கரோனா இரண்டாம் அலையின் பரவல் வேகம் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தருகிறது. மறுபக்கம் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும் நோய் முற்றியும் இறக்கிறவர்களின் எண்ணிக்கை உயிரச்சத்தை ஏற்படுத்துகிறது. கரோனா தொற்றுக்கு ஆளானோரில் கணிசமானோர் மாரடைப்பு ஏற்பட்டோ இதயக் கோளாறாலோ இறப்பது, நாம் அதிக கவனத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நல்ல ஆரோக்கியத்துடன் உடலைப் பராமரிக்கிறவர்கள்கூட கரோனா தொற்றால் மோசமான பாதிப்பை அடைகிறார்கள்.
ஏன் இப்படி ஏற்படுகிறது, இதை எப்படித் தவிர்க்கலாம் என்பதை மருத்துவ நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
கரோனா வைரஸ் இதயத்தில் அடைப்பை ஏற்படுத்துமா?
டாக்டர் வெங்கடேஷ், சிறுநீரக சிறப்பு மருத்துவர், சென்னை
கரோனா தொற்று முற்றிய நிலையில் மிகச் சிலருக்கு ரத்தக் கட்டிகளை ஏற்படுத்துகிறது. இதனால், இதயத்திலோ உடலின் பிற பாகங்களில் உள்ள ரத்த நாளங்களிலோ அடைப்பு ஏற்படலாம். சிலருக்கு மூளையில் ரத்தக் கட்டி, கால் வீக்கம் போன்றவையும் ஏற்படக்கூடும். இதற்கு வயது வேறுபாடெல்லாம் இல்லை. எந்த வயதினரும் பாதிக்கப்படலாம்.
கரோனா தொற்றின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றால் நோயின் தீவிரத்தைப் பொறுத்து அவர்களுக்கு ரத்த உறைவைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் அளிக்கப்படும். ஆனால், பலரும் அறியாமையால் மிகத் தாமதமாக மருத்துவமனைக்குச் செல்லும்போது நிலைமை கைமீறிப் போய்விடுகிறது. ஆனால், அறிகுறிகளை வைத்தே சிலவற்றை முன்னுணர்ந்து செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்க முடியும்.
இருமல், சளி, காய்ச்சல் போன்றவை மிதமாக இருந்தால் சிக்கல் இல்லை. இவை அதிகரிப்பதுடன் பேசக்கூட முடியாமல் போவது, பேசினாலே மூச்சிரைப்பது, வீட்டு வேலை செய்தால்கூட மயக்கம் வருவது, சிறிது நேரம் நடந்தாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவது போன்றவை நோய் தீவிரமடைவதற்கான அறிகுறிகள். சிலருக்கு எவ்வித அறிகுறியும் இருக்காது. ஆனால் நுரையீரல் அழற்சி, இதய அடைப்பு போன்றவை ஏற்பட்டு மிகத் தீவிர நிலைக்குச் சென்றுவிடுவார்கள். அதனால், வயதானவர்கள் பசியில்லை என்று உணவைத் தவிர்த்தாலோ சோர்ந்து சோர்ந்து படுத்தாலோ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவும் கரோனா பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கக்கூடும்.
அடுத்ததாக உடலில் ஆக்சிஜன் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஆறு நிமிட நடைக்குப் பிறகு ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ கருவியின் உதவியோடு ஆக்சிஜன் அளவைப் பரிசோதிக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு குறைந்தாலும் நோய் முற்றுகிறது என்று பொருள். உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். தடுப்பூசியால் நிகழும் மரணங்கள் மிகக் குறைவு. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 13 கோடிப் பேரில் 180 பேர் இறந்திருக்கின்றனர். இவர்களும்கூட தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்பட்டுத்தான் இறந்தார்கள் என்பது இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதனால், நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், தீவிரத்தன்மையைக் குறைக்கவும் தடுப்பூசி அவசியம்.
எதனால் தொற்று தீவிரமடைகிறது, நோய் முற்றாமல் எப்படித் தவிர்க்கலாம்?
டாக்டர் சே. சரவணகுமார், குழந்தைகள் நல நிபுணர், வாலாஜாபேட்டை
கரோனா தொற்றால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது இன்னும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் நோயின் தீவிரத்தன்மை அப்படி யான பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும்.
நகர்ப்புறங்களில் தற்போது பலருக்கும் உடலுழைப்பு குறைந்துவிட்டது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என எதையும் செய்வதில்லை. ஆனால், கொழுப்புச்சத்து நிறைந்த சக்கை உணவையும் துரித உணவையும் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றமும், நோய்த்தொற்று முற்றுவதற்குக் காரணம்.
பொதுவாகத் தொற்றுநோய்களைவிட உடல் பருமன், மிகை ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றாநோய்களை நாம் கண்டுகொள்வதில்லை. ஆனால், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நோய்ப்பரவல் தீவிரமடைய அதுவே காரணமாக அமைந்து விட்டது.
அதனால், தினமும் குறைந்தது 30 முதல் 40 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்ய வேண்டும். சக்கை உணவையும் வெளி உணவையும் குறைத்து சத்தான சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும். துணைநோய் உள்ளவர்கள் கூடுமானவரை அவற்றைக் கட்டுக்குள் வைப்பது அவசியம். ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வதுகொள்வதன்மூலம் அறிகுறிகள் இல்லாத நோய்களையும் இனங்கண்டறிய முடியும்.
கரோனா தொற்று உறுதியானதுமே மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். லேசான தொற்றாக இருந்தால் மருத்துவரின் வழிகாட்டுதல்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சல் தொடர்ந்தால் அதற்கேற்ப மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மிதமான, தீவிர தொற்றாளர்கள் அவரவர் நிலைக்கு ஏற்ப மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். நாள்பட்ட ஆஸ்துமா, மிகை ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ளவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. குணமடைந்து வீடு திரும்பிய பிறகும்கூட மருத்துவர் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடுவது?
மருத்துவர் சுசி கண்ணம்மா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்
காய்ச்சல் இருப்பவர்கள் கபசுரக் குடிநீர் அல்லது நிலவேம்புக் குடிநீரை வாரத்தில் இரண்டு நாட்கள் குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீர் வைரஸ் தொற்றுக்கு எதிராக வினையாற்றும் என சென்னை கிங் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐந்து கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் இட்டு அதை 50 மி.லி.யாகக் குறுக்கிக் குடிக்க வேண்டும். சிறியவர்களுக்கு அவர்கள் வயதை இரண்டால் பெருக்கி, அந்த அளவுக்கு கஷாயத்தைத் தர வேண்டும். வெறும் வயிற்றில் குடிக்காமல் காலை உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்துக் குடிக்க வேண்டும்.
வாய்க்கசப்பு இருக்கிறவர்கள் தண்ணீரில் சீரகத்தையும் வெந்தயத்தையும் போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். சிலருக்கு வாசனையை உணர முடியாத நிலை ஏற்படும். அப்போது சிறிது ஓமத்தையும் சிட்டிகை கற்பூரத்தையும் ஒரு காடா துணியில் போட்டுக் கட்டி அடிக்கடி முகர்ந்து பார்த்தால் வாசனை உணர்வு திரும்பும். சிலருக்குச் சுவை உணர்வு இருக்காது. அவர்கள் இஞ்சித் துவையல் அல்லது இஞ்சியைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் சுவை உணர்வு திரும்பும். வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.
தினமும் மூன்று முறை ஆவி பிடிப்பது நல்லது. தண்ணீரில் நொச்சி இலை அல்லது விரலி மஞ்சள், வேப்பிலை போட்டு ஆவி பிடிக்கலாம். உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க பிராணயாமம், யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்யலாம். லிங்க முத்திரை நல்ல பலனைத் தருவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago