மோகன்லால் நடித்து, இளையராஜா இசையில் 1997-ல் வெளியான மலையாளப் படம் ‘குரு’. மதத் தீவிரவாதம் தொடர்பாகத் தவறான பார்வையுடன் இருக்கும் நாயகன் ரகுராமன், படத்தில் கற்பனையான ஒரு நிலத்துக்குப் போவார். அந்த நிலத்தில் அனைவருமே பார்வையற்றவர்களாக இருப்பார்கள். அங்கே பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும், புனிதமாகக் கருதப்படும் லாமா பழத்தின் சாறைச் செவிலிகள் புகட்டிவிடுகிறார்கள். அது குழந்தைகளுடைய பார்வையைப் பறித்துவிடுகிறது. அந்த நிலத்தில் இருப்பவர்களுக்குக் கண்ணிருந்தும், தங்கள் கூட்டத்தினரின் பார்வையை அவர்களே பறித்துவிடுகிறார்கள்.
நிஜத்தில் நடைபெறும் நிகழ்வு குறித்து நாயகனுக்குத் தெளிவு ஏற்படுத்தும் வகையில் உருவகமாக இந்தக் கற்பனை நிலச் சம்பவங்கள் ‘குரு’ படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இன்றைக்குத் தடுப்பூசி வேண்டாம் என மறுப்பவர்களை இத்துடன் ஒப்பிட்டே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. புனித மரத்தின் சாறை அருந்தாமல் இருப்பது பாவம், அதனால் தங்கள் பார்வை வலிந்து பறிக்கப் படுவது பிரச்சினையில்லை என ‘குரு‘ படத்தில் வருபவர்கள் நம்புகிறார்கள். அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்டு நோயிடமிருந்து மனித உயிரைக் காத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் தடுப்பூசி மறுப்பாளர்கள். கண்ணிருந்தும் பார்க்க மறுப்பவர்களுக்கு ஒப்பானது இது.
வெற்று வாதங்கள்
நாவல் கரோனா வைரஸ் முதல் அலைத் தொற்றுக் காலத்திலிருந்தே ‘கரோனாவைத் தடுக்க முகக்கவசம் தேவையில்லை’, ‘தடுப்பூசி போட்டால் நோய்த் தடுப்பாற்றல் குறைந்து விடும்’, ‘கோவிட்-19 நோயைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை, அலோபதி மருத்துவர்கள் பீதியைக் கிளப்புகிறார்கள்’ என்கிற ரீதியில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் சமூக ஊடகங்கள் வழியாகத் தமிழகத்தில் பரப்பப்பட்டுவருகின்றன.
‘தொடு சிகிச்சை நிபுணர்கள்’, ‘அக்கு ஹீலர்கள்’, ‘மாற்று மருத்துவர்கள்’, ‘இயற்கை மருத்துவர்கள்’ என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவர்கள்தாம் இப்படிக் கூறிவருகிறார்கள். எந்த ஆதாரமும் அடிப்படையும் அற்ற ஆபத்தான இந்தக் கருத்துகளுக்கு ஆதரவாக நடைமுறைக்கு ஒவ்வாத சில உலக அறிஞர்களையும் மருத்துவர்களையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள்.
தடுப்பூசி வேண்டாம் என்று சொல்வதற்கு இவர்களால் அண்மையில் துணைக்கு அழைக்கப்பட்டிருப்பவர் மருத்துவ அறிவியலுக்கு நோபல் பரிசு பெற்றவரும் ஹெச்.ஐ.வி. வைரஸைக் கண்டறிந்தவருமான பிரான்ஸைச் சேர்ந்த லூக் மான்டேனியே (Luc Montagnier). எய்ட்ஸ் வைரஸை 1980-களில் கண்ட றிந்து, அதற்கு 2008-ல் நோபல் பரிசு பெறும்வரை அறிவியல் முறைசார்ந்து செயல்பட்டுவந்த இவர், இன்றைக்கு நேரெதிர் திசையில் இயங்கிவருகிறார். அறிவியல்பூர்வமற்ற வெற்று வாதங்கள், தடுப்பூசி மறுப்பு, ஹோமியோபதி மருத்துவச் சார்பு போன்றவை அவருடைய சமீபத்திய சாய்வுகள். இதில் நகைமுரண் என்ன வென்றால், ஒருபுறம் ‘நவீன அறிவியலே பொய்’ என்று கூறும் தமிழகத் தடுப்பூசி மறுப்பாளர்கள், அறிவியலுக்கு நோபல் பரிசு பெற்றவரைத் தங்களுக்கு ஆதரவாக முன்னிறுத்துவதுதான்.
குழப்பும் கருத்துகள்
கோவிட்-19 தடுப்பூசி தொடர்பாக ஒரு காணொலியில் லூக் மான்டேனியே பிரெஞ்சில் கூறிய கருத்துகளை, RAIR அறக்கட்டளை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையை நடத்திவருபவர் ‘புலனாய்வு இதழாளர்’ எனத் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும், அமெரிக்காவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் ஏமி மெக். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவைப் பெற்ற இந்த அறக்கட்டளை கறுப்பின மக்கள், இஸ்லாமியர்கள், அயல்நாட்டு மக்கள் மீது இனவெறியுடன் செயல்பட்டுவரும் வலதுசாரி அமைப்பு.
லூக் மான்டேனியே கூறியதாக இரண்டு வார இடைவெளியில் அந்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குழப்பமான செய்திகள்:
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மே 18-ல் லூக் கூறியதை அவரே மே 25-ல் மறுத்ததாகவும், மீண்டும் மே 25-ல் லூக் கூறியதை அவரே மே 29-ல் மறுத்ததாகவும் RAIR அறக்கட்டளையே தெரிவிக்கிறது. இனவெறி சார்ந்து செயல்படும் வலதுசாரி அமைப்பு, அறிவியல் அடிப்படையற்ற ஒரு விஞ்ஞானி கூறிய கருத்துகளை அடுத்தடுத்த நாள்களில் மறுக்கும் அதன் இணையதளம் ஆகியவற்றைத்தான் தமிழகத் தடுப்பூசி மறுப்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக முன்னிறுத்துகிறார்கள். சந்தேகமிருப்பவர்கள் கீழ்க்கண்ட தளத்துக்குச் சென்று உண்மையை அறியலாம்: https://rairfoundation.com/?s=Luc Montagnier
பின்னுக்கு இழுக்கும் பார்வை
தமிழகத் தடுப்பூசி மறுப்பாளர்களின் வெற்று வாதங்கள் எப்படிப்பட்டவை என்பதை விளக்கு வதற்கான ஒரு உதாரணமாக லூக் மான்டேனியேவின் பின்னணி விளக்கப்பட்டிருக்கிறது. கற்கருவிகள், நெருப்பு, சக்கரத்தைக் கண்டுபிடித்த காலம் தொடங்கி, அடிப்படை அறிவியல் உண்மைகளை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலேயே மனிதகுலம் இவ்வளவு காலத்துக்கு முன்னேற்றம் கண்டுவந்திருக்கிறது. ஆனால், இந்த அடிப்படைப் புரிதல்களை உள்வாங்கிக்கொள்ள முடியாத, ஜீரணித்துக்கொள்ள முடியாத சிலர் மனித குலப் புரிதலை பின்னுக்கு இழுக்க முயல்கிறார்கள். சாதாரண நாள்களில் இதுபோன்ற பின்னிழுக்கும் முயற்சிகள் பெரிய வெற்றியைப் பெறுவதில்லை. காரணம் அப்போது சமூகத்தின் கவனச் சிதறல் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், பெருந் தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் தனிநபரும் பல்வேறு இழப்புகளையும் குழப்பங்களையும் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுபோன்ற ஆதாரமற்ற வாதங் களால் மக்களை எளிதில் ஈர்த்துவிட முடிகிறது.
ஒருபுறம் வட இந்தியாவில் வலுவான மருத்துவக் கட்டமைப்பும் பதிவுசெய்யும் அரசு நடைமுறைகளும் பரவலாக இல்லாத நிலையில், கோவிட்-19 சார்ந்த உயிரிழப்புகள் அதிக அளவிலிருந்தாலும், அரசின் கணக்கீடுகளில் இடம்பெறாமல் போகின்றன. மற்றொருபுறம் கோமியம் குடித்தால் போதும், சாணியைப் பூசிக்கொள்வது கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என வலியுறுத்தும் செய்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன. இந்த பத்தாம்பசலிப் புரிதலுக்கும் ‘தடுப்பூசி போடாதே’, ‘முகக்கவசம் அணியாதே’, ‘கோவிட் மிகச் சாதாரண நோய்’ என்று ‘வெற்று மருத்துவ நிபுணர்’களின் கூற்றுகளுக்கும் எந்த வேறுபாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
உடம்பில் கழிவு இல்லையென்றால், எந்த நோயும் தொற்றாது என்று அடிப்படையற்ற கருத்துகளை இவர்கள் உதிர்த்துவருகிறார்கள். உடம்பில் அளவுக்கு மீறும் தேவையற்ற கூறுகள் தொற்றாத நோய்களை ஏற்படுத்துகின்றன என்பது உண்மைதான். மாறாகக் கிருமிகளால் தொற்றுநோய்கள் தொற்றுகின்றன. ஒருவரது உடம்பில் உள்ள கழிவுகளைப் பரிசோதித்துவிட்டு அவை தொற்றுவதில்லை. வைரஸுக்குத் தேவை உயிருள்ள ஒரு உடல். உடலைச் சிறப்பாகப் பராமரிக்கக்கூடிய ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்றவர், விளையாட்டு வீரர்கள் போன்றோர்கூட கோவிட் தொற்றுக்குப் பலியாகி இருக்கிறார்கள். இப்படி அடிப்படை உண்மைகளை மறுப்பதாலும், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாமல் போவதாலும் நம் கண் முன்னே பலரும் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள்.
மனிதர் இறப்பில் இன்பம் காணலாமா?
ஒவ்வொரு நாளும் தீவிர கரோனா நோயாளியாக வருபவர்களைத் தங்கள் உயிரைப் பணயம் வைத்தும், தங்கள் அறிவு-ஆற்றல்களைப் பயன்படுத்தியும் காப்பாற்ற முயலும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் ஒரு கணம் நாம் நினைத்துப் பார்த்தால் போதும். அறிவியலை நம்பத் தயாராக இல்லாதவர்கள்கூட, இவர்களை நம்பலாம். சக மனிதர்களைச் சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் அறிவியலையே நம்புகிறார்கள். பல்லாண்டு காலமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவ அறிவியல் வழிகாட்டு நெறிமுறைகள் தொடங்கி, சமீபத்திய ஆராய்ச்சிகள்வரை பல அம்சங்களைப் பின்பற்றியே அவர்கள் செயல்படுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், மருத்துவ அறிவியலை நம்பச் சொல்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில்தான் சிறந்த மருத்துவம் சிகிச்சை கிடைக்கும் என்று கூறவில்லை. தமிழகம் முழுவதும் சாதாரண மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்து இன்றைக்கும் செய்திகளில் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. அத்துடன் நாட்டிலேயே சிறந்த பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலங்களில் ஒன்று தமிழகம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்கூட கோவிட் நோய்க்கு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியிருக்கிறார்கள்.
கரோனா போன்ற பெருந்தொற்று கற்பனை செய்ய முடியாத இழப்புகளை, பேராபத்தை நமக்கு உருவாக்கியுள்ளது. அந்த ஆபத்து சிறிதளவுகூடக் குறையவில்லை. இந்த நிலையில் மருத்துவ அறிவியலைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் நாம் விஞ்ஞானி யாகவோ ஆராய்ச்சியாளராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சக மனிதன் உயிரோடு வாழ வேண்டும் என நினைக்கும், அடிப்படை மனிதாபிமான உணர்வைக் கொண்டிருந்தாலே போதுமானது. மாறாக இத்தனை இறப்புகளைக் கண்ணுற்ற பிறகும் தடுப்பூசி வேண்டாம், முகக்கவசம் வேண்டாம் என்று ஒருவர் கூறுகிறார் என்றால், சக மனிதர்கள் மீதான அக்கறையால்தான் அப்படி அவர் கூறுகிறார் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago