நாவல் கரோனா வைரஸ் நோய் கண்டறிப்பட்ட நாளிலிருந்தே, அதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய மருத்துவ சிகிச்சை முறைகள், மருத்துவப் பரிசோதனைகள் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவருகின்றன.
கோவிட்-19 நோய்நிலையில் சி.டி. ஸ்கேன் (Computer Tomography Scan) நுரையீரலின் கட்டமைப்பையும், அதில் காணப்படும் நோய்க் காரணி, நோய்த் தொற்றின் தன்மை - தீவிரத்தை அறிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகுக்கிறது. அதேவேளையில், கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதில் இப்பரிசோதனையின் பங்களிப்பு சற்று கேள்விக்குறியாக உள்ளது. மூலக்கூறு உயிரியல் (molecular biology) தொழில்நுட்பமான ரிவேர்ஸ் பாலிமரேஸ் தொடர்வினை (RT-PCR)-யைப் பயன்படுத்தி கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட 16,000க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட ஒரு ஆய்வில், 62 சதவிகிதம் பேருக்கு மட்டுமே சி.டி. ஸ்கேன் மூலம் நோய்த்தொற்றுள்ளதாக அறியப்பட்டது.
மேலும், சி.டி. ஸ்கேன் மூலம் அறியப்படும் அறிகுறிகள் கரோனா வைரஸ் (SARS-CoV-2) தொற்றினாலா அல்லது வேறு நுரையீரல் தொற்றின் காரணமாக ஏற்பட்டதா என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. மேலும், ஒருவருக்கு RT-PCR பரிசோதனை செய்யாமல், சி.டி. ஸ்கேனில் காணப்படும் அறிகுறிகளை மட்டும் ஆராய்ந்து, கோவிட்-19 தொற்றைக் கண்டறிய முற்பட்டபோது, ஏறக்குறைய 20 சதவிகிதம் பேருக்குத் தவறான முடிவுகள் வந்துள்ளன. மேலும், சி.டி. ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் இயல்பாக (normal findings) உள்ளதைக் கொண்டு ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்றும் உறுதி செய்யவும் முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பல்வேறு மருத்துவத் தரவுகளின்படி, கரோனா வைரஸ் (SARS-CoV-2) ஒருவரின் மூக்கின் வழியாகத்தான் உடலுக்குள் செல்கின்றது (அதனால்தான் முகக்கவசம் அணிவது கரோனா நோய்த் தடுப்பு முறையில் முதன்மையானதாக் கருதப்படுகிறது). பின்னர், ‘Para nasal sinuses’ என்று சொல்லப்படுகிற மூக்கின் அண்டைப் பகுதிகளையும், தொண்டையையும் பாதிக்கின்றது. இத்தொற்று ஒருவருக்கு சளி, இருமல், தொண்டை வலி, சுரம் போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கின்றன.
கரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலையில், பெரும்பாலும் நுரையீரல் பாதிக்கப்படுவதில்லை. எனவே, கோவிட்-19 நோயின் ஆரம்பக்கட்ட நிலையில் சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வது நோயைக் கண்டறிவதிலோ அல்லது நோயின் தீவிரத்தை அறிந்துகொள்வதிலோ பலனளிக்கவில்லை.
நோய் முற்றிய நிலையில்…
கரோனோ நோய்த் தொற்றின் தீவிர நிலையில் (advanced stage), சி.டி. ஸ்கேன் பரிசோதனை நுரையீரல் பாதிப்பை மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள பெரும் பயனுடயதாக உள்ளது. அதேவேளையில், நோயாளியின் ரத்தத்தின் ஆச்சிஜன் நிறையளவும் (SpO2)-பெருமளவு குறைந்து காணப்படுகின்றது. எனவே, கோவிட்-19-இன் தீவிர நிலையை எளிமையான பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் மூலம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது, சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம்தானா என்கிற கேள்வியும் எழுகின்றது.
இதுகுறித்து மும்பையில் கடந்த ஒரு வருட காலமாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் சுவாச நோயியல் நிபுணர் மருத்துவர் லேன்சோலோட் பின்டோ குறிப்பிடுகையில், “எங்களது அனுபவத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் கோவிட்-19 தொற்றை அறிந்துகொள்வதற்கும், ரத்தத்தில் ஆக்சிஜன் நிறையளவு ((SpO2) - எக்ஸ்-ரே போன்ற பரிசோதனைகள் நோயின் நிலைப்பாட்டை, தீவிரத்தன்மையை அறிந்துகொள்வதில் பயனுடையதாக இருக்கின்றன.
இதுவரை குறைந்தபட்சமாக இரண்டு சதவிகித கரோனா நோயாளர்களுக்கு மட்டுமே சி.டி. ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தியிருக்கின்றோம். அதுவும் நோயாளர்களின் ரத்தத்தில் ஆக்சிஜன் நிறையளவு (SpO2) அதிகமாக இருந்தும், மூச்சுத் திணறல் - சுவாசக் கோளாறுகளால் அவதிப்படும்போது கரோனாத் தொற்று அல்லாத, வேறு தொற்றாக (other infections) இருக்குமோ என்று அறிந்துகொள்வதற்கும், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் (ventilator) பயன்பாட்டிற்கான திட்டமிடலுக்கும் பயன்படுத்தி இருக்கிறோம். எனவே, மருத்துவர்கள் சிகிச்சையின் தேவையை அறிந்து சி.டி. ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வது மிக முக்கியம்” என்கிறார்.
குணமடைந்த பிறகு…
கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்கள் சி.டி. ஸ்கேன் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லையென கரோனா நோய்த் தொற்றுக்கான அரசின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. எனினும் கோவிட்-19 நோயிலிருந்து ஒருவர் குணமடைந்த பின்னும் இருமல் - மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியன நெஞ்சக நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வது முறையான மருத்துவ சிக்கிசை மேற்கொள்வதற்குப் பயனுடையதாக இருக்கும்.
கதிர்வீச்சு அபாயம்
சி.டி. ஸ்கேன் பரிசோதனையின்போது வழக்கத்தைவிட அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகின்றது. உதாரணத்திற்கு, ஒரு மார்பக எக்ஸ்-ரே (X-ray-Chest) எடுக்கும்போது நமது உடல் பகுதிகள் 0.1 millisievert (mSv)-என்கின்ற அளவு கதிர்வீச்சுக்கு உட்படுகின்றன. அதே ஒரு மார்பக சி.டி. ஸ்கேன் (CT-Chest) எடுக்கும்போது, உடல் பகுதிகள் 7mSv-என்கின்ற அளவு கதிர்வீச்சுக்கு உட்படுகின்றன. ஏறக்குறைய 70-மடங்கு அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.
சி.டி. ஸ்கேனர் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகள் குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய சூழலில், கரோனா நோயாளர்கள் பலருக்குத் தொடர்ச்சியாக சி.டி. ஸ்கேன் எடுக்கும்போது, கதிரியக்க மருத்துவர் - பணியாளர்க்கு நோய்த் தொற்று வருவதற்கான சாத்தியம் அதிகம். இதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, கரோனா கொள்ளை நோய்க் காலத்தில் சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்பொழுது தன்னிச்சையாகச் செயல்படாதீர்கள். பரிசோதனையின் அவசியம், அப்பரிசோதனை உங்களின் உடல்நலனை மேம்படுத்துவதற்கான சிகிச்சையை அளிக்க எந்த அளவிற்குப் பயனுடையதாக இருக்கும், அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் என்ன என்பன போன்ற தகவல்களை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து, பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
கட்டுரையாளர்: மருத்துவர் பா.இரா.செந்தில்குமார்,
தேசிய சித்த மருத்துவ நிறுவன மருத்துவர்,
தொடர்புக்கு: senthilkumarbr@gmail.com.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago