தமிழகத்திலேயே முதல்முறையாக இயற்கைச் சூழலுடன் மரபு முறையில் கரோனாவுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை வழங்குவதற்கான திருப்பத்தூர் மாவட்ட மையம் அக்ரகாரம் அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை மாதம் செயல்படத் தொடங்கியது. ‘கரோனா தொற்றுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தைத் தொடங்கலாம்’ எனப் பணித்திருந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மையத்தின் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமித்திருந்தார்.
மையம் தொடங்கப்பட்ட முதல் சில நாள்களுக்கு வந்த நோயாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். ஆனால், சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள், ஊடக செய்திகளால் மையத்துக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இட வசதியின்றி கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் நிலைக்குச் சென்றது. சித்த மருந்துகளின் மூலம் நோயாளர்கள் ஐந்து நாள்களிலேயே கரோனாவிலிருந்து விடுபட்டு நலம் பெறும் செய்தி வேகமாகப் பரவ, சித்தா சிகிச்சை மையத்துக்கான ஆதரவு அதிகரித்தது.
மனிதமும் குணமாக்கும்
கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களை ஒதுக்கப்பட்டவர்களாகப் பார்க்காமல் சக மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்பதே மையத்தின் உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் பங்காற்றிய ஆட்சியர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா, ஒருங்கிணைப்பாளரான நான் ஆகியோரின் ஒருமித்த எண்ணமாக இருந்தது. ‘மருந்துகளைத் தாண்டி மனிதமும் கரோனாவைக் குணமாக்கும் ஆயுதம் தான்’ என்பதில் உறுதியாக இருந்தோம்.
‘மருத்துவமனை’ போல் இறுக்கமாக இல்லாமல், ‘மனமகிழ்வு மையம்’ போல இருக்க வேண்டும் என்பதில் திட்டமிட்டுச் செயல்படுத்த முயன்றோம். மண்பானையில் சமைத்த சிற்றுண்டி ரகங்கள், நோயாளிகள் உலாவ மூலிகைத் தோட்டம், எட்டு வடிவ வர்ம நடைமேடை, காலை - மாலையில் இளவெயிலில் நடைப்பயிற்சி, குழந்தை நோயாளர்கள் குதூகலிக்க வேப்ப மர ஊஞ்சல், வீட்டிலிருப்பதைப் போன்ற சூழலை ஏற்படுத்த மிகப்பெரிய தொலைக்காட்சித் திரை, சுயதேர்வு உணவு, இரவு வேளையில் நிலாச் சோறு, மூலிகை முகக் கவசம், மூலிகைத் தூபம், நீராவி பிடித்தல், இலுப்பை எண்ணெய் விளக்கு என வாய்ப்பு இருந்த அனைத்து வகைகளிலும் மரபு முறை கடைப்பிடிக்கப்பட்டது. மகிழ்ச்சியை உண்டாக்கும் மெல்லிசையை ஒலிபரப்பினோம். மருத்துவம், சுற்றுச்சூழல் புத்தகங்கள் அடங்கிய நூலகமும் நோயாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நாள்தோறும் மாலையில் சித்த மருத்துவ யோகப் பயிற்சி, திருமூலர் பிராணாயாம முறைகள் நோயாளர்களுக்குப் பயிற்றுவிக்கப் பட்டன. சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய உடல் நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு உரைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டன. கரோனாவிலிருந்து குணமடைந்து ஒருவர் வீடு திரும்பும்போது, சித்த மருத்துவம் சார்ந்த விஷயங்களையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே குறிக்கோள்.
உணர்வுகளின் சங்கமம்
மையத்தில் சிகிச்சை பெற்று 625 கரோனா நோயாளர்கள் நலத்துடன் திரும்பினார்கள். அவர்களிடம் கிடைத்த அனுபவங்கள் ஏராளம். பல நூறு நூல்களுக்குச் சமம். அழுகை, பரிதவிப்பு. அன்பு, ஏக்கம், மகிழ்ச்சி, சோர்வு, தனிமை, குதூகலம், உற்சாகம்… என நிறைய உணர்வுகளை, கடந்த ஐந்து மாத காலமாகப் பார்க்க முடிந்தது. ‘கரோனா தொற்று’ எனும் புதிய நோயை எதிர்கொண்டு அதிலிருந்து நோயாளர்கள் எவ்வாறு மீண்டு வருகிறார்கள் எனும் வித்தியாசமான களப் பயிற்சி எனக்குக் கிடைத்தது.
குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிமையில் இருக்க வேண்டிய குழந்தைகள், மகனின் திருமணத்துக்குச் செல்ல முடியாத தந்தை, கரோனாவால் திருமணம் ஒத்திவைக்கப்பட்ட இளைஞர், தாய் தந்தையின் மறைவுச் செய்தியைக் கேட்டுப் பரிதவித்த உறவுகள், தேர்வு எழுத முடியாமல் கலங்கிய சகோதரி, பால் வாசம் மாறாத குழந்தையின் அழுகை… என அங்கு வந்த ஒவ்வொருவர் எதிர்கொண்ட கடினமான வாழ்க்கை சூழ்நிலையையும் அருகிலிருந்து பார்க்க முடிந்தது. சக மனிதனாக அவர்களை ஆற்றுப்படுத்தியதில் பெரும் மனநிறைவு!
‘மையத்தின் கடைசி தொற்றாளர் நலம் பெற்று வெளியேறும்வரை விடுப்பு எடுப்பதில்லை’ என்று முடிவு செய்திருந்தேன். ஐந்து மாதங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சூழல்! தொடக்கத்தில் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் மையத்தில் சேர்க்கப்பட்ட சிறு குழந்தைகள், சிறாருடன் பழகியபோது, இவர்களுக்காகக் குடும்பத்தைப் பிரிந்திருப்பதில் தவறே இல்லை என்று தோன்றியது. நாள்தோறும் காலை முதல் இரவுவரை அவர்களுடன் செலவிட்ட அந்த நாள்கள் கொடுத்த மனநிறைவுக்கு ஈடுயிணையில்லை!
புது வெளிச்சம்
மையத்தில் சேர்க்கப்படும்போது ஒவ்வொரு கரோனா நோயாளரிடமும் பதற்றமும் பரிதவிப்பும் அதிகமாகவே இருக்கும். பதற்றத்தைத் தணித்து இயல்புக்குக் கொண்டுவரவே அவர்களுடன் நடனமாடுவது, இசை நிகழ்ச்சி நடத்துவது, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது… போன்ற முறைகளைச் செயல்படுத்தினோம். மறுநாளே பதற்றம் பெருமளவில் குறைந்திருந்ததைப் பலரிடமும் பார்க்க முடிந்தது.
கரோனாவால் திருமணம் நின்று போயிருந்ததால் பெரும் மன அழுத்தத்திலிருந்த இளைஞரைக் குதூகலப்படுத்தும் நோக்கத்துடன்தான் நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது! அதற்குப் பிறகு அந்த இளைஞரின் மனக் காயம் மட்டுப்பட்டிருந்ததை உணர முடிந்தது. ‘தொடர்ந்து இம்முறையைச் செயல்படுத்தினால் நல்லதுதானே’ என்று இறுதிவரை நடனத்தால் மகிழ்வூட்டும் நிகழ்வுகள் அரங்கேறின! உடன் பணிபுரிந்த முன்களப் பணியாளர்களின் அன்பும் தொடர் ஆதரவும் நோயாளர்கள் விரை வாக மீண்டதற்கு முக்கிய காரணம்.
சித்த மருத்துவத்தின் மூலம் நலம் பெற்று வீடு திரும்புவதற்கு முன், தங்கள் சிகிச்சை அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துவிட்டே நோயாளர்கள் வீடு திரும்புவார்கள். உள்ளே வந்தபோது இருந்த மனநிலை அவர்களிடம் நேரெதிராக மாறியிருப்பதைப் பார்க்கும்போது மருத்துவனாக மகிழ்ச்சியாக இருக்கும். நாள்தோறும் வீடு திரும்பும் நோயாளிகளைக் கணக்கிடும்போது உண்டாகும் பரவசத்தை அளவீட்டுக் கருவிகளால் மதிப்பிட முடியாது. எந்தப் பெருந்தொற்றையும் வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கையை இந்த நோயாளர்கள் என் மனதில் விதைத்துச் சென்றிருக்கிறார்கள்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago