புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.
மருத்துவர் யார்?
‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது' என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை' என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.
மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட.
வேர், மூலிகை
அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்' என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.
"வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே"- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கனிம உருமாற்றம்
சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம - ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.
பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.
உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி
கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மருந்துகள், நானோ துகள்களாக நுண்மையடைந்து மருந்தாக மாறுவதைப் பல மருத்துவ நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் (Standardization of Metal-Based Herbal Medicines, American Journal of Infectious Diseases 5 (3): 200-206, 2009 ISSN 1553-6203 © 2009 Science Publications Corresponding Author: Arun Sudha, Indian Institute of Technology Madras, Chennai- 600 036), பெரும்பாலான மூலிகைகளில் உள்ள கனிமங்கள் உடலைப் பாதிக்காத ஆக்சைடு மற்றும் சல்பைடு வடிவத்தில் மாறுவதாகவும், நேரடியாகக் கனிமங்களை வைத்தே செய்யப்படும் மருந்துகளும்கூட நானோதுகள்களைப் போன்ற நுண்ணிய அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மெர்குரி (பாதரசம்), கந்தகத்தை வைத்துச் செய்யப்படும் மிக முக்கியமான சித்த மருந்தான ரசகந்தி மெழுகு குறித்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் உயரிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆய்வு நிறுவனமும், நவீன ஆய்வு வழிகாட்டுதலின்படி ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, ரசகந்தியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் சரஸ்வதி நடத்திய ஓர் ஆய்வில், பாதரசத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்து மிகப் பாதுகாப்பானது என நிறுவப்பட்டுள்ளது (அந்த முடிவுகள் இன்னும் நூலாக வெளியிடப்படாமல், அரசு ஆவணமாகவே உள்ளன).
வியந்த உலகம்
மறைந்த நவீன மருத்துவப் பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம், இதே ரசகந்தி மெழுகைக் கொண்டுதான் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகுவதையும் பற்றி நீண்ட ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வு JAPI எனும் மருத்துவ இதழில் வெளியாகி, உலக மருத்துவத்தின் கண்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பப்பட்டன.
இதைத் தாண்டி கனிம மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள்தாம் புற்றுநோய் முதலான சவாலான நோய்களுக்கான மிக முக்கிய சித்த மருந்துகள். Acute promyelocytic leukemia எனும் புற்றுநோய்க்கு இன்றளவும் பெரும் நச்சாகக் கருதப்படும் பாடாணங்களை (Arsenic trioxide) கொண்டு செய்யப்படும் சீன மருந்துகளின் பயன், உலகளவில் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த British Journal of Haematology எனும் மருத்துவ இதழில், இதன் பயன் குறித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் (Mathews V, Chandy M, Srivastava A. Arsenic trioxide in the management of acute promyelocytic leukaemia. Natl Med J India. 2001;14(4):215-22) கட்டுரையில் கிடைக்கின்றன.
தேவையற்ற குழப்பம்
இன்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அரசு பதிவுபெற்ற சித்த மருந்துகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் (AYUSH- Good Manufacturing Practice guidelines) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே கனிமங்களின் அளவு, வடிவம், செய்கை, நச்சற்ற பாதுகாப்பு நிலை போன்றவை இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை (Quality assurance) மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய Pharmacovigilance முறை மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் எதைப் பற்றியும் அறியாமல், சர்ச்சைக்குரிய சம்பவத்தை விவரிக்கும் செய்தி போலியாய் எச்சரிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் தொனியிலும், சித்த மருத்துவப் பயனாளர்களைக் குழப்பத்தில் தள்ளும் வகையிலும் உள்ளது.
எத்தகைய மாற்றம் தேவை?
அறம் சார்ந்து சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சித்த மருத்துவர்களால் மக்களுக்கு, மருத்துவப் பயனாளிகளுக்கு எவ்விதத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அதற்குச் சித்த மருத்துவம் தொடர்பாக உலகத் தரத்துடன் Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்பதுதான் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நினைக்கும் பெரும்பாலோரின் நிலைப்பாடும் முயற்சிகளும்.
ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும் நவீன காலச் சித்த மருத்துவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால், அதேநேரம் நம் நாட்டு மருத்துவ முறைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் அவசரமாக இன்றைக்கு வலிந்து வலியுறுத்தப்படும் தரநிர்ணயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தரநிர்ணயங்கள் மக்கள் நலனை மையப்படுத்தியவை அல்ல. பெரும் வணிகச் சந்தையை மையப்படுத்தியவை என்ற உண்மையையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே மரபு மருத்துவ முறைகள் முக்கியத்துவம் பெற்றுவரும் பின்னணியிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.
நமது மரபு மருத்துவ முறைகள் சார்ந்து Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்த அரசிடம் வலியுறுத்துவது அவசியம். அப்படியல்லாமல், ஒரு சில போலி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறை மீது பழிசுமத்துவதும் அந்தத் துறையையே பலியிடச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்? காலம்காலமாகப் புடம் போடப்பட்டுவரும் சித்த மருத்துவத் தத்துவங்களையும், நெடுங்காலமாகப் பயனில் உள்ள ஆவணங்களையும், அவசரஅவசரமாகப் புறந்தள்ளி, நவீன மருத்துவம் காட்டும் மாற்றத்துக்குரிய ஆய்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு பயன்பட்டுவரும் சித்த மருத்துவத்தை வீணாகத் தூற்றுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago