கோவிட் கொண்ட எவரும், தகுந்த மருத்துவ ஆலோசனை/கண்காணிப்பு/பரிந்துரை இல்லாமல், உடலியக்க நடவடிக்கைகள்/உடற்பயிற்சிகளைத் தாங்களாகவே செய்யக் கூடாது.
நிதானம்-திட்டம்-முன்னுரிமை (Pacing-Planning-Prioritising)
கோவிட் தொற்றிலிருந்து மீண்டுவரும் வேளையில், பொதுவாக உடல் அயர்ச்சி இருக்கும். சாதாரணமாகச் செய்யக்கூடிய அன்றாட வேலையைக்கூட (கூட்டுவது, குளிப்பது, புத்தகம் வாசிப்பது போன்றவை) செய்ய முடியாதபடி பலவீனமாக உணரலாம். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க மூன்று உத்திகள் பரிந்துரைக்கப்படுகின்றன: அவை, நிதானம், திட்டம், முன்னுரிமை.
நிதானம்: அயர்ச்சி ஏற்படும் அளவுக்கு எந்த வேலையையும் ஒரேயடியாகச் செய்ய வேண்டாம். வேலையைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துச் செய்து முடிக்கலாம்; அல்லது இடையிடையே சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக்கொண்ட பிறகு தொடரலாம்.
திட்டம்: வழக்கமாகச் செய்யக்கூடிய அன்றாட/வாராந்திர வேலைகளை உடல் சக்திக்கேற்றவாறு பிரித்து, எந்தெந்த வேலையை எந்தெந்த நாள்களில் செய்யலாம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
முன்னுரிமை: எந்தெந்த வேலையை உடனடியாக அல்லது கண்டிப்பாகச் செய்ய வேண்டும், எவற்றைப் பிறகு செய்துகொள்ளலாம், ஒரு வேலையைச் செய்து முடிக்க யார் உதவக் கூடும் என்பதற்கு ஏற்றவாறு வேலைகளைப் பட்டியலிட்டுப் பிரித்துக்கொள்ளுங்கள். வேலைகளின் முக்கியத்துவத்துக்கு ஏற்றவாறு, அவற்றைச் செய்து முடியுங்கள்.
அன்றாட வேலைகள் போக, வீட்டிலிருந்து அலுவலகம் சென்று திரும்புவதிலும் இந்த மூன்று உத்திகளைத் தொடர வேண்டும். எடுத்தவுடன் முழுநேரப் பணிக்கு ஒரேயடியாகச் செல்லாமல், படிப்படியாக நேரத்தை உயர்த்திப் பணிக்குத் திரும்புவது அல்லது உங்கள் உடலுக்கு ஏற்றாற்போல் வேலைகளைப் பங்கிட்டுக்கொள்வதையே மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கட்டுரையாளர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிசியோதெரபி ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: csrikesavan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago