கரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பாக காற்றுவாக்கில் பல்வேறு தகவல்கள் வருகின்றன. அரசு மருத்துவமனை தொடர்பாக ஒருவித தவறான பிம்பம் பெரும்பாலானோர் மனதில் இருக்கிறது. ஆனால், கரோனா தொற்றுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் தரமான சிகிச்சை குறித்து, முன்னாள் பத்திரிகையாளரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயற்பாட்டாளருமான மு. ஜெய பிரபாகர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், "கரோனா தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 06.05.2021 அன்று சேர்ந்தேன். முதலில் சி.டி.ஸ்கேன் மூலம் நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இரண்டாவது மாடியில் எனக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு தளத்தில் 40 நோயாளிகள் இருந்தார்கள். உடன் உதவியாளர் இருக்கலாம். எனது அறையில் இருந்து பார்த்தால் கீழே நடக்கும் அனைத்தும் தெரியும். சிகிச்சைக்கு வருவோர், சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர், அவசர ஊர்தி வந்து செல்வது என அனைத்தும் தெரியும்.
உணவும் மருந்தும்
அதிகாலை 5 மணிக்கு ரத்தம் எடுத்துப் பரிசோதிப்பது அன்றாட நிகழ்வு. தொடர்ந்து, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும். காலை 7 மணி அளவில் கபசுரக் குடிநீர் வந்த தகவல் தெரிவிக்கப்படும். நாமே சென்று எடுத்துக்கொள்ள வேண்டும். 7.30 முதல் 8 மணிக்குள் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உதவியாளருக்கு மருத்துவமனை உணவு வழங்கப்படாது.
காலை உணவு இட்லி, வடை / பொங்கல், வடை / உப்புமா, வடை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று. 9 மணிக்கு மாத்திரை வந்துவிடும். 9.30 மணிக்கு மீண்டும் ரத்த அழுத்தம் பார்த்து, ட்ரிப் மூலம் சிகிச்சை தொடரும். ட்ரிப் முடிவதற்குள் 3 ஊசி செலுத்திவிடுகின்றனர்.
11 மணிக்கு சுக்கு மல்லி காப்பி. பிற்பகல் 12.30 முதல் 1 மணிக்கு பிற்பகல் உணவு. வெள்ளரிக்காய், கேரட், முட்டை கோஸ் அல்லது வேறு காய். சோறு, சாம்பார், ரசம், கஞ்சி ஆகியவற்றுடன் அவசியம் அவித்த முட்டையும் இருக்கும். திடகாத்திரமான உணவு.
மாலை மீண்டும் கபசுரக் குடிநீர் வரும். மாலை 6.30 முதல் 7 மணிக்கும் இரவு உணவு வந்துவிடும். உணவு, மருந்துகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. அரசு மருத்துவமனை என்றாலே மிக மோசம் என்ற பிம்பமே பெரும்பாலானோர் மனதில் இருக்கிறது.
ஆனால், அரசு மருத்துவமனையின் சுகாதாரம் முதல் சிகிச்சை வரை அனைத்தும் சிறப்பான ஏற்பாடுகள் என்பதைப் புரிந்துகொள்ளவே இதைக் கூறுகிறேன். ஒரு நாளுக்கு ஒரு நபருக்கான உணவுக்கான செலவு குறைந்தபட்சம் ரூ.150க்குக் குறையாது.
மாத்திரை, ஊசி மருந்துகள், மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் சேவை ஆகியவற்றை எல்லாம் கணக்கிட்டால் குறைந்தது ரூ.5,000 தினசரி கட்டணமாக இருக்கும். இவற்றை அரசு சிறப்பாக வழங்கிவருகிறது. தமிழகம் முழுவதும் எவ்வளவு செலவு ஆகும்? வெளியில் இருந்து பேசுபவர்கள் அரசு செயல்படவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்யலாம். ஆனால், உண்மை நிலை வேறு.
மருத்துவப் பணியாளர்களின் அக்கறை
மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் மிகப் பெரிய தியாக உணர்வோடு, கால நேரம் பாராது அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதால்தான் உயிரிழப்புகள் குறைவாக இருக்கின்றன. தமிழக அரசு நிர்வாகம், சுகாதாரத் துறை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு நோயாளிகளைப் பாதுகாக்க பெருமுயற்சி எடுத்துவருகின்றன.
புதிய நோயாளிகளுக்கு இடம் போதவில்லை என்ற நிலையில் தற்காலிக கூடாரம் அமைத்துக் குறைந்தது 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றுவந்த நாட்களில் 10 கூடாரங்கள் அமைத்து சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
தற்காலிக கூடாரம் ஆக்சிஜன் மிஷின் வசதியோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Oxygen Concentrator எனும் மிஷின் ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது குறைந்தது ஒராண்டுக்குச் சிறப்பாகச் செயல்படுமாம். இந்த மிஷின் விலை ரூ.50,000 இருக்கும். நாம் தனியாக வாங்கினால் ரூ.1.50 லட்சம் வரை ஆகும். இதுபோன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கியவைதான் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும்" என்றார்.
நாம் செய்ய வேண்டியது
1. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது
2. அவசியம் ஏற்படின் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளி விட்டுச் சென்று வருவது.
3. தொற்று அறிகுறி தென்பட்டால், உடனே தொற்று பரிசோதனை செய்துகொள்வது.
4. தொற்று உறுதியானால் மருத்துவர் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.
5. 50 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தொகுப்பு: ஆதி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago