ஆட்டுப்பால் என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர் காந்திதான். இயற்கை மருத்துவ முறைகளில் பெரும் ஈடுபாடுகொண்ட அவர் விரும்பி அருந்தியது ஆட்டுப்பால். பசு, எருமை மாடுகளின் பாலைக் காட்டிலும் ஆட்டுப் பால் கூடுதல் மருத்துவக் குணங்களுடன் குழந்தைகள், பெரியவர்களுக்குச் செரிக்கக்கூடிய பாலாக இருக்கிறது. ஆட்டுப்பால் தாய்ப்பாலை ஒத்திருப்பதால், மாடுகளின் பாலை அருந்துவதால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை ஆட்டுப்பால் அருந்துவதால் ஏற்படுவதில்லை.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் புரதமான ஆல்பா எஸ்1 கேசினின் அளவு மாட்டுப் பாலில், அதிகமாக இருப்பதாலேயே இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனால், ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ்2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. மாட்டுப் பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 93 விழுக்காடு குழந்தைகளில், ஆட்டுப்பால் அப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரையைச் செரிப்பதற்கு லாக்டேஸ் என்னும் நொதி மிகவும் இன்றியமையாதது. இந்த லாக்டேஸ் அளவு மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலுமாக இல்லாமல் இருப்பவர்கள் பாலைச் செரிக்க முடியாமல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் (lactose intolerant) அவதிப்படுகின்றனர். ஆட்டுப்பாலில் லாக்டோஸ் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை ஏற்படுவதில்லை.
ஆட்டுப்பால் நன்மைகள்
ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் மாட்டுப்பாலில் உள்ளதைவிட அளவில் மிதமாக இருப்பதால் எளிதில் ஜீரணமாக ஏதுவாகிறது. ஆட்டுப்பால் அருந்துவதால் இரும்புச் சத்து எளிதில் கிடைக்கிறது. தொடர்ந்து ஆட்டுப்பால் அருந்தி வந்தால் பசி, ஜீரணிக்கும் திறன் அதிகரிக்கிறது. நாள்பட்ட வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கு ஆட்டுப்பால் உதவி புரிகிறது. தொடர்ந்து ஆட்டுப்பால் அருந்தும் குழந்தைகள் நன்றாகத் தூங்குவதுடன், ஆரோக்கியமாக இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
குழந்தைகளுக்கு உதவும்
பச்சிளம் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற உபாதைகளை ஆட்டுப்பால் அருந்துவதால் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.
தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தும் உயிர் வினைப்பொருட்கள் தாய்ப்பாலில் உள்ளது போலவே, ஆட்டுப்பாலிலும் அதிகம் காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
மாட்டுப்பால் அருந்துவதைவிட ஆட்டுப்பால் அருந்துவதால், குறைந்த அளவே சளி உருவாகிறது. எனவே, ஒவ்வாமை, சுவாச நோய்களால் அவதிப்படுவர்கள் ஆட்டுப்பால் அருந்துவது நல்லது.
தாய்ப்பாலுக்கு மாற்று
ஆட்டுப்பாலானது, மாட்டுப்பாலைவிட தாய்ப்பாலை ஒத்த பண்புகளை அதிகம் கொண்டிருக்கிறது. ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பு போன்றே இருக்கிறது. ஆட்டுப்பாலில் உள்ள ஒலிகோசேக்ரைடு என்னும் சர்க்கரையின் அமைப்பும் தாய்ப்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது.
மேலும் தாய்ப்பால், ஆட்டுப்பாலில் மாட்டுப்பாலைவிட அதிக அளவு செலினியம் காணப்படுகிறது. மேற்கூறிய காரணங்களால் பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலே கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்புத்திறன்
ஆட்டுப்பாலில் அதிகமாகக் காணப்படும் செலினியம் தாது உப்பானது, ஆக்சிடண்ட் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதால் நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்த உதவுகிறது.
ஆட்டுப்பாலானது இரண்டு மடங்கு நன்மை பயக்கும் நடுத்தர நீளக் கேப்ரிக், கேப்பிரிலிக், கேப்ரோயிக் கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த வகையான கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைக் கட்டுப்படுத்துவதால், இதயம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆட்டுப்பாலில் உள்ள ஓமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
சீரான ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும் பொட்டாசியம் ஆட்டுப்பாலில் அதிகம் இருப்பதால், ஆட்டுப்பால் அருந்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, இதயத்தைப் பாதுகாக்கலாம்.
கட்டுரையாளர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர், தொடர்புக்கு: drsundha22@yahoo.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
52 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago