வௌவால்களும் வைரஸும்: தொடர்பும் புரிதலும் அதிகரிக்குமா?

By செய்திப்பிரிவு

நாவல் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு வௌவால்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. இந்தப் பின்னணியில் வௌவால்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு நீண்டது. இந்தத் தொடர்பை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், எதிர்காலத்தில் வைரஸ் வகைகளைக் கையாள முடியும்.

கிட்டத்தட்ட 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே வௌவால்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. உலக பாலூட்டி வகைகளில் கால்வாசி வௌவால்கள். பாலூட்டிகளில் வௌவால்களுக்கு மட்டுமே பறக்கும் திறன் உண்டு. 1,300க்கும் மேற்பட்ட வகைகள் இவற்றில் உண்டு. 30 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும் இவை, பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே வாழும். நூறு முதல் ஆயிரம் வௌவால்கள்கூட ஒரே இடத்தில் வாழும். வௌவால்களில் சிறிய வௌவால்கள், பெரிய வௌவால்கள் ஆகிய இரண்டு அடிப்படைப் பிரிவுகள் உண்டு. சிறிய வௌவால்கள் பூச்சிகளைச் சாப்பிடுகின்றன. வெப்பமண்டலத்தில் வாழும் பெரிய வௌவால்கள் பழம், தேன், மகரந்தம் ஆகியவற்றை உண்ணுகின்றன.

வெளவால்கள் 200க்கும் மேற்பட்ட வைரஸ் வகைகளைத் தங்களது உடலில் கொண்டுள்ளன. இவற்றில் 60-க்கும் மேற்பட்ட வைரஸ் வகைகள் மனிதர்களைப் பாதிக்கக்கூடியவை. ரேபிஸ் வைரஸ், மார்பர்க் வைரஸ், ஹேந்திர வைரஸ், எபோலா வைரஸ், நிபா வைரஸ், கரோனா வைரஸ் வகைகள், லிசாவைரஸ் வகைகள், ஹெனிப வைரஸ் வகைகள், சார்ஸ் வைரஸ், மெர்ஸ் வைரஸ் உள்ளிட்ட தொற்றுகளின் பரவலுக்கு வௌவால்களே முக்கியக் காரணம். இப்படி எத்தனையோ வைரஸ்களைத் தங்களது உடலில் கொண்டிருந்தாலும், அவற்றால் வௌவால்கள் பாதிக்கப்படுவதில்லை.

வௌவால்களிடமிருந்து வைரஸ் தொற்று எப்படி மனிதர்களுக்குப் பரவுகிறது?:

வௌவால்களின் உடலிலிருந்து வெளிப்படும் வைரஸ் வகைகள், காட்டு விலங்களுக்கும் வளர்ப்பு-வீட்டு விலங்களுக்கும் பரவும். பின் இவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. வௌவால்கள் தங்கள் உடலிலுள்ள வைரஸைப் பறவைகளுக்கும் ஊர்வனவற்றுக்கும் பரப்பலாம். மனிதர்கள் இவை வாழுமிடத்துக்கு அருகில் வாழும்போது, அவற்றிடமிருந்து எளிதாக மனிதர்களுக்கு வைரஸ் பரவிவிடுகிறது. மேலும், வௌவால்கள் கடிப்பதாலோ, அவற்றின் உமிழ்நீர், ரத்தம், சிறுநீர், கழிவு ஆகியவற்றாலோ மனிதன் நேரடியாகப் பாதிக்கப்படச் சாத்தியம் உண்டு.

புதிய வைரஸ் உருவாவதற்கான காரணங்கள்

l மாறி வரும் சுற்றுச்சூழல்

l காட்டு விலங்குகளின் உறைவிடம் அழிப்பு

l காட்டு விலங்குகள் இடம்பெயர்தல்

l அவற்றை உணவாகப் பயன்படுத்துதல்

l காட்டு விலங்குகளின் வணிகம்

மேற்குறிப்பிட்ட காரணங்களால், மனிதனுக்கும் காட்டுவாழ் விலங்களுக்குமான நெருக்கம் அதிகரிக்கிறது. இதனால், பல புதிய வைரஸ் கிருமிகள் மனிதர்களிடம் பரவுகின்றன. இந்த வைரஸ் பரவல் வெறும் தொற்றுடன் முடிவதில்லை. அது உடலைப் பெரிதும் பாதித்து பலரையும் இறக்கவைக்கிறது. இவற்றில் சில கோவிட் 19 நோய் போல் உலகளாவிய பெருந்தொற்றை ஏற்படுத்திவிடுகின்றன.

வௌவால்களுக்கு ஏன் வைரஸ் வகைகளால் நோய் ஏற்படுவதில்லை?

பல்வேறு வைரஸ் வகைகளை உடலில் கொண்டிருக்கும்போதும், வெளவால்களுக்கு ஏன் எந்த வைரஸ் பாதிப்புகளும் ஏற்படுவதில்லை என்பது புரியாத புதிர். அவற்றின் பரிணாம வளர்ச்சியா, மரபணு சிறப்பு அம்சங்களா? இல்லை அவற்றின் பிரத்யேகத் தடுப்பாற்றல் திறனா? எதனால் வைரஸ் நோய்கள் எதுவும் வருவதில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. வைரஸ் வகைகளும் வெளவால்களும் பரிணாம வளர்ச்சியில் (Co-evolution) சேர்ந்தே இணைவாழ் உயிரினங்களாக வாழும் ஒரு நிலையை அடைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

வௌவால்கள் பறக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றின் உடலில் அதிக வளர்சிதை மாற்றம் நடைபெறுகிறது. நீண்ட தூரம் பறக்கிறபோது, அதன் உடலில் அதிக வெப்பம் உருவாகிறது. இதற்கு அதன் உடலில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதை டி.என்.ஏ. சென்சிங் என்கிறார்கள். அதாவது, அவற்றின் உடல் செல்களே சிதைந்து, அதிலிருந்து டி.என்.ஏ. வெளிப்படும். அவற்றின் உடல் வெப்பமும் அதிகரிக்கிறது (38–41 டிகிரி செல்சியஸ்). இந்த வெப்பத்தை அவற்றின் உடல் எளிதில் தாங்கிக்கொள்வதுடன், அந்த வெப்பநிலையில் வைரஸ் வகைகள் பெருகினாலும், வௌவால்களின் உடலில் நோயை ஏற்படுத்தாமல் அதேநேரம் உயிருடன் இருக்கவும் உதவுகிறது. இவற்றைக் குறித்த ஆராய்ச்சிகள் அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளிலும் நடைபெற்றுள்ளன.

வௌவால்களால் ஏற்படும் சில நன்மைகள்

l மனிதர்களுக்குத் தீங்கிழைக்கும் பல்வேறு பூச்சியினங்களைத் தின்று தீர்க்கின்றன (கொசு இவற்றின் முக்கிய உணவு).

l நூற்றுக்கும் மேற்பட்ட தாவர இனங்களில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற மறைமுகமாக உதவுகின்றன.

l விதைப் பரவலுக்கு உதவுகின்றன.

l வௌவால்களின் கழிவு (குவானோ) உரமாகப் பயன்படுகிறது.

l அவற்றின் எதிரொலிக்கும் திறன் சோனார் ஒலி இருப்பிடத்தகவலுக்குப் பயன்படுகிறது.

உலகளாவிய பெருந்தொற்றைத் தடுக்க வருங்காலத் தீர்வுகள் என்னென்ன?

கொசுக்கள் பல்வேறு வைரஸ் கிருமிகளையும் மக்களுக்குப் பரப்புவதால், அவற்றை ஒழிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில் கொசுக்களின் முட்டையைப் பயன்படுத்தி, கொசுக்கள் ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும். வளர்ந்த பெண் கொசுக்கள் அழிக்கப்படும். ஆண் கொசுக்களின் உடலில் ‘காமா கதிர்கள்’ செலுத்தப்படும். இதனால் அவை மலட்டுத்தன்மையை அடையும். இவற்றைக் கொசுக்கள் மிகுந்த இடத்தில், திறந்து விடும்போது இவற்றால் பெண் கொசுக்கள் கர்ப்பம் அடைவதில்லை. இதனால் இவை இடுகின்ற முட்டைகளில் தோற்றுவளரி (லார்வா) உண்டாகாமல் அழிந்துவிடும்.

இதே போன்று வெளவால்களிடம் உள்ள வைரஸ்களை அழிக்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். வௌவால்களின் உடலிலுள்ள வைரஸ்களைக் குறித்த ஆராய்ச்சிகள், பல்வேறு உலக நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஐ.நா., உலக சுகாதார நிறுவனம் ஆகியவை உலக நாடுகளின் தலைவர்களுடனும் மருத்துவ, விலங்கியல், வைரஸ் நிபுணர்கள், தொற்றுநோய்ப் பரவல் கணிப்பு நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு இது போல் ஒரு தொற்றைக் கையாள மருந்துமில்லாமல், தடுப்பூசியும் இல்லாமல் பல ஆண்டுகளாக மக்களை வருந்தும் கொடுமையான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைய வேண்டும்.

வைரஸ் ஆராய்ச்சிக்கும், புதிய வைரஸ் மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சிக்கும், தடுப்பூசிகளை உருவாக்குவதற்கும் உலக நாடுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 17 ஆண்டுகளுக்கு முன் வந்த சார்ஸ், இன்று மாறுபட்ட வகையில் வந்திருக்கிறது. இருந்தாலும் நம்மால் மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை, தடுப்பூசியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இயந்திரமயமான மனிதனின் அறிவுக் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி இயற்கை நுட்பத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் இட்ட எந்த தேசத்தின் எல்லைக்கோடும் தடுக்க முடியாத இந்த வைரஸ், மனிதனது தேகத்தில் தனது எல்லைக் கோடுகளைப் போட்டுக்கொண்டுள்ளது.

போர்களில் இறந்தவர்களைவிட நுண்கிருமிகளால் இறந்தவர்களே பன்மடங்கு அதிகம். எப்போதோ வரும் போருக்காகப் பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கும் உலக நாடுகள், அதில் பத்தில் ஒரு பகுதியை வைரஸ் ஆராய்ச்சிக்குச் செலவு செய்ய முன்வர வேண்டும். நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதைக் கண்டறிய பல கோடிகளைச் செலவழிப்பதைவிட, பூமியில் எவ்வளவு புதிய வைரஸ் வகைகள் உருவாகி வருகின்றன என்கிற கணக்கெடுப்பே முக்கியம். வைரஸ்களிடம் முன்னெச்சரிக்கையாக இருக்காவிட்டால், மனிதர்களை மண்ணிலிருந்து அவை அப்புறப்படுத்திவிடக்கூடும்.

மனிதர்களுக்கு ஏற்படும் சில வைரஸ் தொற்றுகள்

l | ரேபிஸ் நோய்

பல்வேறு விலங்குகளின் உமிழ்நீர் மூலமாகவே இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. பெரும்பாலும் நாயின் மூலமாகப் பரவுகிறது. இருந்தாலும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வௌவால்கள் மூலமாக ரேபிஸ் நோய் பரவுகிறது. வௌவால்கள் வாழும் குகைகளுக்குப் போனவர்கள், அங்குள்ள அவற்றின் எச்சத்திலுள்ள ரேபிஸ் வைரஸைச் சுவாசிக்க நேரிட்டபோதும் ரேபிஸ் நோய் ஏற்பட்டுள்ளது! ஆனால், எல்லா வௌவால்களின் உடலிலும் ரேபிஸ் வைரஸ் இருப்பதில்லை.

l | சார்ஸ் பாதிப்பு (SARS-CoV)

இது பீட்டா கரோனா வைரஸ் வகையைச் சேர்ந்தது. இந்தப் புதிய வகை வைரஸ் வௌவாலிடமிருந்து மரநாய் போன்ற விலங்குகளுக்குப் பரவி, அவற்றின் மூலமாகவே மனிதர்களுக்குத் தொற்றியது. அதன்பின் சார்ஸ் தொற்று ஏற்பட்டவர்களின் தும்மல்,இருமல் ஆகியவற்றின் மூலமாகமற்றவர்களுக்கு வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வயிற்றுப்போக்கு, அசதியுடன் ஜலதோஷம் போன்ற அறிகுறிகளுடன் இந்த நோய் தொடங்கும். அதன்பின் அதிகக் காய்ச்சல் ஏற்படும். நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுவதால் (நிமோனியா) சுவாசிக்கச் சிரமம் ஏற்பட்டு மரணம் ஏற்படும்.

l | மெர்ஸ் கரோனா வைரஸ்

ஒற்றைத் திமில் ஒட்டகத்திட மிருந்துதான் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது. வைரஸ் தொற்று கொண்ட அதன் இறைச்சியை நன்கு சமைக்காமல் உட்கொண்ட வர்களுக்கும், அதன் பாலைக் காய்ச்சாமல் பருகியவர்களுக்கும், பெரும்பாலும் மெர்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுவும் பீட்டா கரோனா வைரஸ் வகையைச் சேர்ந்ததே. இந்த வைரஸ் பாதிப்பின் பல்வேறு தொந்தரவுகளும் சார்ஸ் வைரஸைப் போன்றே இருந்தன. ஆனால், இந்த வைரஸ் சார்ஸ் போல் பாதிக்கப்பட்ட மனிதர்களிட மிருந்து மற்றவர்களுக்கு நேரடியாக, வேகமாகப் பரவவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிமோனியாவும் ஏற்படவில்லை. மிகவும் நெருக்கமாக ஒரே வீட்டிலிருந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டது. நோய்த் தடுப்பாற்றால் குன்றியவர்களையே இது பெரிதும் பாதித்தது.

l | கோவிட்-19

தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 நோய்க்குக் காரணமான நாவல் கரோனா வைரஸ் வௌவால்களிடம் இருந்து தோன்றியிருக்க வேண்டும். வௌவால்களிடம் இருக்கும் ஒரு வகை கரோனா வைரஸ் வேறு விலங்கின் உடலுக்குச் சென்று மாற்றமடைந்து கோவிட் வைரஸாக மாறியுள்ளது. நாவல் கரோனா வைரஸ் வகையின் மரபணுப் பண்புகளில் 96 சதவீதப் பண்புகள் வௌவால்களிடம் உள்ளன. ஆனால், இடையில் கோவிட்-19 ஆக மாற உதவிய இன்னொரு விலங்கு எது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால்தான் இதை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று இன்னமும்கூட சிலர் நம்புகின்றனர்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்

தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்