மழைக்காலத்தில் ஏற்படுகிற மற்றொரு முக்கியமான நோய் மலேரியா. இது மிகப் பழமையான நோய்தான் என்றாலும், சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா போன்ற நாடுகளில் மலேரியாவை இன்னும் அடியோடு ஒழிக்க முடியவில்லை.
காரணம் என்ன?
‘பிளாஸ்மோடியம்' என்னும் ஒட்டுண்ணிக் கிருமிகள்தான் மலேரியாவுக்கு மூலக் காரணம். இந்தக் கிருமிகளில் பால்சிபேரம், மலேரியே, ஒவேல், விவாக்ஸ் என்று மொத்தம் 4 வகைகள் உள்ளன. இவை பெண் அனாபிலிஸ் கொசுக்களிடம் வசிக்கின்றன. இக்கொசுக்கள், நம்மை இரவு நேரத்தில் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். இக்கிருமிகள் ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.
அறிகுறிகள்
இந்தக் காய்ச்சலில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் நோயாளிக்குக் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு உண்டாகும். இதைத் தொடர்ந்து குளிர்க்காய்ச்சல் ஏற்படும். இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகி உடல் அனலாகக் கொதிக்கும். மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ் போலக் குளிர்ந்துவிடும். பிறகு இதே காய்ச்சல் மறுநாளோ, ஒருநாள் விட்டு ஒருநாளோ, மீண்டும் அதே நேரத்தில் வரும்.
ஆபத்துகள் என்ன?
மலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாவிட்டால் பல ஆபத்துகள் வரும். அடிக்கடி மலேரியா வந்தால் ரத்தசோகை, மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால் உடல் தளர்ச்சி உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சிலருக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்குச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘கறுப்புத் தண்ணீர் காய்ச்சல்' (Black Water Fever) வரும். இந்த நோயின்போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு உண்டு.
என்ன பரிசோதனை?
1. ரத்த அணுக்களில் கிருமிப் பரிசோதனை (Peripheral smear study)
l இது மலேரியா கிருமிகளை நுண்ணோக்கியில் நேரடியாகப் பார்த்து நோயைக் கணிக்க உதவும் ஒரு பரிசோதனை.
l நோயாளியின் விரல் நுனியில் ரத்தம் எடுத்து, அதிலுள்ள அணுக்கள் பரிசோதிக்கப்படும்.
l சிவப்பு அணுக்களுக்குள் மலேரியா கிருமிகள் இருப்பது காணப்பட்டால், மலேரியா நோய் என்று உறுதி செய்யப்படும்.
l காய்ச்சல் இருக்கும்போது நோயாளியின் ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்தால், இதன் முடிவு மிகச் சரியாக இருக்கும்.
l பரிசோதனை முடிவு உடனே தெரிந்துவிடும்.
l நோயாளியின் அறிகுறிகள் மலேரியாவுக்குச் சாதகமாக இருந்து, முதல் முறையாக இப்பரிசோதனையைச் செய்யும்போது அதன் முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்துவிட்டால், சில நாள் இடைவெளியில் மறுபடியும் இதைச் செய்ய வேண்டும். காரணம், உடலில் கிருமிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், இது தவறான முடிவைக் காண்பித்துவிடும். கிருமிகளின் எண்ணிக்கை அதிகரித்ததும், சரியான முடிவைக் காட்டும்.
l அடுத்து, ரத்த அணுக்களின் வடிவம், அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பரிசோதித்து நோயாளிக்கு ரத்தசோகை உள்ளதா என அறியப்படும்.
l பொதுவாக இந்த நோயாளிக்கு ‘நார்மோசைடிக் ரத்தசோகை’காணப்படும்.
2. மலேரியா எதிர் அணுக்கள் பரிசோதனை (Rapid Card Test)
l மலேரியா கிருமிகளின் வகையை அறிந்து சிகிச்சை தரப்படுவதற்கு இப்பரிசோதனை உதவுகிறது.
l ஃபால்சிபாரம் கிருமிகள் சிவப்பணுக்களில் காணப்பட்டால், அவை ஹிஸ்டிடின் மிகுந்த புரதம் (Pf HRP 2) ஒன்றை வெளியிடும். இதைக் கணிக்கும் பரிசோதனை இது.
l மற்ற வகைக் கிருமிகள் காணப்படுமானால், ரத்தச் சிவப்பணுக்களில் லேக்டேட் டிஹைட்ரோஜினேஸ் (pLDH) எனும் ஆன்டிஜென் இருக்கும். இதைக் கண்டறிந்து, மற்ற வகைக் கிருமிகளின் பாதிப்பு உள்ளதா எனத் தெரிந்துகொள்ள முடியும்.
l நோயாளியின் விரல் நுனியில் ரத்தம் எடுத்து, பரிசோதிக்கப்படும்.
l முதல் முறையிலேயே பரிசோதனை முடிவைச் சரியாகத் தெரிவித்துவிடும்.
l 15 நிமிடங்களில் இதன் முடிவு தெரிந்துவிடும்.
l கிருமிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்கூட, இது சரியான முடிவைத் தரும்.
l நோய்க்குச் சிகிச்சை எடுத்து முடித்ததும் நோய் சரியாகிவிட்டதா என அறிய இந்தப் பரிசோதனையைச் செய்யக்கூடாது. காரணம், நோய் ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்கு இது பாசிட்டிவ் என்றுதான் முடிவைத் தரும். இன்னும் நோய்க்கிருமிகள் இருப்பதாகவே காண்பிக்கும். உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே, இரண்டு வாரங்களுக்குப் பிறகு இதைச் செய்தால் கிருமிகள் ஒழிந்திருக்கும். அப்போது ‘நெகட்டிவ்’என்று முடிவு வரும்.
3. ‘க்யூபிசி’பரிசோதனை (Quantitative Buffy Coat Test)
l இதுவும் மலேரியா கிருமிகளை நுண்ணோக்கியில் நேரடியாகப் பார்த்து நோயைக் கணிக்க உதவும் ஒரு பரிசோதனைதான்.
l மிக எளிய தொழில்நுட்பம் கொண்டது.
l கிருமிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்கூட, இது சரியான முடிவைத் தரும்.
l 15 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும்.
l ஒரே நேரத்தில் அதிக நோயாளிகளுக்கு இப்பரிசோதனையைச் செய்து சரியான முடிவை விரைவில் சொல்லிவிடலாம்.
4. ஆர்.டி. - பி.சி.ஆர். மற்றும் நெஸ்டெட் பி.சி.ஆர். பரிசோதனை (RT PCR மற்றும் Nested PCR)
l ரத்தத்தில் மலேரியா கிருமியின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.
l 100 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.
l மிக நவீனத் தொழில்நுட்பம் கொண்டது.
l நோய் ஆரம்பித்தவுடனேயே நோயை உறுதி செய்துவிடும். ஆனால், முடிவு தெரிய நாளாகும்.
l இதன் செலவு கொஞ்சம் அதிகம்தான்.
5. ரத்த அணுக்கள் மொத்தப் பரிசோதனை (Complete Blood Count Test - CBC)
l இதில் ஹீமோகுளோபின் அளவு குறைந்திருக்கும்.
l தட்டணுக்கள் குறைந்திருக்கும்.
l வெள்ளையணுக்கள் அதிகரித்திருக்கும்
l இ.எஸ்.ஆர். (ESR) அளவும் அதிகரித்திருக்கும்.
டெங்கு காய்ச்சல் பரிசோதனை: கூடுதல் விளக்கம்
சென்ற வாரம் இடம்பெற்ற டெங்கு காய்ச்சல் பரிசோதனை பற்றிய கட்டுரையில், எலிசா ஐ.ஜி.எம். எதிர் அணுக்கள் பரிசோதனையை நோய் ஏற்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகுகூட செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய நெறிமுறைப்படி நோய் ஆரம்பித்த ஐந்தாம் நாளிலேயே, இதை செய்து கொள்ளலாம். இது ஒருமுறை ‘பாசிட்டிவ்’ என்று வந்துவிட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்கு ‘பாசிட்டிவ்’ என்றுதான் காண்பிக்கும். அதனால், இந்தக் கால இடைவெளிக்குள் மீண்டும் பரிசோதித்துக் கொள்பவர்கள் மீண்டும் டெங்கு வந்துவிட்டதோ எனப் பயப்படத் தேவையில்லை.
(அடுத்த வாரம்: டைபாய்டு காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago