கரோனா தொடர்பான 28 சந்தேகங்களும் பதில்களும்: உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

By டி. கார்த்திக்

கரோனா தொற்று ஏற்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனாலும், அந்த நோய் பற்றியும் அது பரவும் விதம் பற்றியும் ஏற்படும் சந்தேகங்களுக்கு அளவே இல்லை. இந்தச் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் கரோனா தொடர்பான 28 தகவல்களின் உண்மைத் தன்மைகளைத் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

1. உடற்பயிற்சி செய்யும்போது முகக்கவசம் அணியலாமா?

உடற்பயிற்சி செய்யும்போது முகக்கவசங்களை அணியக் கூடாது. ஏனென்றால், முகக்கவசம் எளிதாகச் சுவாசிக்கும் திறனைக் குறைக்கும். மேலும், உடற்பயிற்சியால் ஏற்படும் வியர்வை முகக்கவசத்தை விரைவில் ஈரமாக்கும். இது சுவாசிப்பை இன்னும் கடினமாக்கும். மேலும், வியர்வையால் ஏற்படும் ஈரம் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். உடற்பயிற்சியின்போது மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தள்ளி இருந்தாலே போதுமானது.

2. காலணி, ஷூக்கள் மூலம் கரோனா வைரஸ் பரவுமா?

கோவிட்-19 காலணிகள், ஷூக்கள் மூலம் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கோவிட்-19 காலணிகளில் பரவி தனி நபர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவே. ஆனால், முன்னெச்சரிக்கையாக வீடுகளில் தவழும் கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள் காலணி, ஷூக்களை கைகளால் தொட வாய்ப்புகள் உண்டு. எனவே, உங்கள் காலணிகளை வாசலுக்கு வெளியே விட்டுவிடுங்கள்.

3. கரோனா தொற்றுக்குப் பாக்டீரியாவும் காரணமா?

கரோனா என்பது வைரஸால் ஏற்படும் பாதிப்புதான். பாக்டீரியாவால் ஏற்படுவது அல்ல. கோவிட்-19ஐ ஏற்படுத்தும் வைரஸ் ‘கரோனவிரிடே’ என்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்ததே. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்குச் சிக்கலாக பாக்டீரியா தொற்றுநோயும் உருவாகலாம். ஆனால், கரோனாவுக்கு வைரஸ்தான் முக்கியக் காரணம்.

4. நீண்டகாலமாக முகக்கவசத்தைப் பயன்படுத்துவது ஆக்ஸிஜன் குறைபாட்டை ஏற்படுத்துமா?

மருத்துவ முகக்கவசங்களை அணியும்போது ஆக்சிஜன் அல்லது கார்பன் டை ஆக்ஸைட் குறைபாட்டை ஏற்படுத்தாது. முகக்கவசங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது சங்கடமாக இருக்கும். என்றாலும், இது ஆக்ஸிஜன் குறைபாட்டுக்கு வழிவகுக்காது. முகக்கவசங்கள் சாதாரணமாகச் சுவாசிக்க உகந்த அளவில் இருக்கும்படி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பயன்படுத்திய முகமூடியை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். ஈரமானால், உடனே மாற்றிவிடுங்கள்.

5. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகம் மீள்கிறார்களா?

ஆமாம். கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் அதிலிருந்து மீள்கிறார்கள். கோவிட்-19ஐப் பெறும் பெரும்பாலான மக்களுக்கு லேசான அல்லது மிதமான அறிகுறிகளே தென்படுகின்றன. அவர்களுக்கு ஆதரவான மருத்துவக் கவனிப்புக்கு மூலம் மீண்டுவிட முடியும். உங்களுக்கு இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

6. ஆல்கஹால் அருந்துவது கரோனா நோயிலிருந்து பாதுகாக்குமா?

ஆல்கஹால் குடிப்பதால் கரோனா ஏற்படுவதிலிருந்து அது பாதுகாக்காது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆல்கஹால் பயன்பாடு, உங்கள் உடல் பிரச்சினையை மேலும் அதிகரித்துச் சிக்கலாக்கலாம்.

7. தெர்மல் ஸ்கேனர்கள் எனப்படும் காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் கரோனாவைக் கண்டறிய முடியுமா?

காய்ச்சல் ஸ்கேனர்கள் மூலம் கரோனாவைக் கண்டறிய முடியாது. காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிவதில் மட்டுமே இந்த ஸ்கேனர்கள் பயனளிக்கும். (அதாவது, சராசரி உடல் வெப்பநிலையைவிட அதிகமாக இருந்தால் அதைக் காட்டும்). கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இதை வைத்துக் கண்டறிய முடியாது. காய்ச்சலுக்குப் பல காரணங்கள் உள்ளன. உங்களுக்குக் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெறவும், மலேரியா அல்லது டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

8. கரோனாவைக் குணப்படுத்துவதில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலன் தருமா?

கரோனா வைரஸுக்குச் சிகிச்சை அளிக்கவோ அல்லது அதைத் தடுக்கவோ உரிமம் பெற்ற மருந்துகள் எவையும் இல்லை. இது தொடர்பாகப் பல மருத்துவப் பரிசோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அல்லது வேறு எந்த மருந்தாலும் கரோனா வைரஸைக் குணப்படுத்தவோ தடுக்கவோ முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹைட்ராக்ஸி குளோரோகுயினைத் தவறாகப் பயன்படுத்துவது கடுமையான பக்க விளைவுகளையும் நோய்களையும் ஏற்படுத்தும். அது மரணத்துக்கும்கூட வழிவகுக்கும்.

9. உணவில் மிளகை அதிகம் சேர்த்தால் கரோனாவைக் குணப்படுத்தலாமா?

நீங்கள் அருந்தும் சூப் அல்லது பிற உணவுகளில் மிளகு சேர்ப்பதால் கரோனாவைத் தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது. கரோனா வைரஸிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளச் சிறந்த வழி, மற்றவர்களிடமிருந்து குறைந்தது 1 மீட்டர் தள்ளி இருப்பதும், உங்கள் கைகளை அடிக்கடி மற்றும் முழுமையாகக் கழுவுவதும் மட்டுமே. சமச்சீரான உணவை உட்கொள்வது, நன்கு தண்ணீர் அருந்துவது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, நன்றாகத் தூங்குவது போன்றவை மட்டுமே பொது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

10. ஈக்கள் மூலம் கரோனா வைரஸ் பரவுமா?

ஈக்கள் மூலம் கரோனா வைரஸ் பரவாது. கோவிட்-19 வைரஸ் ஈக்கள் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் தகவலும் இதுவரை இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது உருவாகும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. நீர்த்துளிகள் பட்ட மேற்பரப்பைத் தொட்டு, உங்கள் கைகளைக் கழுவுவதற்கு முன் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதன் மூலமும் உங்களுக்கும் அந்தத் தொற்று ஏற்படலாம். உங்களைப் பாதுகாத்துக்கொள்ள மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரம் தள்ளி இருங்கள். மேற்பரப்புகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துங்கள். உங்கள் கைகளை முழுமையாக அடிக்கடி சுத்தம் செய்து கண்கள், வாய், மூக்கைத் தொடுவதைத் தவிருங்கள்.

11. உடலில் கிருமிநாசினியைத் தெளித்துக் கொள்வது கரோனாவிலிருந்து பாதுகாக்குமா?

உங்கள் உடலில் குளோரின் பவுடரால் ப்ளீச்சிங் செய்துகோள்வதோ கிருமிநாசினியைத் தெளித்துக்கொள்வதோ கோவிட்-19லிருந்து உங்களைப் பாதுகாக்காது. மேலும் இது ஆபத்தானது. எந்தவொரு சூழ்நிலையிலும் உங்கள் உடலில் கிருமிநாசினியைத் தெளிக்க வேண்டாம். கிருமிநாசினியை உட்கொண்டால் விஷமாக மாறி, உங்கள் தோல், கண்களுக்கு எரிச்சல் மற்றும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும்.

12. மெத்தனால், எத்தனால் அருந்துவது கரோனாவிலிருந்து பாதுகாக்குமா?

மெத்தனால், எத்தனால் அல்லது குளோரினால் ப்ளீச்சிங் செய்து குடிப்பது போன்றவற்றால் கரோனாவைத் தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது. இது மிகவும் ஆபத்தானதுகூட. மெத்தனால், எத்தனால் போன்றவை விஷம். அவற்றைக் குடிப்பதால் மரணம் ஏற்படலாம். மெத்தனால், எத்தனால் மற்றும் ப்ளீச்சிங் சில நேரம் மேற்பரப்பில் வைரஸைக் கொல்ல உதவும் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், நீங்கள் அவற்றை ஒருபோதும் குடிக்கக் கூடாது. அது உங்கள் உடலில் உள்ள வைரஸைக் கொல்லாது. மாறாக உடல் உறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.

13. 5ஜி மொபைல் நெட்வொர்க்குகள் மூலம் கரோனா வைரஸ் பரவுகிறதா?

5ஜி மொபைல் நெட்வொர்க்குகள் மூலம் கரோனா பரவும் என்பது தவறு. கரோனாவை நெட்வொர்க்குகளுக்குள் கொண்டுவர வேண்டாம். ரேடியோ அலைகள், மொபைல் நெட்வொர்க்குகளில் வைரஸ்களால் பயணிக்க முடியாது. 5ஜி மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாத பல நாடுகளில் கோவிட் -19 பரவி வருகிறது.

14. அடிக்கடி வெயிலில் நிற்பது கரோனாவிலிருந்து பாதுகாக்குமா?

தவறு. வானிலையில் வெயில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோவிட்-19 பரவலாம். வெப்பமான வானிலை கொண்ட நாடுகளில் கரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, உங்கள் கைகளை அடிக்கடி முழுமையாகச் சுத்தம் செய்துகொள்வதே நல்லது. உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்ப்பது கரோனா வருவதைத் தவிர்க்கும்.

15. கரோனா வைரஸ் தொற்று வந்தால், வாழ்நாள் முழுவதும் அதன் தாக்கம் இருக்குமா?

கோவிட் -19 வந்தால், அது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பது அர்த்தமற்றது. கோவிட்-19 வந்த பலரும் அதிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். உங்களுக்குக் கரோனா தொற்று வந்தால், அறிகுறிகளுக்குச் சிகிச்சையளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுங்கள்.

16. சுவாசத்தை 10 விநாடிகளுக்கு மேல் தம் பிடித்து தக்கவைக்கும்போது இருமலோ அசெளகரியமோ ஏற்படவில்லையென்றால், கரோனா வராதா?

இருமலோ அசெளகரியமோ இல்லாமல் உங்கள் சுவாசத்தை 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க முடியும் என்றால் நீங்கள் கோவிட்-19 -லிருந்து விடுபடுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. கோவிட்-19-ன் பொதுவான அறிகுறிகளாக வறட்டு இருமல், சோர்வு, காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு நிமோனியா போன்ற நோயின் தன்மை இருக்கலாம். உங்களுக்கு கோவிட்-19 உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது ஆய்வகச் சோதனை மட்டுமே. சுவாசப் பயிற்சியால் கரோனா உள்ளதை உறுதிப்படுத்த முடியாது. இது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

17. கரோனா வைரஸ் வெப்பமான, ஈரப்பதமான காலநிலையில் பரவுமா?

ஆமாம். கோவிட் -19 வைரஸ் வெப்பமான, ஈரப்பதமான காலநிலையில் பரவக்கூடும். கோவிட்-19லிருந்து பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி, மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தைப் பராமரிப்பதும், அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்வதும்தான்.

18. குளிர்ந்த பனிக்காலத்தில் கரோனா வைரஸைக் கொல்ல முடியாதா?

ஆமாம். குளிர்ந்த வானிலை மற்றும் பனியில் கரோனா வைரஸைக் கொல்ல முடியாது. குளிர்காலம் புதிய கரோனா வைரஸையோ பிற நோய்களையோ கொல்லும் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சாதாரண மனித உடலின் வெப்பநிலை வெளிப்புற வெப்பநிலை அல்லது வானிலையைப் பொருட்படுத்தாமலேயே இருக்கும்.

19. சூடான குளியல் மூலம் கரோனாவைத் தடுக்கலாமா?

சூடான குளியல் மூலம் கரோனா வைரஸைத் தடுக்க முடியாது. மழையோ வெயிலோ எதையும் பொருட்படுத்தாமல் நம் உடலின் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். உண்மையில், மிகவும் சூடான நீரில் சூடான குளியல் எடுப்பது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

20. கரோனா வைரஸ் உள்ளவர்களைக் கடிக்கும் கொசு பிறரைக் கடித்தால், அவருக்கும் கரோனா தொற்று வருமா?

கோவிட்-19 வைரஸ், கொசு கடிப்பதன் மூலம் பரவுவதில்லை. கரோனா வைரஸ் கொசுக்களால் பரவக்கூடும் என்பதற்கான எந்தத் தகவலும் ஆதாரமும் இதுவரை இல்லை. இது ஒரு சுவாச வைரஸ் ஆகும். இது பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது உருவாகும் நீர்த்திவலைகள் மூலமாகவோ அல்லது உமிழ்நீர்த் துளிகள் மூலமாகவோ அல்லது மூக்கிலிருந்து வெளியேறும் சளியின் மூலமாகவோ பரவுகிறது. இருமல், தும்மக்கூடிய எவருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.

21. கரோனா வைரஸைக் கொல்ல டிரையரைக் கொண்டு கைகளை உலர்த்துவது பயன் அளிக்காதா?

ஆமாம். கோவிட்-19 வைரஸைக் கொல்ல டிரையரைக் கொண்டு கைகளை உலர்த்துவது பயனுள்ளது அல்ல. உங்கள் கைகளை சோப்பு நீர் அல்லது ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியைத் தடவி அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். உங்கள் கைகளைச் சுத்தம் செய்தவுடன், காகிதத் துண்டுகள் அல்லது இதமான காற்று உலர்த்தியைப் பயன்படுத்தி நன்கு துடைத்தால் போதுமானது.

22. கை மற்றும் உடலின் பிற பகுதிகளில் கிருமியை நீக்க அல்ட்ரா வயலட் விளக்குகள் பயன்படுத்தலாமா?

கிருமி நீக்கம் செய்ய அல்ட்ரா வயலட் (யு.வி) விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. புற ஊதா கதிர்வீச்சு தோல் எரிச்சலை ஏற்படுத்தும். கண்களைச் சேதப்படுத்தும். ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி அல்லது சோப்பு தண்ணீரில் கைகளைக் கழுவுதல் வைரஸை அகற்ற மிகவும் பயனுள்ள வழிகளாகும்.

23. நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கரோனா வராமல் காக்குமா?

நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கோவிட்-19 வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாக்காது. கரோனா வைரஸ் புதியது மற்றும் வேறுபட்டது. அதற்கெனத் தனியாகத் தடுப்பூசி தேவை. அதற்காக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயன்றுவருகிறார்கள். இதுபோன்ற தடுப்பூசிகள் கோவிட்-19க்கு எதிராகப் பயனுள்ளதாக இல்லை. என்றாலும், உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க சுவாச நோய்களுக்கு எதிராக இத்தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

24. மூக்கை சலைன் தண்ணீரால் சுத்தம் செய்தால், கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கலாமா?

உங்கள் மூக்கை சலைன் நீரால் கழுவுவதன் மூலம் கோவிட்-19-ஐத் தடுக்க முடியாது. மூக்கை உமிழ்நீரில் தொடர்ந்து கழுவுவதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

25. உணவில் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்வது கரோனாவிலிருந்து தடுக்குமா?

பூண்டு சாப்பிடுவது கோவிட்-19-ஐத் தடுக்காது. பூண்டு ஓர் ஆரோக்கியமான உணவு. இது சில ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. என்றாலும், பூண்டு சாப்பிடுவது கரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் தற்போதைய நிலையில் இல்லை.

26. குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று ஏற்படுமா?

அனைத்து வயதினருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படலாம். இந்த வைரஸால் வயதானவர்கள் மட்டுமல்ல இளையவர்களும் பாதிக்கப்படலாம். வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு நோய், இதய நோய் போன்ற துணை நோய்கள் கொண்டவர்கள் கரோனா வைரஸால் கடுமையாக நோய்வாய்ப்படுகின்றனர். அனைத்து வயதினரும் கை சுகாதாரம், சுவாச சுகாதாரத்தைப் பின்பற்றுவதன் மூலம் கரோனா ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

27. ஆன்டிபயாடிக் மருந்துகள் கரோனா வைரஸைத் தடுக்குமா?

ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு கோவிட்-19 நோயைத் தடுக்கவோ சிகிச்சையளிக்கவோ முடியாது. இந்த மருந்துகள் பாக்டீரியாவுக்கு எதிராக மட்டுமே செயல்படுகின்றன. கோவிட்-19 ஒரு வைரஸால் ஏற்படுகிறது. எனவே, ஆன்டிபயாடிக் மருந்துகளைச் சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது.

28. கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்குக் குறிப்பிட்ட மருந்துகள் எவையும் கிடையாது?

கோவிட்-19-ஐத் தடுக்கவோ சிகிச்சையளிக்கவோ மருந்துகள் எவையும் இல்லை. இன்று வரை கரோனா வைரஸைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்து எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. அறிகுறிகளைப் போக்கவும் சிகிச்சையளிக்கவும் மட்டுமே மருந்துகள் தரப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்