வைரஸ், ஓர் உயிரினத்தின் உடலிலுள்ள செல்களுக்குள் நுழைந்து தன்னைப் போன்ற பல லட்சம் பிரதிகளை உருவாக்கும். பின் மற்றொரு உயிரினத்தின் உடலுக்குப் பரவி அங்கும் பெருகும். இப்படிப் பரவிய பிறகு உருவாகும் வைரஸின் பிரதிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அதாவது புதிய வைரஸின் மரபணு பழைய வைரஸைப் போலவே அச்சு அசலாக 100% இருக்காது. சிறு, சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்த மாற்றத்தைத்தான் வைரஸ் மரபணுப் பிறழ்வு என்கிறோம்.
வைரஸ் மரபணுவில் மாற்றம் ஏற்படுவது புதிதல்ல. மரபுத் திரிபு என்பது அவற்றின் இயல்பு. மரபணுவில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம். அதிக மாற்றங்களால் பிரிட்டனில் உருவான வேற்றுருவ வைரஸ் போலவும் மாறலாம். இந்த மரபணு மாற்றத்தால், அவை கட்டுப்படுத்தும் புரதக்கூறுகளில் மாற்றம் ஏற்படும்.
மாற்றம் வைரஸின் இயல்பே
மரபணுப் பிறழ்வு என்பது வைரஸ்களில் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். டி.என்.ஏ. வைரஸ்களைவிட ஆர்.என்.ஏ. வைரஸ்கள் இந்த பிறழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும். அதிலும், ஒரு சுருள் கொண்ட ஆர்.என்.ஏ. வைரஸ்களில் இரு சுருள் கொண்ட ஆர்.என்.ஏ.வைரஸ்களைவிட அதிகமான பிறழ்வுகள் ஏற்படும்.
சில நாடுகளில் மட்டுமல்ல, உலகில் எந்தெந்த நாடுகளில் நாவல் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதோ அங்கெல்லாம் மரபணுப் பிறழ்வு ஏற்பட்டு மாறிக்கொண்டே இருக்கிறது, இந்தியா உட்பட! இப்படி கோவிட்-19இல் ஏற்பட்ட மாற்றங்கள் பல ஆயிரங்களை எப்போதோ எட்டிவிட்டன.
ஆனால், அதற்கான முறையான மரபணுப் பகுப்பாய்வை அனைத்து நாடுகளும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. அதனால்தான் புதிய மாறுதல்களைக் கண்டுபிடிப்பதில் தாமதமும் சிரமும் ஏற்படுகிறது.
கோவிட்-19 பிறழ்வுகள்
கோவிட்-19 வைரஸின் கூர்ப்புரத மரபணுவில் (Spike protein gene) மட்டும் இன்றுவரை சுமார் 4,000 மரபணுப் பிறழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. இங்கிலாந்தில் வேற்றுருவ கரோனா வைரஸில் (Lineage B.1.1.7) 23 மரபணுப் பிறழ்வுகள் ஏற்பட்டதுடன், அதன் நீட்சியான கூர்ப்புரத மரபணுவிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு மாற்றம் ஏற்படும்போது, நோய்த் தொற்று ஏற்படுவதிலும் மாற்றம் நிகழும். வைரஸ் பரவுதல், நோயின் தன்மை, பாதிப்பு ஆகியவற்றிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்தியாவில் 19 வகையான நாவல் கரோனா வைரஸ் வேற்றுருவங்கள், மரபணுப் பிறழ்வுகளால் ஏற்பட்டுள்ளன. கிளாட் ஏ 2 ஏ, கிளேட் I / A3i, A2a கிளேட், N440K ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
மரபணு வரிசைப்படுத்துதல்
உலக சுகாதார நிறுவனம், 300 பேருக்குத் தொற்று ஏற்படும்போது அவர்களில் ஒருவருக்கு என்கிற முறையில் வைரஸின் மரபணுவைப் பகுப்பாய்வு செய்து வரிசைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஆனால், நமது நாட்டில் 3,000 பேருக்குத் தொற்று ஏற்படும்போதுதான் அதில் ஒருவருக்கு மரபணு வரிசைப்படுத்துதல் (Genomic Sequencing), எபிடோப் முன்கணிப்பு பகுப்பாய்வு நடைபெறுகிறது. பல நாடுகளில் இது நடைபெறுவதே இல்லை.
கோவிட்-19 வைரஸ் பகுப்பாய்வை எளிதில் பல்வேறு இடங்களில் செய்ய முடியாது. இந்திய சார்ஸ் கோவி- ஜீனோமிக்ஸ் கன்சார்டியம் (INSACOG) மூலமாக, புதிய பிரிட்டன் வைரஸைக் கண்டறிவதற்காக மரபணுப் பகுப்பாய்வு பரிசோதனை நமது நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
மரபணு வரிசைப்படுத்துதல் - பகுப்பாய்வு ஏன் முக்கியம்?
கரோனா தொற்றை ஒருவரிடம் கண்டறிந்துவிடுவது (Cases) எளிதாக இருக்கும்போதும், யார் மூலமாக நோய் பரவியது (Source) என்கிற ஆதாரம் தெளிவாகத் தெரியாத சந்தர்ப்பங்களில் வைரஸ் பரவலைக் கண்காணிக்க, மரபணு சோதனை முக்கியமானது. இந்தப் பரிசோதனை கோவிட் வைரஸின் பரிணாம வரலாற்றைத் தெரிந்துகொள்ள உதவும். மரபணு வரிசை முறை புதிய வைரஸ் எவ்வாறு உருவானது என்பதையும், எதிர்காலத்தில் அது எவ்வாறு மாறக்கூடும் என்பதைக் கணிக்கவும் உதவுகிறது.
இவற்றின் பூர்விகத்தை மறுகட்டமைப்பதன் மூலம், இவற்றின் பரவும் தன்மையையும் தொற்றுப் பெருங்கடத்துநர் எப்படி உருவாகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். கோவிட் போன்ற வைரஸ்கள் குறைந்த அளவோ மிகுந்த அளவோ மாறி வேகமான பரவல், புதிய பாதிப்புகள், தீவிரத்தன்மை ஆகியவற்றை அடைவதை உடனடியாக கண்டறிய இந்த நுட்பமான பரிசோதனை உதவும்.
பொதுச் சுகாதாரத் துறைக்கும், தடுப்பூசி / மருந்து தயாரிப்பவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் முக்கியமான ஆதாரங்களை இந்த பகுப்பாய்வுகளே தருகின்றன. சிகிச்சை முறைகளைத் தீர்மானிக்கவும் இது உதவுகிறது.
சான்கெர் முறை
தற்போது பயன்பாட்டில் உள்ள சன்கெர் வரிசை முறை (Sanger sequencing) பகுப்பாய்வைச் செய்யப் பல நாள் தேவைப்படும். தற்போது பயன்படுத்தப்படும் பகுப்பாய்வில், 100 முதல் 150 மரபணுத் தளங்களைத்தான் கண்டறிய முடியும். எடுத்துக்காட்டுக்கு, பிரிட்டனிலிருந்து வந்தவர்களுக்கு கோவிட் இருக்கிறது என்பதை உறுதிசெய்ய முடியும்போதும், ஒருவரைத் தாக்கியுள்ள கரோனா வைரஸ், இங்கிலாந்து வேற்றுருவ வகையா என்பதை உறுதிசெய்ய இவர்கள் பல நாள் காத்திருக்க வேண்டும்.
நானோபோர் தொழில்நுட்பம்
சிட்னியிலுள்ள கார்வன் கிர்பி நிறுவனத்தினர் சில மணி நேரத்துக்குள் மரபணுவை வரிசைப்படுத்துவதற்கான, அதிநவீன ஆக்ஸ்போர்டு நானோபோர் (Nanopore) தொழில்நுட்ப நெறிமுறையை வடிவமைத்துள்ளது. இது 'நானோபோர்' மரபணு வரிசை முறைத் தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் வரிசைப்படுத்துதல் - பகுப்பாய்வில், குறைந்த மரபணு தளங்களையே கண்டறிய முடியும். ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பத்தால் பகுப்பாய்வில், மொத்த மரபணுத் தளங்களையும் கண்டறிந்துவிடலாம்.
தற்போது பயன்படுத்தப்படும் பரிசோதனையைச் செய்யப் பல நாளாகும் நிலையில், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சில மணி நேரத்திலேயே கண்டறிந்துவிடலாம். இப்பரிசோதனை மிகவும் துல்லியமாகவும் சரியாகவும் இருக்கிறது. அது மட்டுமல்ல இந்தப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான கருவிகள் குறைந்த செலவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிதாக எடுத்துச்செல்லும் சிறிய கருவியாகவும் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை முறையும் தொழில்நுட்பமும் விரைவில் உலகம் முழுவதும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுரையாளர்: டாக்டர் முத்துச் செல்லக் குமார்,
மருத்துவப் பேராசிரியர்.
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago