நண்பன் முருகன் ஒருநாள் திடீரென்று கைபேசியில் அழைத்திருந்தார். “என் கூட இருக்கிற கணேசனுக்கு முடியலை... கொஞ்சம் கொடுக்கிறேன் கேளுங்க..."
“சார் கொஞ்ச நாளா தலைவலி இருக்கு. இன்னிக்கு சாரோடு மதுரைக்குப் போகணும். ஏதாவது மாத்திரை சொல்லுங்க” என்றார்.
சில வலி நிவாரணிகளைப் பரிந்துரைத்து, “தற்சமயம் இதைப் பயன்படுத்துங்க. மதுரையிலிருந்து வந்த பிறகு என்னிடம் வாங்க. என்ன பிரச்சினைன்னு பார்த்துடலாம்” என்று விடைகொடுத்தேன்.
தீராத தலைவலி
சில மாதங்கள் ஓடின. மீண்டும் கணேசனிடமிருந்து அழைப்பு. “அதே தலைவலி... பழைய மாத்திரைகள் போட்டும் கேட்கவில்லை. வேறு மாத்திரை வேண்டும்” என்று.
“தலைவலியுடன் வேறு என்னென்ன தொந்தரவுகள் இருக்கின்றன? உடனே கிளினிக்குக்கு வாங்க”
“இந்த வாரம் கொஞ்சம் வேலை இருக்கு... அடுத்த வாரம் பாக்கலாமா, டாக்டர்?''
“தலைவலி ஏற்படப் பல காரணங்கள் இருக்கு. நீங்களும் பல மாசமா கஷ்டப் படுறீங்க. தேவைப்பட்டால் தலைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கலாம்”
“அய்யோ ஸ்கேனா? வேண்டாம் டாக்டர்... வீட்டில் சொன்னால் பயப்படு வாங்க. கொஞ்சம் தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகிடும்”
இந்த முறை, அவரைக் கண்டிப்பாக நேரில் வந்து பார்க்குமாறு கூறினேன். இல்லையென்றால் அருகிலேயே மருத்துவர் யாரிடமாவது காண்பிக்கச் சொன்னேன். ஆனால், இரண்டையுமே அவர் செய்யவில்லை.
அலட்சியப்படுத்திய அறிகுறிகள்
இரண்டு மாதங்கள் கழித்து நண்பர் முருகனோடு அவரே வந்தார். ஆள் பாதியாக இளைத்திருந்தார். முகம் வெளுத்து, விரக்தியுடன் இருந்தார்.
கையில் பெரிய மருத்துவமனை ஒன்றின் பெயர் அச்சிட்ட பை. அதைத் திறந்தால் நிறைய பைல்கள். “திடீர்னு ரொம்ப முடியலைன்னு போய்ப் பார்த்தோம். கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்” என்றார் நண்பர்.
அறிக்கைகளைப் புரட்டினேன்; அவருக்கு மூளையில் புற்றுநோய்க்கட்டி இருந்தது (High Grade Glioma). தலைவலிக்கு அதுதான் காரணம். அதனால் ஏற்பட்ட மயக்கத்தைத்தான் (Drowsy) உறக்கம் வருகிறது என்று சொல்லியிருக்கிறார்.
காலையில் எழும்போது வாந்தி எடுத்திருக்கிறார். அதையும் யாரிடமும் சொல்லாமல் பித்த வாந்தி என்று இஞ்சி சாப்பிட்டுச் சரிசெய்ய முனைந்திருக்கிறார். அவருக்கு நடப்பதில் பிரச்சினை, பார்வை பிரச்சினை போன்றவைகூட இருந்திருக்கின்றன. அவரைப் பரிசோதனை செய்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பேசினேன்.
அறுவை சிகிச்சைசெய்து அகற்ற முடியாத இடத்தில் வளர்ந்து பெரிதாக இருந்தது புற்றுநோய்க்கட்டி. இதனால், அவருக்குக் கதிர்வீச்சு சிகிச்சையே செய்ய முடிந்தது. அடுத்த ஒரு மாதத்தில் அவர் இறந்துபோனார்.
தலைவலி-காலையில் வாந்தி-மயக்கம் என அனைத்து அறிகுறிகளை யும் நீண்ட காலமாக அவர் அலட்சியம் செய்துவிட்டார். ஒருவருக்குத் தலைவலி ஏற்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அதற்குரிய நோயைக் கண்டறிவதை, சிகிச்சை தருவதை மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டும்.
கவனம் தேவை
ஆல்கஹால், சிவப்பு ஒயின், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, தூக்க மின்மை, உணவைத் தவிர்ப்பது, மனஅழுத்தம் ஆகியவை தலைவலியை அதிகரிக்கலாம்.
வீட்டில் அழைப்புமணி அடித்தால், கதவைத் தட்டினால் எப்படித் திறந்து பார்ப்போமோ அதேபோல் உடல் ஏற்படுத்தும் அறிகுறிகளை மறக்காமல் மருத்துவரிடம் கூற வேண்டும். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்த நோய்க்கான சிகிச்சையையும் தள்ளிப்போடக் கூடாது. அறிகுறிகளை அலட்சியம் செய்யவும் கூடாது.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago