கரோனாவிலிருந்து விலகியிருப்போம்… இதய நலனையும் சேர்த்தே காப்போம்

By செய்திப்பிரிவு

டாக்டர் கல்யாணி நித்யானந்தன்

என் அம்மா கைம்பெண் ஆனபோது குடும்பம் சார்ந்த பொறுப்புகளிலிருந்து விலகிச் சமையலுக்கு உப்பு, புளி இருக்கிறதா என்பது போன்ற கவலைகள் இல்லாமல் மூத்த குடிமகளாக ஆகியிருந்தார். அவருடைய நான்கு குழந்தைகளில் இருவர் சென்னையிலும் மற்ற இருவர் இந்தியாவின் பிற நகரங்களிலும் இருந்தனர்.

ஒவ்வொரு வீட்டிலும் தனக்கெனத் தனியாக ஆடைகள், சாப்பாட்டுத் தட்டு, தண்ணீர் குடிப்பதற்கு டம்ளர் ஆகியவற்றை எல்லாம் அவர் வைத்திருப்பார். இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென அம்மா நினைத்தால், ஒரு தொலைபேசி அழைப்பு போதும். கொடியில் உலர்த்தியிருக்கிற சேலையை மடித்துப் பையில் வைத்து, பூஜைப் பெட்டியுடன் புறப்பட்டுவிடுவார். எங்கே தங்கினாலும் சுறுசுறுப்புடன் தன்னால் ஆன வேலைகளைச் செய்வார். முடியவில்லை என்றால் மனைக்கட்டையில் தலைவைத்துக்கொண்டு ‘கலைமகள்’ படிக்கத் தொடங்கிவிடுவார்.

ஆனால், என் அம்மாவின் வயதை நான் அடைந்தபோது கைம்பெண்ணானேனே ஒழிய, விடுதலை அடையவில்லை. மருத்துவப் பணியிலிருந்து விலகி இஷ்டப்பட்ட ஊர்களுக்குக் கோயில், குளம் என்று போய்க்கொண்டும் என்னால் முடிந்த சேவையைச் செய்துகொண்டும் இருக்கத் தொடங்கினேன். திடீரென நானும் SPCA உறுப்பினராகிவிட்டேன். நீங்கள் நினைக்கிற மாதிரி விலங்குவதைக்கு எதிரான அமைப்பல்ல அது. பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறபோது, இங்கே தனியாக வசிக்கிற எல்லாப் பெற்றோரும் இந்தச் சங்கத்தில் (Society Of Parents with Children Abroad) சேர்ந்துதானே ஆக வேண்டும். என் குழந்தைகள் என்னைவிட்டு ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவிலிருந்தாலும், 24 மணி நேரப் பயணத்தில் என்னிடம் வந்துவிடுவார்கள் என்ற தைரியத்துடன் இருந்தேன்.

திட்டங்களைப் புரட்டிப்போட்ட விபத்து

வீட்டை நடத்துவதில் சலிப்படைந்துவிட்டதால் சென்னைக்கு அருகில் உள்ள ஓய்வுபெற்றவர்க ளுக்கான குடியிருப்புக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன். பஜனைக் குழுவினருடன் சேர்ந்து பாடுவது, என் வயதினருடன் விளை யாடுவது, குழுவாகச் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பது எனப் பலவிதமான கனவுகளில் மூழ்கியிருந்தேன். அந்தக் கனவு சில மணி நேரத்தில் சிதைந்து விட்டது. எனக்கு மூன்றாம் ஹார்ட் அட்டாக் வந்தது. புதுக் குடியிருப்புக்கு மாறுவது, இந்த மாரடைப்பால் சிறிது தள்ளிப்போனது. அதனால் என்ன?

ஆனால், கரோனா என்ற பெயரில் அடுத்த அடி விழுந்தது. முடிவே இல்லாததுபோல் நீளும் இந்த ஊரடங்கு என்னைப் போலவே முதுமையில் தனித்து வாழும் பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த ஊரடங்கை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். உள்ளூரில் இருக்கும் பிள்ளைகள்கூட இந்த நேரத்தில் நம்மைச் சந்திக்க முடியாத நிலை. இது மனக்குழப்பத்தையும் உளைச்சலையும் தந்து தன்னம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இந்த விரக்தியும் அதைரியமும் உதவப்போவதில்லை. இதை முதியோர் சவாலாக எதிர்கொள்ள வேண்டும்.

முதியோரின் சவால்கள்

கரோனரி (இதயநோய்) சிகிச்சை சிறப்புப் பிரிவில் இருபது ஆண்டுகள் நான் பணியாற்றியிருக்கிறேன். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுக்கான மறுவாழ்வு மையத்தையும் நடத்தினேன். நிறைய நடுத்தர வர்க்க நோயாளிகள் மாரடைப்புக்குப் பிறகு, நீண்ட விடுப்பு எடுக்க முடியாத நிலையிலிருந்தார்கள். அவர்களுடைய சிக்கலையும் சேர்த்தே கவனிக்க வேண்டியிருந்தது. இது என்னை யோசிக்க வைத்தது. அதனால், அவர்களுக்கு நாள்தோறும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளும் தோன்றின.

இந்தச் சவால்கள் உடல் ரீதியானவை மட்டுமல்ல, மன ரீதியானவையும் கூட. முதியோருக்கான வழிகாட்டுதலில் மாடிப்படிகளில் கைப்பிடி அமைத்தல், வழுக்காத தரையை அமைத்தல் போன்ற ஆலோசனைகளே வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த கரோனா காலத் தனிமை என்பது இதுவரை நாம் எதிர்கொள்ளாத புதிய சிக்கல். நாம் இதுவரை அனுபவிக்காத கஷ்டங்கள், சமையல் உதவிக்கு ஆள் இல்லாதது, காய்கறி வாங்குவதில் சிக்கல், அண்டை வீட்டாரிடமிருந்தும் உறவினர்களிட மிருந்தும் உதவியைப் பெற மனத் தயக்கம் போன்றவை நமக்குப் புதியவை. சிக்கல்கள் இல்லையென்றால் வாழ்க்கை உப்புச்சப்பில்லாத சாப்பாடுபோல் ஆகிவிடும் அல்லவா? அதனால், கரோனாவையும் இதய நோயையும் சேர்ந்து வெல்லத் தயாராக வேண்டும்.

இதய நோயை வெல்வோம்

கரோனா கால நெருக்கடி, நம் இதயத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. ஆனால், சரியான திட்டமிடல் மூலம் இந்தச் சவால்களை எளிதாகக் கையாளலாம். மருத்துவமும் தத்துவமும் இணைந்த நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் கரோனா காலத்தில் இதயம் சார்ந்த பிரச்சினை களை நாம் நேர்த்தியுடன் எதிர்கொள்ளலாம். எப்படி?:

முக்கியமான தொலைபேசி எண்களை ஒரு தாளில் எழுதி, அது பிறரது பார்வையில் எளிதாகப் படும்படி வைக்க வேண்டும்.

நீங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் மருந்து - மாத்திரைகள், அவற்றின் அளவு, மருத்துவரின் பெயர், அவரது தொடர்பு எண் போன்றவற்றையும் தெளிவாக எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்.

குளியலறையில் உள்பக்கமாகத் தாழ்ப்பாள் போடுவதை நிறுத்த வேண்டும். வீட்டில் நம்மைக் கவனித்துக்கொள்ள யாராவது இருந்தால், குளிய லறைக்குச் செல்லும்முன் அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்வது நல்லது. அடிபட்டு ரத்தக் காயத்துடனோ உடைந்த எலும்புடனோ உள்பக்கமாகப் பூட்டப்பட்ட குளியலறையில் நாமும் தவித்து, நம்மை மீட்க வருகிறவர்களும் தவிப்பது கொடுமையல்லவா? எப்போதுமே வீட்டில் முதுமையானவர்கள் இருந்தால் குளியலறைக் கதவை வெளிப்பக்கமிருந்து திறக்கும்படி வடிவமைக்க வேண்டும்.

நீங்கள் ‘ஆஞ்சைனா’ (மார்பு வலி) பிரச்சினை உள்ளவராக இருந்தால், நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளும் அவசரக் கால மாத்திரைதான் உங்கள் சமயசஞ்சீவினி. இதைக் குளியலறை, சமையலறை உள்பட வீட்டின் எல்லா அறைகளிலும் எடுப்பதுபோல் வைத்திருங்கள். அது என்ன, எங்கே இருக்கிறது என்பதை வீட்டில் இருக்கிறவர்களும் பக்கத்து வீட்டுக்காரர்களும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட இரண்டாம் அட்டாக்குக்குப் பிறகு, நான் வெளியே சென்ற நாட்களில் காரில் ஏறியதுமே ஓட்டுநரிடம் ஒரு மாத்திரையைக் கொடுத்துவைப்பேன். அதெல்லாம் கரோனாவுக்கு முந்தைய காலம்.

எந்தச் செயல்பாட்டைச் செய்வது நமக்குக் கஷ்டம் என்பது குறித்து, நாம் மதிப்பிட்டுவைத்துக்கொள்ள வேண்டும். அது மூட்டு வலி, முதுகு வலி, இதய வலி என எந்தப் பிரச்சினையாகவும் இருக்கலாம். என்ன செய்தால் வலிக்கிறது என்கிற எல்லையைக் கவனத்துடன் கண்டறிய வேண்டும். அது எல்லையை மீறும் முன்பே செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

வீட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது இடையில் ஏதாவது தேவைப்படுவதை எடுக்க வேண்டுமா என்று பார்த்துவிட்டால், அதற்கென மீண்டும் ஒரு முறை நடந்துவரத் தேவையில்லை. போகிற வழியில் மூலைகளில் நாற்காலி அல்லது ஸ்டூலைப் போட்டு, வலி எல்லையைக் கடக்கும் முன்பே உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கென்று ஒரு அட்டவணையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நமக்குப் பிடித்த சின்ன சின்ன வேலைகளைச் செய்து எப்போதும் வேலையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். படுக்கை விரிப்பில் இருக்கும் கிழிசலையோ சமையலறைத் துண்டையோ தைக்கலாம். வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டே துண்டுத் துணிகளைக் கொண்டு நான் முகக்கவசங்களைத் தைப்பேன். பல வண்ண நூலால், அவற்றின் ஓரங்களை அழகுபடுத்துவேன். எங்கள் வீட்டைக் கடந்து செல்கிறவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்படி வாட்ச்மேனிடம் தந்து அனுப்புவேன். முடியாதபோது இந்த அட்டவணையை மாற்றிக்கொள்ளலாம்.

என் வீட்டைப் போலவே உங்களைச் சந்திக்க வருகிறவர்கள் தந்துசென்ற புத்தகங்களால் அலமாரி நிறைந்திருந்தால், மறுவாசிப்பில் திளைக்கலாம். நிகழ்காலம் நம் அனுபவத்தைச் சுருக்கியிருக்கும் இந்த நாட்களில், கடந்த காலத்துக்குள் சென்றுவருவதும் சுகம்தான்.

நீங்கள் கணினியில் தேர்ந்தவர் என்றால் பல சுவாரசியமான விஷயங்களை யூடியூபில் பார்க்கலாம், பாடல் கேட்கலாம். வார்த்தை விளையாட்டு போன்ற கணினி விளையாட்டுகளை முயலலாம். நம் உடல் தசைகளைப் பயிற்சி மூலம் ஆரோக்கியமாக வைத்திருப்பதுபோல் ‘மூளைத் தசை’களை இவை நல்ல நிலையில் வைத்திருக்கும். வார்த்தை விளையாட்டுகள், குறுக்கெழுத்துப் போட்டிகள் பெரிதும் உதவும்.

எல்லோரும் மனக்குழப்பத்திலும் அதைரியத் துடனும்தான் இருக்கிறார்கள். நாள்தோறும் ஒரு நண்பரிடமோ உறவினரிடமோ பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். கரோனா தவிர்த்த மற்ற விஷயங்களைக் குறித்துப் பேசலாம்.

மனச் சோர்வால் சாப்பிடுவது, அதுவும் சுவையாகச் சாப்பிடுவதில் அலட்சியம் ஏற்படும். என்ன சாப்பிடுவது எனத் திட்டமிடுவதே சிறந்த மனப் பயிற்சி. கரோனா காலத்தில் வீட்டில் இருப்பவற்றைக்கொண்டு சுவையாகச் சமைத்துச் சாப்பிடுவது அவசியம். கேட்டரிங் சர்வீஸை நம்பியிருக்கிறவர்கள் இரு வேறு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கினால், மாறுபட்ட சுவையுடன் உணவை ருசிக்கலாம்.

நம் மனத்தை உற்சாகமாக வைத்துக்கொண்டு நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அதை மனமுவந்து வழங்கலாம். சிலிண்டர் கொண்டுவந்து தருகிறவர், எலக்ட்ரீஷியன், மருத்துவப் பணியாளர்கள் போன்றவர்களும் நம்மைப் போல் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனுடனே அவர்கள் வேலையையும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சின்ன சிரிப்பு, ஒரு வணக்கம், நாலு வார்த்தை பேசுவது போன்றவற்றின் மூலம், அவர்கள் முகத்தில் புன்னகையை உருவாக்கலாமே. அவர்களுக்கு நேரம் வாய்த்தால் (நமக்குத்தான் நிறைய நேரம் இருக்கிறது), போதுமான தனி மனித இடைவெளியைப் பராமரித்தபடி சிறு உரையாடலிலும் ஈடுபட வேண்டும். இதுபோன்ற சின்ன மகிழ்ச்சியை நாமும் ஏற்படுத்திக்கொண்டு, பிறருக்கும் பரப்பலாம்.

நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்திருக்கிறோம், நம்மைப் பார்க்க யாரும் வரப்போவதில்லை, எதற்காக உடை மாற்றுவது என்ற எண்ணம் தவறு. எப்போதும் நைட்டியுடன் இருக்கத் தேவையில்லை. மனத்துக்குப் பிடித்த விதத்தில் தலையை வாரி, பொட்டிட்டு, கண்ணுக்கு மையிட்டு, நல்ல சேலை கட்டலாம். யாரும் பார்க்கவில்லையென்றாலும் கண்ணாடியில் நீங்களே பார்த்து ரசித்துக்கொள்ளுங்கள். மாலையிலும் இதைச் செய்யலாம். இது நம் மன உறுதியை அதிகரிக்கும்.

ரப்பர் மெத்தைபோல்...

இருட்டான குகைக்குள் இருக்கிறோம். தொலை வில் வெளிச்சம் தெரியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சில நேரம் அந்தக் குகையே இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பமும் ஏற்படுகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் முடிவு உண்டு. அது எப்போது, எப்படி என்பது மட்டும் இப்போது நமக்குத் தெரியவில்லை. என் வயதுடையோருக்கு இரண்டாம் உலகப் போரைப் பற்றி நினைவிருக்கலாம். அது இப்படித்தான் முடியும் என்றொரு எதிர்பார்ப்பு இருந்தது.

இப்போது ஏற்பட்டிருக்கும் பேரிடர் எப்போது, எப்படி முடியும் என்று யாருக்கும் தெரியாது. நடுமுதுகில் ஏற்பட்டிருக்கும் நமைச்சலைப் போல நம்மால் சொரிந்துகொள்ளவும் முடியாது, அதை அலட்சியப்படுத்தவும் முடியாது. அது தானாகவே போய்விடுவதுபோல், இதுவும் கடந்துபோய்விடும். இது நம்மை வீழ்த்தக் கூடாது என்கிற தன்னம்பிக்கை வேண்டும். அழுத்தத்துக்கு வளைந்துகொடுத்து பளு நீங்கியதும், பழைய வடிவத்துக்கு மீண்டுவிடும் ரப்பர் மெத்தையைப் போல் நாம் இருக்க வேண்டும். மனத்தெம்பும் தைரியமும் திட்டமிடலும் இருந்தால் அது கரோனாவோ, இதயச் சிக்கலோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக அதிலிருந்து மீள முடியும்.

தொகுப்பு: ப்ரதிமா

(தற்போது 85 வயதாகும் டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்).

தொடர்புக்கு: joenitya@yahoo.com

நன்றி: www.patientsengage.com
(நோயாளிகளுக்கும் அவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்களுக்கும் வழிகாட்டும் இணையதளம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்