[ஏப்ரல் 4 – 10] - உலக சுகாதார பணியாளர்கள் வாரம்
சமீபத்தில் உணவுவிடுதியில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது நண்பரான உணவுவிடுதியின் முதலாளி பார்த்துவிட்டார். எழுந்து அவர் கைகொடுக்கத் தயாரானதும், வேகமாக பின் வாங்கினேன்.
“கரோனா காலத்தில் கைகொடுக்கலாமா? கரோனா மீண்டும் அதிகரித்துவருவதாக சொல்கி றார்கள். சற்று கவனமாக இருப்பது நல்லதல்லவா. நாலு பேர் வந்து செல்லும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டாமா. முகக் கவசம் அணியுங்கள். யாரிடமும் கை குலுக்காதீர்கள்” என்று அவரிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர், “அட போங்க சார். கரோனாவெல்லாம் நம்மை ஒண்ணும் செய்யாது. ஆண்டவன் மேல் பாரத்தைப் போடுங்க. சும்மா எல்லாத்துக்கும் பயப்படாதீங்க” என்றார்.
சாலையைக் கடக்கும்போது ஆண்டவன் பார்த்துப்பான் என்று கவனக் குறைவாகக் கடக்க முடியுமா? அந்த மாதிரியான கவனம் செலுத்துதலையே அரசும் மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். இந்தப் பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பதற்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ முன்களப் பணியாளர்களின் தன்னலமற்ற சேவையின் / உழைப்பின் பலனை, நம்முடைய அலட்சியம் நீர்த்துப் போகச் செய்துவிடும்.
கரோனாவுக்கு எதிரான போர்
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் கரோனாவை இந்த அளவுக்காவது கட்டுப்படுத்தி இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள்தான். கரோனாவைக் கட்டுக்குள் வைக்க இவர்கள் மேற்கொண்ட பணிகளுக்கு ஈடு இணை இல்லை.
உலகே வீடடங்கிக் கிடந்தபோது வீட்டையும் குடும்பத்தினரையும் மறந்து மருத்துவமனைக்கும் களத்துக்கும் சென்று அவர்கள் கரோனா சிகிச்சைப் பணியையும், கரோனா தடுப்புப் பணியாற்றியதையும் யாரும் மறந்துவிட முடியாது. அனைத்து அலுவலகங்களும் நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தபோது, மருத்துவமனைகள் மட்டும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன.
ஆபத்திலும் தொடர்ந்த பணி
மருத்துவமனை வார்டில் இருக்கும் ஆறு மணிநேரமும் அவர்களால் எதுவும் சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. இயற்கை உபாதைகளுக்குச் செல்ல முடியாது. பணி முடிந்து தினமும் வீட்டுக்குச் செல்லவும் முடியாது. சுழற்சி முறையில் பணி செய்யும் ஒருவாரமும் வெளியே விடுதியில்தான் தங்க வேண்டும். குழந்தைகளைப் பார்க்க முடியாது.
உடலில் அணிந்திருக்கும் பிரத்தியேக பாதுகாப்பு உடைக்குள் ஆறு மணிநேரமும் இருப்பது எளிதல்ல. இதற்கு மேலாக ஒரு வாரமோ பத்து நாட்களோ சுழற்சி முறைப் பணி முடிந்தாலும், உடனே வீட்டுக்குச் செல்ல முடியாது. பத்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா பரிசோதனை எடுத்து ‘நெகட்டிவ்’ வந்தால் மட்டுமே வீட்டுக்குச் செல்ல முடியும் - கரோனா வார்டில் பணிபுரிந்த ஒரு செவிலியரின் அனுபவம் இது.
இன்னொரு பணியாளர் சொன்ன செய்தி வருத்தம் தருவதாக இருந்தது. பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு அக்கம்பக்கம் இருப்பவர்கள், ஏதோ பார்க்கக் கூடாதவர்களைப் பார்ப்பதுபோல் பார்த்தார்களாம். ஓடி ஒளிந்தார்களாம். பார்த்தாலே கரோனா வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுடைய கண்களில் தெரியுமாம்.
என்னதான் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டாலும் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்கூட தொற்று ஏற்படுவதுண்டு. அப்போதெல்லாம் இவர்களும் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். சிகிச்சை முடிந்து தொடர்ந்து மருத்துவ பணி செய்வார்கள்.
சிலநேரம் மருத்துவர்களும் செவிலியர்களும் இதர முன் களப்பணியாளர்களும்கூட கரோனாவுக்குப் பலியாகியிருக்கிறார்கள். இந்த அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் அவர்கள் தொய்வில்லாது பணியாற்றினார்கள்.
தடுப்பூசியும் அறிவியல் வளர்ச்சியும்
தடுப்பூசியின் மகத்துவம் இப்போது புரிகிறது. ஏனென்றால் கடந்த ஓராண்டாக நிறையக் கஷ்டங்களைப் பலரும் அனுபவித்துவிட்டோம். யாராவது தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மாட்டார்களா என்று நினைத்திருந்த வேளையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. பெரியம்மை போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? இன்று நாம் நிம்மதியாக இருப்பதற்குக் காரணம் தடுப்பூசிதான் என்பதை உணர்ந்து கரோனாவுக்குத் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.
இப்போதும் பலவகை நோய்களுக்கு எதிராகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சில நேரம் காய்ச்சல் வரலாம். ‘பிள்ளைக்கு ஒரு வேளை காய்ச்சல் வந்தாலும் வரலாம். அப்படி வந்தால் பயப்படத் தேவையில்லை. பாராசிட்டமால் கொடுங்கள்’ என்று தடுப்பூசி போட்டுவிட்டு, பெரும்பாலும் மருத்துவரே சொல்லி அனுப்புவார். எனவே ஆதாரமற்ற வாட்ஸ்அப் செய்திகளை – அரைகுறையாகப் புரிந்துகொண்டு எல்லோருக்கும் ‘பார்வார்ட்’ செய்ய வேண்டாம்.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர் தொடர்புக்கு: veera.opt@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
27 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago